shadow

ஜி.வி.பிரகாஷின் ‘புரூஸ்லீ’. திரைவிமர்சனம்

நன்றாக இசையமைத்து கொண்டிருந்த ஜி.வி.பிரகாஷ் ஏன் நடிக்க வந்தார் என்பதை புரிந்து கொள்வதற்குள் அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்கள் வெளிவந்து வந்த வேகத்தில் திரும்பி கொண்டிருக்கின்றது. ‘டார்லின்’ என்ற ஒரு படம் தப்பித்தவறி ஓடியதற்காக அவரை நோக்கி இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் செல்வது தான் வேடிக்கையிலும் வேடிக்கை. ஒரு கதாநாயகனுக்குரிய எந்த ஒரு தகுதியும் இல்லாமல் நடிக்க வந்துள்ள ஜி.வி.பிரகாஷ் இனிமேலாவது இசையில் மட்டும் கவனம் செலுத்தினால் அவருக்கும் நமக்கும் நல்லது.

ஜி.வி.பிரகாஷூம், பாலா சரவணனும் வழக்கம்போல் நண்பர்கள், ஆளுக்கு ஒரு காதலியுடன் ஊர் சுற்றுகின்றனர். பயந்தாங்கொள்ளியான ஜி.வி.பிரகாஷுக்கு ஒரு கேமிரா கிடைக்கின்றது. அந்த கேமிரா மூலம் ஒரு கொலையை படம்பிடித்து போலீசில் ஒப்படைக்கின்றனர். இதனால் ஏற்படும் விளைவுகள்தான் மீதி கதை.

கதையில் கொலை, போலீஸ் என்று வருகிறது என்பதற்காக இந்த படத்தை யாரும் ஆக்சன் படம் என்று நினைத்துவிட வேண்டாம். இதுவொரு காமெடி படம் என்று இயக்குனரே கூறுகிறார். ஆனால் காமெடிதான் இல்லை. சொதப்பலான திரைக்கதை, சிரிக்க வைக்காத காமெடி, ஜி.வி.பிரகாஷின் ஒரே மாதிரியான நடிப்பு என்று படம் முழுவதும் ஒரே சொதப்பல்

நாயகி கீர்த்தி கர்பந்தா கிளாமருக்கு பயன்படுத்தப்பட்டுள்ளார். பாலா சரவணன், மன்சூர் அலிகான், முனிஷ்காந்த், ஆனந்த்ராஜ் என ஆங்காங்கே தெரிந்த முகம் வந்தாலும் யாரையும் உருப்படியாக இயக்குனர் பயன்படுத்தவில்லை. மொட்டை ராஜேந்திரனின் காமெடி காட்சிகள் மட்டும் ஆறுதல்

நடிப்பில் முழு கவனம் செலுத்திவிட்டதால் இசையிலும் கொட்டை விடுகிறார் ஜி.வி.பிரகாஷ். ஒரு பாடல் கூட தியேட்டரை விட்டு வெளியே வந்தவுடன் மனதில் நிற்கவில்லை. படமே டோட்டல் சொதப்பல் என்கிற நிலையில் ஒளிப்பதிவு, எடிட்டிங் பற்றியெல்லாம் பேசவே தேவையில்லை.

தியேட்டரில் வந்து படம் பாருங்கள் என்று திரையுலகினர் பொதுமக்களுக்கு அறிவுரை கூறுகின்றனர். நீங்கள் முதலில் உருப்படியான படம் எடுங்கள், அப்புறம் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பது குறித்து மக்கள் பரிசீலனை செய்வார்கள். இந்த படத்தையெல்லாம் 50 ரூபாய் கொடுத்து திருட்டுடிவிடியில் பார்த்தால் கூட அந்த 50 ரூபாய் வேஸ்ட்தான்

Leave a Reply