shadow

black moneyகருப்பு பண விவகாரம் தொடர்பான விசாரணையை மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று வருமான வரித் துறைக்கு மத்திய நேரடி வரிகள் ஆணையம் கெடு விதித்துள்ளது.

சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதுதொடர்பாக மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி சில ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரவிட்டனர்.

அதன்படி உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.பி. ஷா தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவில் சிபிஐ இயக்குநர், மத்திய நேரடி வரிகள் ஆணையர், அமலாக்கத் துறை ஆணையர் உட்பட பல்வேறு துறைகளின் தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த பல மாதங்களாக சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

எச்.எஸ்.பி.சி. பட்டியல்

சுவிட்சர்லாந்து வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்கள் விவரங்களை அளிக்க மறுத்துவருவதால் கருப்பு பண விசாரணையில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதனிடையே சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் செயல்படும் எச்.எஸ்.பி.சி. வங்கி வாடிக்கை யாளர்களின் விவரங்களை அந்த வங்கியின் முன்னாள் ஊழியர் ஹெர்வி பால்சி யானி என்பவர் ரகசியமாக பதிவு செய்து பிரான்ஸ் அரசிடம் அளித்தார். அப்பட்டியலை இந்தியாவிடம் பிரான்ஸ் அரசு அளித்தது. அதில் 627 இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளன. அந்தக் கணக்குகளில் மொத்தம் ரூ.4479 கோடி உள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் அப்பட்டியல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மார்ச் 31-ம் தேதிக்குள் கருப்பு பணம் தொடர்பான விசாரணையை முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த காலக்கெடு முடிய இன்னும் இரண்டரை மாதங்கள் மட்டுமே உள்ளன. எனவே எச்.எஸ்.பி.சி. வங்கிக் கணக்கு விவரம் தொடர்பான விசாரணையை விரைந்து முடிக்குமாறு வருமான வரித் துறைக்கு மத்திய நேரடி வரிகள் ஆணையம் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து அந்த ஆணைய வட்டாரங்கள் கூறியபோது, கருப்பு பண விசாரணை தொடர்பாக சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் வளைகுடா நாடுகளிடம் இருந்து பல்வேறு தகவல்களை கோரியுள்ளோம், அவை தொடர்பான விசாரணையை விரைவுபடுத்துமாறும் மார்ச் 31-க்குள் விசாரணையை முடிக்குமாறும் வருமான வரித் துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளோம் என்று தெரிவித்தன.

Leave a Reply