shadow

boagarசித்தர் பெருமக்களே! செய்தற்கரிய தவறு செய்து உங்களின் சாபத்தை அடைந்தேனே! வேண்டாம்….  வேண்டாம்… இந்த உலகைக் காக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறதல்லவா! நமக்குள் நடந்த இந்த விவாகரத்துக்காக உலகத்தை பழி தீர்த்து விடாதீர்கள். மன்னியுங்கள், மன்னியுங்கள், என கண்களை மூடிக்கொண்டு கதறினார். அவரது கதறலைக் கேட்க அங்கே சித்தர்கள் இருந்தால் தானே! அவர்கள் காற்றில் கரைந்தது போல மறைந்து விட்டனர். ஐயோ! என் வாழ்க்கை லட்சியம் அழிந்ததே! இனி இந்த மக்கள் மரணத்தின் பிடியில் இருந்து எப்படி மீள முடியும்? இறைவா! என்னை சோதித்து விட்டாயே, என புலம்பியவர், வேறு வழியின்றி அப்படியே மயங்கி சாய்ந்து விட்டார்.

எதுவும் காரணத்துடனேயே நடக்கிறது. வந்தவரெல்லாம் தங்கி விட்டால், இந்த உலகம் தாங்காது. உலகத்திற்கு வருபவர்களெல்லாம் பிழைத்திருக்க வேண்டுமானால், அவர்களை வழி நடத்துவது யார்? இயற்கைக்கு இறைவன் விதித்திருக்கும் கட்டளைகளில் மிக முக்கியமானது மரணம். அதை இயற்கை எப்படி மீறும்? அதனால் தான், இறைவன் இப்படி ஒரு லீலையை சித்தர்கள் மூலமாக நிகழ்த்தியிருக்கிறான்.

அப்படியானால், அவன் ஏன் சஞ்சீவினி போன்ற மூலிகைகளைப் படைத்திருக்க வேண்டும் என்றால், அது தான் தெய்வ ரகசியம். தெய்வத்தின் சூட்சுமங்கள் முழுவதுமாக நமக்கு புரிந்து விட்டால், அதெப்படி தெய்வமாக இருக்க  முடியும்? மயங்கிக் கிடந்த போகரை நோக்கி ஒரு பறவை வந்தது. அந்தப் பறவையை கண்டப் பேரண்டம் என்பார்கள். அது, குகைக்குள் சென்று ஒரு மூலிகையைப் பறித்து வந்து போகரின் மூக்கருகே நீட்டியது. போகர் மயக்கம் தீர்ந்து எழுந்தார்.

போகரே! நடந்ததை நினைத்து வருத்தப்படக்கூடாது. இங்கே லட்சக்கணக்கான சித்தர்கள் தங்களை மறந்த நிலையில் தவமிருந்து வருகின்றனர். உன் நடமாட்டம் அவர்களை விழிக்கச் செய்து விடும். இப்போது கற்ற வித்தைகளே போதும்! இதைக் கொண்டே நீ உலகிலுள்ளோரின் ஆயுளை விருத்தி செய்து, தீர்க்காயுளுடன்  வாழ வழி செய்யலாம். இங்கிருக்கும் மற்ற சித்தர்களையும் விழிக்கச் செய்து, இருப்பதையும் இழந்து விடாதே. இருப்பதைக் கொண்டு திருப்தியடைபவனே புத்திமான், என அறிவுரை கூறியது.

போகரும் அங்கிருந்து கிளம்பி ஆகாயமார்க்கமாக பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார். தியானத்தில் ஆழ்ந்த அவருக்கு அன்னை உமையவள் காட்சி தந்தாள்.போகா! வருந்தாதே! உலகை அழிப்பதும், காப்பதும் எனது பணி. நீ இங்கிருந்து பழநிமலைக்குச் செல். அங்கே என் மகன் முருகனை வழிபடு, என்று கூறி மறைந்தாள். அன்னையின் கட்டளையை ஏற்று போகர் பழநிக்கு வந்தார். கடும் தவமிருந்தார். அவர் முன்னால் முருகப்பெருமான் கோவணத்துடன், தண்டாயுதபாணியாகக் காட்சி தந்தார். போகரே! நீர் நவபாஷாணத்தால் எனக்கு சிலை வடிக்க வேண்டும்.

நான் சொல்லும் வழி முறைகளின் படி வழிபாட்டுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும், எனக்கூறி அதுபற்றி தெளிவாகச் சொன்னார். போகரும் மனம் மகிழ்ந்து நவபாஷாணத்தால் சிலை வடித்தார்.  முருகப்பெருமான் அருளியபடியே அதை பிரதிஷ்டை செய்து அபிஷேகமும் பூஜையும் செய்து வந்தார். அந்த அபிஷேகப் பிரசாதத்தைப் பெற்றவர்கள், நோய்கள் நீங்கி, சுகவாழ்வு பெற்று, தீர்க் காயுளுடன் வாழ்ந்தனர். இதனால் தான் இன்றைக்கும் பழநிமலைக்கு மக்கள் ஏராளமாக வருகின்றனர். தமிழகத்திலேயே அதிக வருமானம் உள்ள கோயிலாகவும் இது விளங்குகிறது. போகர், நாமக்கல் அருகிலுள்ள திருச்செங்கோடு சென்றார். அங்கிருக்கும் அர்த்தநாரீஸ்வரரையும் நவபாஷாணத்தில் வடித்தாகவும் ஒரு தகவல் இருக்கிறது. அவர் சீனாவுக்கும் அடிக்கடி வானமார்க்கமாக சென்றார்.  ஒரு கட்டத்தில் சீன அழகிகள் சிலருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டு, தனது சக்தியை இழந்தார். புலிப்பாணி அங்கு சென்று, அவரை மீட்டு வந்து மீண்டும் சக்தி  பெற ஏற்பாடு செய்தார்.  கொங்கணர், இடைக்காடர், கமலமுனி, மச்சமுனிவர், நந்தீசர் ஆகிய சித்தர்களும் இவரது சீடர்களாக இருந்தவர்களே! சீனாவில் இருந்து திரும்பி, பழனியில் சிலகாலம் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதியடைந்தார். அவரது சமாதி பழனி ஆண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது. (முற்றும்)

Leave a Reply