shadow

டெல்லி முதல்வரின் புதிய கார் கட்டுப்பாட்டுக்கு மத்திய அமைச்சர் உமாபாரதி வரவேற்பு

aravindடெல்லியில் மிக அதிகமான கார்கள் பயன்படுத்தப்படுவதால் அதிலிருந்து வெளிவரும் புகையினால் சுற்றுச்சூழல் மாசு அடைகிறது என விஞ்ஞானிகளும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். இதன்படி வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் டெல்லியில் ஒரு நாள் ஒற்றை இலக்க பதிவு எண் கார்களும், அடுத்த நாள் இரட்டை இலக்க பதிவு எண் கார்கள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வி.ஐ.பிக்களுக்கு மட்டும் விதிவிலக்கு என கூறப்பட்டுள்ளது. முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் மத்திய இணை அமைச்சரான உமா பாரதியும் கட்சிக்கு அப்பாற்பட்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று உமாபாரதி பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “‘சுற்றுச்சூழல் கெடுவதை தடுக்கும் பொருட்டான அறிவிப்பு இது. எனவே, இந்த விஷயத்தில் நான் டெல்லி முதல் அமைச்சருக்கு கட்சிக்கு அப்பாற்பட்டு ஆதரவளிக்கிறேன்.’ எனத் தெரிவித்தார்.

இதில் விஐபிக்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவது குறித்த கேள்விக்கு உமா, ‘தன் அலுவலகப் பணிக்காக செல்லும் விஐபிக்களுக்கு விலக்கு அளிக்கப்பதில் தவறு எதுவும் இல்ல. ஏனெனில், அவர்களுக்கு ஏற்படும் தாமதத்தால் அரசிற்கு பல லட்சம் ரூபாய் வீணாகி விடுகிறது. ஆனால், அந்த விஐபிக்கள் தம் சொந்த பணியில் செல்லும் போது விலக்களிக்கக் கூடாது’ என்று கூறியுள்ளார்.

இதனிடையே இந்த திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பொது நல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

Leave a Reply