முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவிக்க சம்மதம் தெரிவித்ததா பாஜக?
vijayakanth
வரும் 2016ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக, பாஜக, மக்கள் நல கூட்டணி ஆகிய மூன்று கூட்டணியுமே விஜயகாந்தின் தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க வலையை விரித்து வைத்து காத்திருக்கின்றன. மக்கள் நலக்கூட்டணி விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க தயார் நிலையில் உள்ளது. அதேபோல் திமுகவும் தேமுதிகவுக்கு 100 தொகுதிகள் வரை தருவதற்கு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் பாஜகவும் அதிரடியாக விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதோடு கூட்டணி தலைவர் என்ற அந்தஸ்தையும் கொடுக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது

இது குறித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில பொதுச்செயலாளர் எஸ்.மோகன் ராஜூலு ஆகியோர் விஜயகாந்தை தேமுதிக அலுவலகத்தில் நேற்று சந்தித்து கூட்டணி குறித்த முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணியில் பாமகவையும் இழுக்க முயற்சி நடைபெறும் என்று கூறப்பட்டாலும் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்கனவே அறிவித்துவிட்ட பாமக, விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளுமா? என்பது சந்தேகமே.

விஜயகாந்துடன் நடத்திய சந்திப்பு குறித்து கருத்து கூறிய  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘‘கடந்த 16-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக டெல்லியில் அமித்ஷாவை சந்தித்துப் பேசினோம். கூட்டணி கட்சித் தலைவர் என்ற முறையில் மரியாதை நிமித்தமாக விஜயகாந்தை சந்தித்துப் பேசினோம். பொதுவான நடப்பு அரசியல் நிலவரங்கள், வெள்ள நிவாரணப் பணிகள். சட்டப்பேரவைத் தேர்தல் என பல விஷயங்கள் குறித்து நட்பு முறையில் பேசினோம்’’ என்றார். தமிழிசை சவுந்தர ராஜன் கூறும்போது, ‘‘விஜயகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து பொதுவான அரசியல் நிலவரங்கள் குறித்து பேசினோம்’’ என்றார்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *