shadow

vipசினிமாவில் சர்ச்சைக்குரிய கருத்துகளை புறக்கணித்துவிட்டு ஆக்கபூர்வமான வசனங்களை கொண்டு வர திரையுலகினர் முயற்சி செய்யவேண்டும் என சென்னை ஐகோர்ட்டு கருத்து கூறியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தர்கள் எஸ்.துரைராஜ், எஸ்.பாண்டுரங்கன், ஏ.பழனிவேலு, கே.அருணாசலம் ஆகியோர் வேலையில்லா பட்டதாரி படத்தின் சர்ச்சைக்குரிய வசனம் குறித்து ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் “ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படித்ததால்தான் என்னால் ஆங்கிலத்தில் சரளமாக உரையாட முடியவில்லை. அதனால் என்னால் வேலைக்கான நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற முடியவில்லை” என்று தந்தையிடம் படத்தின் நாயகன் தனுஷ் பேசுவதாக ஒரு வசனம் உள்ளது.

இந்த வசனத்தால் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் அளித்து வரும் கல்வியை தாழ்வாக சிந்திக்கச்செய்கிறது. இதுகுறித்து மத்திய தணிக்கைத் துறைக்கு கடந்த மாதம் ஆகஸ்டு 5–ந் தேதி நோட்டீசு அனுப்பி, அந்த வசனத்தை நீக்கும்படி கூறியிருந்தோம். இந்த நோட்டீசுக்கு ஆகஸ்டு 11–ந் தேதி பதில் அளிக்கப்பட்டது. அந்த பதில் திருப்தி அளிக்கவில்லை. அந்த வசனத்தை நீக்கும்படி தயாரிப்பாளரிடம் கூறியதாகவும், ஆனால் அவர் அதை நீக்கவில்லை என்றும் பதிலளிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த வசனத்தை நீக்க உத்தரவிட வேண்டும்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், ‘சர்ச்சைக்குரிய வசனத்தை படக்குழுவினர் கண்டிப்பாக நீக்கியிருக்க வேண்டும். ஆனாலும் இந்த விஷயத்தை பெரிதுபடுத்தி நாமே அந்த படத்திற்கு விளம்பரம் தேடிக்கொடுக்கும் நிலை வந்துவிடக்கூடாது. வசனத்தை நிக்கவேண்டும் என எதிர்ப்பதைவிட அதை புறக்கணித்துவிட்டால் அதன் நினைவுகள் அகற்றப்பட்டுவிடும். இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி நோட்டீசு அனுப்பி, தேவையில்லாத விளம்பரத்தைக் கொடுத்து, மீண்டும் அந்த படத்தை தியேட்டரில் ஓடச்செய்ய நான் விரும்பவில்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply