shadow

சண்டி வீரன். திரைவிமர்சனம்

chandiveeranபொதுவாக கிராமத்து கதை என்றாலே இரண்டு கிராமங்களுக்கு இடையே நடைபெறும் சண்டையத்தான் பெரும்பாலான படங்களில் பார்த்திருக்கின்றோம். அதேபோல் இந்த படத்திலும் இரண்டு கிராமங்கள் மோதிக்கொண்டாலும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்திருப்பதால் இம்முறை சற்குணம் வெற்றி பெற்றுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

வயல்வெளி என்றொரு அழகான கிராமம். அந்த ஊரில் எதற்குமே பயன்படாமல் ஒரு குளம் இருக்கின்றது. ஆனால் அந்த குளத்தில் இருந்துதான் பக்கத்து கிராமமான ‘நெடுவெளி’ என்ற கிராமத்திற்கு தண்ணீர் செல்கிறது. அந்த குளத்தை மீன்பிடிக்க குத்தகைக்கு எடுக்கும் லால், பக்கத்து ஊருக்கு தண்ணீர் கொடுக்க மறுக்கின்றார். இதனால் இரு கிராமங்களுக்கும் இடையே பகை வருகிறது.

இந்த பகையில் வயல்வெளி கிராமத்தின் தலைவரை நெடுவெளி கிராமத்தினர் கொலை செய்ய முயற்சிக்க, இதனால் இரு கிராமங்களுக்கும் இடையே பகை வளர்கிறது. இந்நிலையில் லால், மகளை அதர்வா காதலிக்கின்றார். இந்த காதலை தெரிந்து கொள்ளும் லால், தன்னுடைய மகளை மறந்துவிட்டு ஊரைவிட்டு சென்றுவிடும்படி மிரட்டுகிறார். அந்த மிரட்டலுக்கு பயப்படாத அதர்வா, கண்டிப்பாக ஆனந்தியைத்தான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதமாக இருக்கின்றார். இந்நிலையில் மீண்டும் இரு கிராமங்களுக்கும் இடையே சண்டை வருகிறது. இந்த கலவரத்தில் தனது மகளை காதலிக்கும் அதர்வாவை கொலை செய்ய முடிவு செய்கிறார் லால். இதை தெரிந்து கொண்ட அதர்வா பக்கத்து கிராமத்திற்கு தண்ணீரும் கிடைக்க வேண்டும், அதே நேரத்தில் தன்னுடைய காதலிலும் ஜெயிக்க வேண்டும் என அதிரடி திட்டம் தீட்டுகிறார். அந்த திட்டம் வெற்றி பெற்றதா? என்பதுதான் கிளைமாக்ஸ்

பாணா காத்தாடி முதல் இரும்புக்குதிரை வரை அதர்வா, தன்னுடைய நடிப்பை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி கொண்டே வருகிறார். இந்த படத்தின் மூலம் நிச்சயம் வெற்றி கதாநாயகர்களின் வரிசையில் அவர் இணைந்துள்ளார். காதல், காமெடி, ஆவேசம் என அனைத்தையும் ஒரே படத்தில் வெளிப்படுத்தும் வாய்ப்பை அவருக்கு பாலாவும், சற்குணமும் கொடுத்ததற்காக அவர்களுக்குத்தான் அதர்வா நன்றி சொல்ல வேண்டும்

கயல் படத்தில் பெரும்பாலான காட்சிகளில் சோகமாக வந்த ஆனந்தி, இந்த படத்தில் கலகலப்பாக வருகிறார். இளம்பெண்ணுக்கே உரிய சேட்டை, துள்ளல், அதர்வாவிடம் காதலை முதலிலேயே சொல்லாமல் ஏமாற்றுவது என படம் முழுவதும் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளார். இருப்பினும் இவர் படத்தின் மெயின் கதையுடன் இணையாதது ஒரு மைனஸ்தான்

இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கும் லால், கிட்டத்தட்ட சண்டக்கோழி படத்தின் கேரக்டர் போலவே நடித்துள்ளார். பக்கத்து ஊருக்கு ஒரு சொட்டு தன்ணீர் தர மாட்டேன் என்ற பிடிவாத குணத்தில் அவருடைய நடிப்பு ஓகே. ஆனால் கிளைமாக்ஸில் சொதப்பி விட்டார் என்றே சொல்ல வேண்டும்.

கிராமத்து கதையாக இருந்தாலும் அதை கையாண்ட விதம் சூப்பர். ஒரு முக்கிய விஷயத்தை அதுவும் தண்ணீர் பிரச்சனையை எடுத்து கொண்ட சற்குணம், கதையை சிதறவிடாமல் மிகச்சரியான காட்சிகளால் படத்தை நகர்த்தியுள்ளார். இருப்பினும் கிளைமாக்ஸ் கொஞ்சம் இழுத்தடித்துவிட்டார். ஊர்மக்களை அதர்வா திருத்தும்போதே படத்தை முடித்திருக்கலாம். அதன்பின்னர் தேவையில்லாம படத்தை இழுத்தடித்துள்ளார் என்றே தோன்றுகிறது.

அருணகிரியின் இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளது. பின்னணி இசையும் ஓகே. ஒளிப்பதிவு எடிட்டிங் ஆகியவை கச்சிதம். மொத்தத்தில் சண்டி வீரன், நொண்டி வீரன் அல்ல…

Leave a Reply