பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்புத்துறை மந்திரி பதவி வகித்தவர் சிஸ்ராம் ஓலா (வயது 86).

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர், சமீப காலமாக பல்வேறு உடல் நலக்கோளாறுகளால் அவதிப்பட்டு வந்தார். இதனால் சிகிச்சைக்காக டெல்லியை அடுத்த குர்கானில் உள்ள மேதாந்தா மெடிசிட்டி மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிஸ்ராம் ஓலா கண் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். குடல் அறுவை சிகிச்சையும் நடந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3.40 மணிக்கு சிஸ்ராம் ஓலா மரணம் அடைந்தார். அப்போது அவரது குடும்பத்தினர் அருகில் இருந்தனர். பின்னர் சிஸ்ராம் ஓலாவின் உடல் டெல்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் சிஸ்ராம் ஓலாவின் இல்லத்துக்கு சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறினார்கள். மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சிஸ்ராம் ஓலா அர்ப்பணிப்பு மனப்பான்மை கொண்ட சமூக சேவகர் என்றும், அவரது மறைவின் மூலம் மதிப்பு மிக்க சகா ஒருவரை இழந்து விட்டதாகவும் கூறி உள்ளார்.

சிஸ்ராம் ஓலாவின் மறைவு மிகுந்த துயரம் அளிப்பதாகவும், காங்கிரஸ் கட்சியும், தேசமும் ஒரு சிறந்த தலைவரை இழந்து விட்டதாகவும் சோனியா காந்தி தனது இரங்கல் செய்தியில் கூறி இருக்கிறார்.

துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரபல அரசியல் தலைவராக விளங்கிய சிஸ்ராம் ஓலா மக்களுடன் நெருக்கமாக பழகியவர் என்றும், அவரது மறைவு மிகுந்த துயரம் அளிப்பதாகவும் கூறி உள்ளார்.

ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியாவும் இரங்கல் தெரிவித்துள்ளார். “சிஸ்ராம் ஓலாவின் மரணம், ராஜஸ்தான் மாநில அரசியலில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது. சமூகத்துக்கு அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு” என அவர் கூறி உள்ளார். மேலும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் மத்திய அமைச்சரவை நேற்று அவசரமாக கூடி, சிஸ்ராம் ஓலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.

சிஸ்ராம் ஓலாவின் இறுதிச்சடங்கு ராஜஸ்தான் மாநிலம், ஜுன் ஜுனுவில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் இன்று நடைபெறுகிறது. இறுதிச்சடங்கில் அனைத்து கட்சி பிரமுகர்களும் கலந்துகொள்கின்றனர்.

சிஸ்ராம் ஓலா, ராஜஸ்தானில் 1927-ம் ஆண்டு, ஜூலை 30-ந் தேதி பிறந்தவர். பிரபலமான ‘ஜாட்’ இன தலைவராக திகழ்ந்தார். ஆரம்பத்தில் ராணுவத்தில் பணியாற்றி, பின்னர் அரசியலுக்கு வந்தார். அரை நூற்றாண்டுக்கும் மேலாக பொதுவாழ்வில் இருந்தார்.

1957-ம் ஆண்டு முதல் 1990 வரை தொடர்ந்து 33 ஆண்டுகள் மாநில சட்டசபை உறுப்பினராக இருந்தார். 1980 முதல் 1990 வரை மாநில அரசில் கேபினட் மந்திரி பதவி வகித்தார். 1996-ம் ஆண்டில் இருந்து 2013 வரை தொடர்ந்து 17 ஆண்டுகள் ஜுன் ஜுனு தொகுதி எம்.பி.யாக இருந்தார்.

மத்திய அமைச்சரவையில் உரம் மற்றும் ரசாயனங்கள் துறை, நீர்வளத்துறை, சுரங்கத்துறை என பல்வேறு துறைகளுக்கான மந்திரி பதவி வகித்தார். கடைசியாக கடந்த ஆண்டு முதல் தொழிலாளர் நலன், வேலை வாய்ப்புத்துறை மந்திரி பதவி வகித்து வந்தார். சமூக சேவைக்காக 1968-ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *