தமிழக அமைச்சர்கள் 3 பேருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லை அடுத்த காவேட்டிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், 3 அமைச்சர்களை குறி வைத்து தாக்குவோம், 25 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளி, கல்லூரிகளிலும், பேருந்து நிறுத்தங்களிலும் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அளிக்காவிட்டால், தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கமணி, உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன், மற்றொரு அமைச்சர் சம்பத் ஆகியோர் குறி வைத்து தகர்க்கப்படுவார்கள். அப்போதுதான் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எங்களை பற்றி தெரியும்.

100 பேர் கொண்ட குழுவாக செயல்படும் எங்களின் வலிமையை அரசுக்கு விரைவில் உணர்த்துவோம். வரும் 25 ஆம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளி, கல்லூரிகள், பேருந்து நிறுத்தங்களிலும் குண்டுகள் வெடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கடிதத்தின் இறுதி பகுதியில் “இப்படிக்கு அல் கெய்தா தீவிரவாதி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் பெயரில் கடிதம் வந்ததால், அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகிகள் நாமக்கல் எஸ்.பி. கண்ணம்மாளிடம் அதை ஒப்படைத்தனர். நாமக்கல் ஆய்வாளர் செல்லமுத்து மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளியில் 2 மணி நேரம் சோதனை செய்தனர். ஆனால், எதுவும் சிக்கவில்லை.

கடந்த 21 ஆம் தேதி மாலை, நாமக்கல் தலைமை தபால் நிலையத்தில் இருந்து இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடிதத்தில் இடம் பெற்றுள்ள ஒரு சில எழுத்துகள் கிறுக்கலாக உள்ளன. இதுகுறித்து நாமக்கல் டிஎஸ்பி ராஜேந்திரன் கூறுகையில், பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது உண்மை. விசாரணை நடந்து வருவதால் வேறு எதுவும் கூறு முடியாது என்றார்.

முன்னாள் மாணவர்கள், கடிதம் வந்த அன்று பள்ளிக்கு வராத மாணவர்கள், நாமக்கல் தபால் நிலையத்துக்கு சந்தேகம் அளிக்கும் வகையில் வருபவர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த மிரட்டலை அடுத்து, தமிழக உயர் கல்வி துறை பழனியப்பனுக்கு சொந்த ஊரான தர்மபுரி மோலையானூர் வீட்டு பகுதியில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிபாளையத்தில் உள்ள அமைச்சர் தங்கமணியின் வீட்டுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply