shadow

பொது இடங்களில் புகை பிடிப்பதற்கான தடை சட்டத்தை முறையாக பின்பற்றாதது ஏன் ? சென்னை ஐகோர்ட் கேள்வி

smokeபொது இடங்களில் புகை பிடிக்கக்கூடாது என்ற சட்டம் அமலில் இருந்தும் அது முறையாக பின்பற்றாதது ஏன் என் சென்னை ஐகோர்ட் கேள்வி கேட்டுள்ளதோடு இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் 2 நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த சரத் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பொது இடங்களில் புகைப்பிடிக்கக் கூடாது என்ற விதிகளை மீறி, தனது நிறுவனத்தின் அருகே உள்ள டீ கடையில் புகை பிடிக்க பலர் வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
பள்ளிகள் இருக்கும் இடத்திலிருந்து 100 மீட்டர் வரை புகைப் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டும், அதை மீறி கடைகளில் சிகரெட் விற்பனை செய்யப்படுவதாகவும் மனுவில் அவர் கூறியிருந்தார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு பொது இடங்களில் புகை பிடிக்க தடை சட்டம் கொண்டு வரப்பட்டும், பலர் விதிகளை மீறி வருவதாகவும், இதுகுறித்து புகார் மனு அளித்தும், சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றும், தனது மனுவில் சரத் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நேற்று சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, ‘சமூகத்தை பாதிக்கும் இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை இருந்தும், முறையாக அமல்படுத்தவில்லை. இது தொடர்பாக சுகாதார துறை செயலரையும், காவல்துறை டிஜிபியையும் தானாக முன் வந்து இந்த வழக்கில் எதிர்மனுதாராக சேர்க்கின்றேன். மேலும் இது தொடர்பாக இருவரும் 2 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்’ என்று நீதிபதி கிருபாகரன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply