shadow

1294447_182395741957043_1893455067_o ஆணின் கோபம், பொறுமையின்மை, பெண் ஒருத்தியின் வாழ்வை எப்படிக் கேள்விக்குறியாக்கியது. மூன்று ஆண்கள், அந்தப் பெண்ணை வார்த்தைகளால் உதைத்து மூலைக்கு மூலை தள்ளினார்கள். அவதார புருஷரான பரசுராமரால்கூட, அவளுக்கு உதவ முடியவில்லை. பிறந்த குடும்பம் கை விரித்தது. அதற்காக அப்பெண் கலங்கவில்லை. கொப்பளித்த கோபம், அடக்கமுடியாத ஆத்திரம் முதலானவை அப்பெண்ணை உணர்ச்சிக்குவியலாக்கிக் கதறவைத்தன. அதன் காரணமாக அவள் விடாமுயற்சியுடன் ஒரு காரியத்தைச் செய்தாள். முடிவு? உத்தமரும் தியாக சீலருமான ஒரு மாபெரும் வீரரின் வாழ்வை முடித்தது. அந்தப் பெண் யார்? அவள் வாழ்க்கையைப் பந்தாடியவர்கள் யார் யார்? எந்த மாவீரரின் முடிவுக்கு அவள் காரணமாக இருந்தாள்? புழுதி பறக்க ஒரு தேர் பறக்கத் தொடங்கிவிட்டது. அந்த ஒற்றைத் தேரில் தன்னந்தனி ஆளாகக் கிழவர் ஒருவர் காசியை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார். அவர்…பீஷ்மர் தன் சகோதரனான விசித்ர வீர்யனுக்குப் பெண் தேடிக் கொண்டிருந்தார். அப்போது, காசி மன்னருக்கு மூன்று பெண்கள் இருக்கிறார்கள். மூவருக்கும் சேர்த்து ஒரே சுயம்வரமாக மன்னர் ஏற்பாடு செய்திருக்கிறார் என்ற தகவல் பீஷ்மரை எட்டியது. உடனே அவர், ஆகா! தம்பிக்காக நாமே போய், அப்பெண்களைப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று தீர்மானித்து, தாயாரிடம் அனுமதி பெற்று, ஒற்றைத் தேரில் காசியை நோக்கிக் கிளம்பிவிட்டார். அங்கே… காசி மன்னர் நடத்திய சுயம்வரத்தில், ஏராளமான அரசர்களும், இளவரசர்களும் அமர்ந்திருந்தார்கள். பீஷ்மரும் போய் அமர்ந்தார்.

இளவரசிகள் மூவரும் சுயம்வர மண்டபத்துக்குள் அழைத்து வரப்பட்டார்கள். பெருமிதமும் கர்வமும் ஆவலும் பொங்க அமர்ந்திருந்த அரசர்கள் ஒவ்வொருவரைப் பற்றிய தகவல்களும், சிறு குறிப்புகளாகச் சொல்லப்பட்டன. இளவரசிகள் மூவரும் ஒவ்வோர் அரசரையும் கடந்து போய்க் கொண்டிருந்தார்கள். பீஷ்மரை நெருங்கியதும், வயசானவர் இவர் என்ற எண்ணத்தோடு, பயந்ததைப் போல மூவரும் பீஷ்மரை விட்டு விலகிப் போய்விட்டார்கள். சுயம்வர மண்டபத்தில் பரிகாசச் சிரிப்பு எழுந்தது. தர்மாத்மாதான்! இருந்தாலும் மிகவும் வயசாகிப்போய், உடம்பில் அங்கங்கே சுருக்கங்கள் விழுந்து, தலை நரைத்துப்போய் இருக்கும் இந்த பீஷ்மர் வெட்கத்தை விட்டுவிட்டு இங்கே எதற்காக வந்தார்? திருமணமே செய்துகொள்ள மாட்டேன் என்று பொய்யாகச் சத்தியம் செய்த இவர், மக்கள் கேட்டால் என்ன பதில் சொல்வார்? தன்னை பிரம்மச்சாரி என்று வீணாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார். இவருக்கும் பேர், புகழ் எல்லாம்… – என்ற இகழ்ச்சியான வார்த்தைகளும் வெளிப்பட்டன; கூடவே, இலவச இணைப்பைப் போல சிரிப்பொலியும் எழுந்தது. வார்த்தைச் சாட்டைகளால் அடிக்கப்பட்டு உண்டாகிய ரத்தக் காயத்தில், பரிசாகச் சிரிப்பு என்னும் மிளகாய்ப் பொடியையும் தூவியவுடன், பீஷ்மருக்குக் கோபம் எல்லை மீறிப்போனது.

tone_bhakti_shikhandi_in_mahabharata_shikhandi-mythological_character_medium

அவர் அப்போதே மூன்று பெண்களையும் தடுத்துக் கைப்பற்றி, தன் தேரில் ஏற்றினார். அதைத் தொடர்ந்து… இடிபோல் முழங்கும் குரலில், வாய் வீரம் பேசி வார்த்தை வாள்களை வீசிய அரசர்களே! இதோ! இந்தப் பெண்கள் மூவரையும் நான் பலாத்காரமாகக் கொண்டுபோகப் போகிறேன். முடிந்தால், உங்களில் யாராவது என்னுடன் போரிட்டு வென்று, இப்பெண்களைக் கைக்கொள்ளலாம். போருக்குத் தயார் நான் என்று கர்ஜித்து அறைகூவல் விடுத்தார் பீஷ்மர். அதைத் தொடர்ந்து பீஷ்மர், அரசர்களிடமும் காசி மன்னரிடமும் விடைபெற்றுக்கொண்டு தேரில் புறப்பட்டார். பீஷ்மரின் கர்ஜனைப் புயலில் சிக்கியிருந்த அரசர்கள், அவர் புறப்பட்ட பிறகுதான் நடந்ததை உணர்ந்தார்கள். அனைவரும் ஆவேசமாக பீஷ்மரைப் பின்தொடர்ந்து ஓடி, பலவிதமான ஆயுதங்களை வகை தொகையில்லாமல் வாரி இறைத்தார்கள். ஏராளமான அரசர்கள் பீஷ்மரால் கொல்லப்பட்டார்கள். பலர் விலகி ஓடினார்கள். ஆனால், மாபெரும் வீரரான பீஷ்மரை விடாமல் பின்தொடர்ந்ததோடு அஸ்திரங்கள் பலவற்றை வீசி அவரைத் தாக்கவும் செய்தான் ஒருவன். அவன்…

சவுபல தேசத்து அரசனான சால்வன். முதலில் அவனை அலட்சியப்படுத்திய பீஷ்மர், பிறகு அவன் தேரில் இருந்த குதிரைகளையும் தேரோட்டியையும் கொன்றார். அடுத்தபடியாக பீஷ்மர், சால்வனையும் கொல்ல முயலும்போது, காசி மன்னரின் பெண்கள், சால்வனைக் கொல்லாதவாறு தடுத்து பீஷ்மரிடம் வேண்டினார்கள். அவர்களின் வேண்டுகோளுக்காக, பீஷ்மர் சால்வனை உயிரோடு விட்டார். அவனும் தன் நகருக்குத் திரும்பிப் போய்விட்டான். பீஷ்மர் அஸ்தினாபுரம் திரும்பினார். தாயாருடன் கலந்து பேசி, மூன்று பெண்களையும் விசித்ர வீர்யனுக்குத் திருமணம் செய்து வைப்பதற்கு உண்டான செயல்களில் இறங்கினார். அப்போது பீஷ்மர் கொண்டுவந்த மூன்று பெண்களில் மூத்தவளான அம்பை பீஷ்மரை நெருங்கி, நான் சவுபல தேசத்து அரசரான சால்வனை விரும்புகிறேன். அவரும் என்னை விரும்புகிறார் என்றாள். அதைக் கேட்ட பீஷ்மர், சரியம்மா! என் தம்பியை நான் வற்புறுத்த முடியாது. அதேசமயம் மாற்றானை விரும்பிய பெண்ணை வீட்டில் வைத்திருக்கவும் கூடாது. நானோ, கல்யாணத்திலேயே விருப்பம் இல்லாதவன். ஆகையால், நீ உன் விருப்பப்படி போகலாம் என்றார். அம்பை சால்வனை நாடிப் போனாள். வாழ்க்கை என்னும் விளையாட்டு அரங்கத்தில், அம்பை என்னும் பந்து உதை வாங்கி அல்லாடப் போகிறது.

அம்பை போனதும், அவளுடைய சகோதரிகளான மற்ற இருவரையும் விசித்ர வீர்யனுக்குத் திருமணம் செய்துவைத்தார் பீஷ்மர். அப்போது விசித்ர வீர்யன் பீஷ்மரிடம், அண்ணா! சால்வனைத் தேடிப்போன அம்பை திரும்பி வந்தால், அவளை ஏற்கும்படி, என்னை நீங்கள் வற்புறுத்தக் கூடாது என்று சொல்லிவிட்டான். பீஷ்மரிடம் சொல்லிவிட்டு அவர் அனுமதியின் பேரில் சால்வனிடம் போன அம்பை, நடந்ததை எல்லாம் சொல்லித் தன்னை ஏற்கும்படி வேண்டினாள். சால்வன் மறுத்துவிட்டான். அம்பை! நான் உன்னை விரும்பியதும், நீ என்னை விரும்பியதும் உண்மைதான். ஆனால், இப்போதோ வேறு ஒருவனால், விவாஹம் செய்வதற்காகத் தூக்கிக்கொண்டு போகப்பட்டவள் நீ. பீஷ்மர் உன்னை பலவந்தமாகத் தூக்கிக்கொண்டு போனபோது, நீ வாயே திறக்கவில்லையே! மாற்றானை விரும்பிய உன்னை நான் ஏற்க முடியாது. நீ உன் விருப்பம் போலப் போகலாம் என்றான். அம்பை, நானாக விரும்பிப் போகவில்லை. பீஷ்மர் என்னை பலாத்காரமாகத்தான் கொண்டுபோனார். அவரும் தனக்காகக் கொண்டு போகவில்லை. தன் தம்பிக்காகத்தான் என்னைக் கொண்டு போனார். அந்த பீஷ்மரிடம் அனுமதி பெற்றுக்கொண்டுதான் இங்கே வந்தேன். உங்களைத் தவிர வேறு யாரையும் நான் மனதால்கூட நினைக்கவில்லை. உங்கள் தலையில் அடித்துச் சத்தியம் செய்கிறேன். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள். விலக்காதீர்கள் என்று பலவாறாகச் சொல்லி, கெஞ்சி மன்றாடினாள்.

சால்வன் அதை ஏற்கவில்லை. ஒரேயடியாக மறுத்துவிட்டான். வாழ்க்கை வீணாகிப்போனதை அறிந்த அம்பை, வெடித்தாள். இனிமேல் நான் யாரை நொந்து கொள்வேன். என்னை ஏற்க மறுத்த சால்வனையா? அல்லது அதற்குக் காரணமான பீஷ்மனையா? என் மேல்தான் தவறு. பீஷ்மன் என்னைக் கொண்டு போனபோது, நான் தேரில் இருந்து குதித்திருக்க வேண்டும். எனக்கு ஏற்பட்ட இந்த அநியாயத்துக்கு பீஷ்மன்தான் காரணம். அவனை விடப்போவதில்லை. பழிக்குப் பழி வாங்குவேன் என்று புலம்பியபடியே முனிவர்களின் ஆசிரமத்திற்கு ஓடினாள். அங்கிருந்த முனிவர்களிடம் தனக்கு ஏற்பட்ட கொடுமையைச் சொல்லி முறையிட்டாள். அந்த முனிவர்களும் பீஷ்மர் பெயரைக் கேட்டதும், தங்கள் இயலாமையைச் சொல்லிக் கையை விரித்தார்கள். அம்பை, முனிவர்களே! நான் வேறு எதுவும் கேட்கவில்லை. என் தந்தையிடம் போகவும் விரும்பவில்லை. நான் சந்நியாஸம் மேற்கொள்ள விரும்புகிறேன். எனக்கு உபதேசம் செய்யுங்கள் என வேண்டினாள். சைகாவத்யர் என்ற முனிவர், அம்மா! சந்நியாஸம் என்பது நீ நினைப்பதைப் போல சாதாரணமானதல்ல. மிகவும் கடினம் அது. பேசாமல் உன் தந்தையிடம் போ! என்று புத்திமதி சொன்னார். மாட்டேன். நான் தவம்தான் செய்வேன் என்றாள் அம்பை. அதே நேரத்தில் அந்த இடத்துக்கு ஹோத்திர வாகனர் என்ற ராஜரிஷி வந்தார். (இவர் அம்பையின் தாயைப் பெற்றவர். அதாவது தாய்வழி தாத்தா) அவரும் தன் பேத்திக்கு நடந்ததையெல்லாம் கேள்விப்பட்டு வருந்தினார். பிறகு அவர் ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்ததைப் போல, அம்பை! பரசுராமர் மகேந்திர மலையில் இருக்கிறார். நீ அவரிடம் போ! அவரை வணங்கி, நான் சொன்னதாகச் சொல்! எனக்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார். எனக்கு நெருங்கிய நண்பர் அவர் என்று அம்பையிடம் சொன்னார்.

அவர் சொல்லி முடிக்கவும், அகிருதவ்ரணர் என்ற முனிவர் அங்கு வரவும் சரியாக இருந்தது. வந்த அவர், எப்போதும் பரசுராமருடனேயே இருப்பவர். அவரும் அம்பைக்கு நடந்ததையெல்லாம் கேள்விப்பட்டு, ஹோத்திர வாகனரே! பரசுராமரும் எப்போதும் உங்களைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார். நாளை காலையில் அவர் இங்கே உங்களைப் பார்ப்பதற்காக வருவார் என்று சொல்லிவிட்டு அம்பையிடம், பெண்ணே! உனக்கு இரண்டு பேர் அநீதி இழைத்திருக்கிறார்கள். உன்னை சால்வனுடன் சேர்த்துவைக்க வேண்டுமா? அல்லது பீஷ்மருக்குத் தண்டனை கொடுக்க வேண்டுமா? எது வேண்டும் சொல்! உன் தாத்தாவுக்காகவும், உனக்காகவும் எதை வேண்டுமானாலும் பரசுராமர் செய்வார். சொல்! உனக்கு எது வேண்டும்? எனக் கேட்டார். அம்பை, உங்களுக்கு எது நியாயம் என்று தோன்றுகிறதோ, அதைச் செய்யுங்கள்! நீங்கள் எதைச் செய்தாலும் சரி! என்றாள். அகிருதவ்ரணர் தன் கருத்தைச் சொல்லத் தொடங்கினார். அம்மா! பீஷ்மன் உன்னைக் கொண்டுபோகாமல் இருந்திருந்தால், சால்வனிடம் சொல்லி உன்னை ஏற்கும்படி செய்வார் பரசுராமர். பீஷ்மன் உன்னைப் பலவந்தமாகத் தூக்கிக்கொண்டு போனதால்தான் இந்தப் பிரச்னையே உருவாகி இருக்கிறது. பீஷ்மனுக்குத் தன் வீரத்தில் கர்வம் அதிகம். ஆகவே, பீஷ்மனுக்குத் தண்டனை தருவதுதான் முறை என்றார்.

அம்பையும் தன் உள்ளத்தில் இருந்ததை வெளிப்படுத்தினாள். நீங்கள் சொல்வதுதான் சரி! அந்த பீஷ்மனைக் கொல்ல வேண்டும். அதுதான் என் விருப்பமும் என்றாள். இவ்வாறு அன்றைய இரவுப்பொழுது பேச்சிலேயே கழிந்தது. மறுநாள் பொழுது விடிந்ததும் பரசுராமர் அங்கு வந்தார். அவரிடம் அம்பை, தனக்கு நேர்ந்த துயரத்தை விவரித்து, இவ்வளவுக்கும் காரணமான பீஷ்மனை நீங்கள் எந்த வழியிலாவது கொன்று, என் துயரத்தைப் போக்க வேண்டும் என வேண்டினாள். முதலில் மறுத்த பரசுராமர், கடைசியில் பீஷ்மரைக் கொல்வதாக ஒப்புக்கொண்டார். அன்று பரசுராமர் முதலானவர்கள் அங்கேயே தங்கினார்கள். மறுநாள்… அம்பை, மற்றுமுள்ள முனிவர்கள் என ஏராளமானோர் சூழ்ந்து வர, பரசுராமர் பீஷ்மரைக் கொல்வதற்காகப் புறப்பட்டார். மூன்று நாட்கள் பயணத்துக்குப் பிறகு அனைவரும் பீஷ்மரின் இருப்பிடத்தை அடைந்தார்கள். அவர்களை எல்லாம் அன்போடு வரவேற்று பூஜை செய்தார் பீஷ்மர். அதன் பிறகு பரசுராமர் பீஷ்மரிடம் பீஷ்மா! பெண்ணாசையே இல்லாத நீ, எந்த நோக்கத்தோடு இந்த அம்பைத் தூக்கிக்கொண்டு வந்தாய்? பிறகு ஏன் இவளைக் கைவிட்டாய்? நீ கொண்டுவந்த இந்த அம்பையை இனிமேல் எவன்தான் கல்யாணம் செய்துகொள்வான்? அதனால்தான் சால்வன் இவளை நிராகரித்துவிட்டான். ஆகையால் இந்த அம்பையை நீயே திருமணம் செய்துகொள்! என் பேச்சைக் கேள்! என்றார். பீஷ்மர் அதை ஏற்க மறுத்தார். வாதம் வளர்ந்தது. எந்த நிலையிலும் பரசுராமரின் வார்த்தைகளை பீஷ்மர் ஏற்கவில்லை. பரசுராமர் கோபத்தின் உச்சிக்குப் போய்விட்டார். பீஷ்மா! உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன். வா குரு÷க்ஷத்திரத்துக்கு ! போர் செய்து பார்த்துவிடலாம் என்றார்.

