shadow

PreviewSlab1கட்டிடத் துறை எதிர்கொள்ளக் கூடிய சாவல்களுள் ஒன்று கட்டுமானப் பொருள்களின் விலையேற்றம்; முக்கியமாக சிமெண்ட். கடந்த சில பத்தாண்டுகளில் பல முறை சிமெண்ட் விலை உயர்ந்திருக்கிறது. சிமெண்ட் தயாரிப்புக்கான பகுதிப் பொருள்களின் தட்டுப்பாடு, விலையேற்றத்துக்கான காரணங்களில் பிரதானமானதாகச் சொல்லப்படுகிறது.

விலையேற்றம் தவிர்க்க முடியாததுதான். ஆனால் முறையானதாக இருக்க வேண்டும். சிமேண்ட் விலையைப் பொருத்தமட்டில் விலையேற்றம் முறையானதாக இருக்கிறதா என்பது கேள்விதான் என்கின்றனர் கட்டுமானத் துறையினர்.

இப்போது மும்பையில் சிமெண்ட் விலை திரும்பவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கட்டுநர்களின் அமைப்பான கிரடாய், சிசிஐ-க்கு (CCI-Competition Commission of India) இந்தப் பிரச்சினையை எடுத்துச் சென்றுள்ளது. இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து சிமெண்ட் தயாரிப்புக்கான பகுதிப் பொருள்களின் விலை தொடர்ந்து குறைந்த வண்ணம் உள்ளது. அப்படியிருந்தும் சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டிருப்பது முறையானது அல்ல என கிரடாய் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த விஷயத்தில் சிமெண்ட் தயாரிப்பாளர்கள் கூட்டாகச் சேர்ந்து சிமெண்ட் விலையை ஏற்றுவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. கடந்த சில மாதங்களுக்குள் பல நகரங்களில் சிமெண்ட் விலை 20-40 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

கிரடாய் அமைப்பின் தமிழகப் பிரிவின் நிர்வாகக் குழு உறுப்பினரும் அக்ஷயா ஹோம்ஸின் நிறுவனருமான சிட்டிபாபு, “கிரடாய் அமைப்பின் இந்த நடவடிக்கை சரியானது. குறைந்த தேவையுள்ளபோது தொடர்ந்து சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையிலேயே பார்த்துக்கொண்டால் ரூ. 350 கிடைத்த சிமெண்ட் விலை கிட்டதட்ட ரூ.420வரை உயர்ந்துள்ளது.சிசிஜ-க்கு இந்த விவகாரம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதால் விசாரணைக்குப் பிறகுதான் என்னவிதமான தீர்வு கிடைக்கும் எனத் தெரியவரும்” என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் சிமெண்ட் விலை உயர்வுக்கு மும்பை சிமெண்ட் விநியோஸ்தர்கள் சங்கம் தங்களது இணையப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. பகுதிப் பொருள்களைக் கொண்டு வருவதற்கான கூட்ஸ் வண்டிகள் சரிவரக் கிடைக்காததால் தயாரிப்பு நிறுவனங்கள் சிமெண்ட் விலை உயர்த்தியுள்ளதாக அந்த அறிக்கையில் காரணம் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2012-ம் ஆண்டு இதுபோல முறையற்றவகையில் சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டதற்காக சிசிஐ 11 சிமெண்ட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு 6300கோடி ரூபாய் அபராதம் விதித்தது. இந்நிலையில் கிரடாய் எடுத்துச் சென்றிருக்கும் இந்த விவகாரத்தின் விசாரணை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலையேற்றம் தொடர்ந்து ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானச் சந்தையைப் பாதித்து வருவதாகச் சொல் கிறார் கோவைப் பொறியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஆத்தப்பன் பழநி. மேலும் அவர் இது குறித்துச் சொல்லும்போது, “இந்தப் பிரச்சினை நீண்ட நாளாகவே இருந்து வருகிறது. இதற்காக நாங்கள் பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். சிமெண்ட் விலையைக் கட்டுப்படுத்தத் தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. ஆனால் எதுவும் சாத்தியப்படவில்லை. சிமெண்ட் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அரசு தங்கள் சுய லாபத்துக்காக சிமெண்ட் தயாரிப்பு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் பெரிய பெரிய கட்டுநர்களைவிட சாதாரண மக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர்” என்கிறார்.

மும்பை சிமெண்ட் விலை உயர்வு மற்ற நகரங்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது. குறைந்த தேவை உள்ள நகரங்களில் சிமெண்ட் விலை 20 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அத்துறை அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே வழிகாட்டி மதிப்பு உயர்வு, கட்டுமானப் பொருள்கள் விலையேற்றம் ஆகியவற்றால் கட்டுமானத் துறை திண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில் சிமெண்ட் விலை உயர்வு மேலும் பின்னடவைத் தரும். இதை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.

சிசிஐ (Competition Commission of India) 2002-ம் ஆண்டு கம்படிஷன் சட்டத்தின் படி அமைக்கப்பட்ட ஆணையம். ஏகபோக, முறையற்ற தொழில் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. 2003, அக்டோபர் 14-ம் தேதி இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் 2009 மே மாதத்தில்தான் இந்த ஆணையம் செயல்படத் தொடங்கியது. இந்திய ஆட்சிப் பணித் துறை அதிகாரியான அசோக் சல்வா இதன் தலைவராக இருக்கிறார். முதலின் இந்த ஆணையம் வெங்காய விலை உயர்வு குறித்து 2010-ம் ஆண்டு விசாரணை நடத்தியது. 2013-ம் ஆண்டு கட்டுமான நிறுவனமான டிஎல்ஃப் அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்ட ஒப்பந்தத்தில் மாற்றம் கொண்டு வந்தது. விற்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பின் கட்டப்படாத இடம் அந்தக் குடியிருப்பை வாங்கி அனைவருக்கும் சொந்தமானது உள்ளிட்ட பல முன்னுதாரணத் தீர்ப்பை அளித்தது.

சிட்டிபாபு – ஆத்தப்பன் பழநி

Leave a Reply