shadow

 modi vs soniaகாங்கிரஸ் அரசின் முக்கிய திட்டங்களை காப்பியடித்து அவற்றை மோடி முலாம் பூசி பாரதிய ஜனதா அரசு செயல்படுத்தி வருவதாக   காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று டெல்லியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, “கடந்த மே மாதத்தில் பொதுமக்களின் நன்மைகளுக்காக செயல்படுத்த வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் அரசின் திட்டங்களை பாரதிய ஜனதா அரசு, மோடி முலாம் பூசி அதை தற்போது செயல்படுத்தி வருகின்றது. தற்போது பாஜக அரசு அறிவிக்கும் திட்டங்கள் எல்லாம் காங்கிரஸிடம் இருந்து திருடியவை. இருப்பினும் எந்த ரூபத்தில் செயல்பட்டாலும், மக்களுக்கு நன்மை ஏற்படும் எனில் அதை நாங்கள் வரவேற்க தயாராக இருக்கின்றோம்.

மேலும் மோடி அரசில் மதக்கலவரங்கள் தலைவிரித்தாடுகிறது. சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எதிர்க்கட்சிகளின் பலம் குறைந்துள்ளதால் மோடி சர்வாதிகாரியைப் போல நடந்து கொள்கிறார்.

காங்கிரஸ் கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் செயல்முறை தொடங்கி விட்டது. காங்கிரஸ் கட்சி மீண்டும் முழுபலம் பெற்று பா.ஜ.க.வுக்கு எதிராக போராடும். நாம் மீண்டும் ஆட்சியை பிடிக்க கடுமையாக போராட வேண்டும்” என்றார்.

Leave a Reply