சர்க்கரை நோயாளிகள், சுகாதாரமற்ற இடத்தில் வசிப்பவர்கள், உணவு கட்டுப்பாடில்லாதவர்கள், உடல் உழைப்பில்லாதவர்கள், அடிக்கடி தொற்றுநோய்க்கு ஆளாகுபவர்கள் மற்றும் புகைப்பிடிப்பவர்களுக்கு அடிக்கடி கட்டிகள் உண்டாகின்றன.
லேசான வீக்கமாக ஆரம்பித்து அதில் தடிப்பு, வலி, எரிச்சல் ஆகியன தோன்றி பின் கட்டியாக மாறும், இது போன்ற தோல் மற்றும் சதை கட்டிகள் வளர்ந்து உடைவதற்கு பல நாட்களாவதுடன் அந்த நாட்கள் வரை வலி, சுரம், நெறிகட்டுதல் போன்ற பல தொல்லைகளையும் ஏற்படுத்துவதால் கட்டிகளை உடனே உடைத்து அவற்றை ஆற்றும் நோய் எதிர்ப்பு தன்மையுள்ள மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் கட்டியில் தோன்றும் சீழ் பிற இடங்களில் பரவுவதற்கு வாய்ப்புண்டு. கட்டியை எளிதாக பழுக்கச் செய்து உடைக்கும் அற்புத ஆற்றலுடையது மட்டுமன்றி வறண்ட பகுதிகளில் கூட செழித்து, வளர்ந்து காணப்படும் எளிய மூலிகைதான் சப்பாத்திக்கள்ளி. ஒபன்சியா டிலேனி என்ற தாவரவியல் பெயர் கொண்ட கேக்டேசியே குடும்பத்தைச் சார்ந்த சப்பாத்திக்கள்ளியின் தண்டுகளே இலைகளாக மாற்றுரு கொண்டுள்ளன.
இதன் இலைகளில் ஏராளமான அளவு நீர்ச்சத்தும், ஆர்பினோகேலக்டன், குர்சிட்டின் மற்றும் பிளேவனால்கள் போன்ற வேதிச்சத்துக்களும் காணப்படுகின்றன. இவை கிருமிகளை அழித்து ரத்தக் கட்டிகளை கரைக்கும் தன்மையுடையவை. முட்களுள்ள சப்பாத்திக்கள்ளியின் இலைத்தண்டை பிளந்து, வெளிப்புறமுள்ள முட்களை நீக்கி, உட்புறமாக சிறிது மஞ்சளை தடவி, அனலில் வாட்டி, கட்டிகளின் மேல் இறுக்கமாக கட்டி வைத்து வர ஆரம்ப நிலையிலுள்ள கட்டிகள் விரைவில் உடைந்து புண் எளிதில் ஆறும். புண் ஆற தாமதமானால் மஞ்சளை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வர விரைவில் குணமுண்டாகும்.
Leave a Reply
You must be logged in to post a comment.