குரு÷க்ஷத்திரத்தில் கடுமையான போர் துவங்கியது. யாரும் எதிர்பார்க்காத, யாரும் அறியாத பீஷ்ம – பரசுராம போர் நடந்தது. குரு÷க்ஷத்திர யுத்தம் என்றாலே, பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் நடந்த பதினெட்டு நாள் யுத்தம்தான் நினைவுக்கு வரும். ஆனால், நம்மில் பலருக்குத் தெரியாத யுத்தம், பீஷ்மருக்கும் பரசுராமருக்கும் நடந்த யுத்தம்-குரு÷க்ஷத்திரத்தில் இருபத்துமூன்று நாட்கள் நடந்தது. முடிவில்… பரசுராமர் தோற்றுப் போய்விட்டார். பெண்ணே அம்பை! முடிந்தவரை நான் போராடிப் பார்த்துவிட்டேன். ஊஹீம்! பலனில்லை. பீஷ்மன் என்னை வென்றுவிட்டான் என்று சொல்லிப் பெருமூச்சு விட்டார். பரசுராமர் பெருமூச்சு விட்டால், அம்பையின் துயரம் தீர்ந்து விடுமா? அவள், இந்த பீஷ்மனை வெல்ல தேவர்களாலும் முடியாது. ஆனால் என்ன ஆனாலும் சரி, பீஷ்மனைக் கொல்லும் சக்தி எங்கு கிடைக்கிறதோ, அங்கு போவேன் நான் என்று சொல்லிவிட்டு, கண்களில் நீர் வழிய அங்கிருந்து போய்விட்டாள். யுத்தகளத்தில் இருந்து பரசுராமர் மகேந்திர மலைக்குத் திரும்பினார்; பீஷ்மர் அரண்மனைக்குத் திரும்பினார். அரண்மனைக்குத் திரும்பிய பீஷ்மர் சும்மா இருக்கவில்லை. பீஷ்மனைக் கொல்லக்கூடிய சக்தி எங்கு கிடைக்குமோ, அங்கு போவேன் என்று சொல்லி, அம்பை போயிருக்கிறாள் அல்லவா? அவளுடைய நடவடிக்கை பற்றிய தகவல்களை, அவ்வப்போது தனக்குத் தெரியப்படுத்துவதற்காக ஆட்களை ஏற்பாடு செய்தார். தகவல்களும் வந்துகொண்டிருந்தன. அவற்றில் ஒன்றுகூட, பீஷ்மரின் வாட்டத்தைப் போக்குவதாக இல்லை.

பீஷ்மர் மனம் வருந்தினார். அதை நாரதரிடமும் வியாஸரிடமும் வெளிப்படுத்தவும் செய்தார். வியாஸரும் நாரதரும், பீஷ்மா! அம்பையை நினைத்து நீ வருத்தப்படாதே! என்னதான் முயற்சி செய்தாலும், தெய்வத்தால் செய்யப்படுவதை நம்மால் விலக்க முடியாது என்று பீஷ்மருக்கு ஆறுதல் சொன்னார்கள். அவர்கள் சொன்னது உண்மைதான்! தெய்வம்தான் செய்யப்போகிறது. ஆம்! பரசுராமரிடம் சபதம் செய்துவிட்டு, பீஷ்மரைக் கொல்வதற்கான சக்தியைத் தேடிப்போன அம்பை, இமயமலையில் இருக்கும் பாஷுதா என்ற நதியின் கரையில் பன்னிரண்டு வருடங்கள் கடுமையாகத் தவம் செய்தாள். பொறி புலன்களை அடக்கி அம்பை செய்த தவம், முருகப்பெருமானை அவள் முன்னால் நிறுத்தியது. ஆம்! ஆறுமுகப் பெருமானே அம்பையின் தவத்துக்கு இரங்கி அவள் முன்னால் காட்சி கொடுத்தார். அத்துடன் அம்பையின் கைகளில் தாமரைப் பூமாலை ஒன்றைத் தந்து, காசி மன்னன் மகளே! இது தேவலோக மாலை. உன் கவலையை இது தீர்க்கும். இதைப் போட்டுக்கொள்பவன் எவனோ, அவனே பீஷ்மனின் மரணத்துக்குக் காரணமாவான் என்று சொல்லி மறைந்தார்.

