shadow

 secretarietபுதிய தலைமை செயலகக் கட்டடம் கட்டியதில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட புகாரில் தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் விசாரணை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், கருணாநிதி முதல்வராக இருந்தபோது புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது. அந்த கட்டிடம் கட்டியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி, ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையில் விசாரணை கமிஷனை ஒன்றை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதன்பின்னர் புதிய தலைமை செயலகம் குறித்து ஆய்வு செய்த ரகுபதி குழுவினர், பல்வேறு கட்டமாக விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியது.

இந்த சம்மனுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாநிதி சார்பில் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு விசாரணைக்கு வந்தபோது, இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை தலைமை செயலக வழக்கு தொடர்பான விசாரணையை நீதிபதி ரகுபதி ஆணையம் மேற்கொள்ளாது என ரகுபதி தரப்பு வழக்கறிஞர் கூறினார். இதன் பிறகு இந்த மனு விசாரணைக்கு வரவில்லை.

இந்நிலையில், ரகுபதி மீண்டும் ஒரு உத்தரவை வெளியிட்டார். அதில், ஐகோர்ட்டில் சம்பந்தப்பட்ட மனு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. அந்த மனு மீதான விசாரணை காலதாமதம் ஆவதால் புதிய தலைமை செயலகம் கட்டடம் தொடர்பான விசாரணையை நிறுத்தி வைக்க முடியாது. எனவே, இந்த விசாரணையை மீண்டும் தொடங்குவதாகவும் இந்த  வழக்கில் சம்பந்தப்பட்ட கருணாநிதியும் நேரில் ஆஜராக வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து கருணாநிதி சார்பில் மீண்டும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சிவஞானம், கருணாநிதியை விசாரிக்க தடை விதித்ததோடு, வழக்கு விசாரணையை ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Leave a Reply