அம்பை, ஆறுமுகன் தந்த மாலையைக் கையில் ஏந்திக்கொண்டு பல இடங்களிலும் சுற்றித் திரிந்தாள். நான் சால்வனை விரும்பினேன். அவனும் என்னை விரும்பினான். ஆனால், இது தெரியாமல் பீஷ்மன் என்னைப் பலாத்காரமாகத் தூக்கிப் போய்விட்டான். அதனால் மூடனான சால்வனும், மாற்றானால் கொண்டு போகப்பட்டவள் இவள் என்று என்னை ஒதுக்கிவிட்டான். பீஷ்மனும் என்னை ஏற்கவில்லை. வீரர்களே! யாராவது வாருங்கள்! இந்த மாலையை அணிந்துகொண்டு, பீஷ்மனைக் கொல்லுங்கள்! பீஷ்மனைக் கொல்பனை நான் திருமணம் செய்துகொள்வேன் என்று கூவியபடியே சுற்றித் திரிந்தாள். ஆனால் பீஷ்மரிடம் உள்ள பயத்தால், ஒருவரும் அம்பையின் பக்கத்தில்கூடப் போகவில்லை. அம்பை பல இடங்களிலும் சுற்றித் திரிந்து, கடைசியில் பாஞ்சால மன்னரான துருபதனின் சபையை அடைந்தாள். மன்னா! பீஷ்மன் என் வாழ்க்கையை அழித்துவிட்டான். நான் என்ன கதறியும் ஒருவன்கூட என் உதவிக்கு வரவில்லை. க்ஷத்திரியர்களுக்கெல்லாம் என்ன ஆயிற்று? எல்லோரும் அழிந்து போய்விட்டார்களா? துருபதா! மன்னா! நீயாவது எனக்கு அடைக்கலம் தந்து பீஷ்மனைக் கொல்ல உதவி செய்! என இரண்டு கைகளையும் தூக்கி வேண்டினாள்.

அம்பையின் வார்த்தைகளைத் துருபதன் ஏற்கவில்லை. அவர் தன் இயலாமையைத் தெளிவாகச் சொல்லிவிட்டார். அம்மா அம்பை! உன்னைப் பற்றிய விவரங்கள் எல்லாம் எனக்கு ஏற்கனவே தெரியும். ஏதோ என் சக்திக்கும் தர்மத்துக்கும் தகுந்தபடி படைகளை வைத்திருக்கிறேன் நான். உனக்கு எந்த அரசரிடம் பயம் இருந்தாலும் சொல்! நான் அதைச் சுலபமாகப் போக்கிவிடுவேன். ஆனால், பீஷ்மருடன் மட்டும் என்னால் போர்செய்ய முடியாது. ஆகையால், என்னால் உனக்கு உதவிசெய்ய முடியாது. நீ இங்கு இருக்காதே! போய்விடு! நீ இங்கு இருந்தால், பீஷ்மரால் எனக்கு ஆபத்து வரும் என்றார். அம்பை, மனம் ஒடிந்து போனாள். தன் கையில் இருந்த மாலையை அரண்மனை வாயிலில் மாட்டிவிட்டு ஓடிவிட்டாள். அதைப் பார்த்த துருபதன் அஞ்சினார். அம்பை மாட்டிவிட்டுப்போன மாலையை யாரும் தொடாதபடி பார்த்துக் கொண்டார். நாளாக நாளாக இனி யாரும் எடுக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில், அந்த மாலையைக் கவனிக்காமல் விட்டுவிட்டார்.

அரசர் கவனிக்காவிட்டால் என்ன? ஆண்டவனும் அந்த மாலையை அங்கு மாட்டிய அம்பையும் கவனிக்காமல் இருப்பார்களா? மாலையை அங்கே மாட்டிவிட்டு ஓடிப்போன அம்பை இறந்துபோய், மறுபிறவியில் துருபதனுக்கே மகளாகப் பிறந்தாள். பாதுகாப்பு இல்லாமல் இருந்த மாலையை (போன பிறவியில் அம்பையாக இருந்தபோது அவள் மாட்டியதை) எடுத்து, கழுத்தில் போட்டுக்கொண்டாள். அவள் அவ்வாறு செய்ததை அவள் தந்தையான துருபதன் அறிந்தார். ஆ! இந்த மாலையை இவள் எடுத்துப் போட்டுக்கொண்டு விட்டாளே! இதன்மூலம் பீஷ்மரின் பகை வந்து, நம்மை அழித்துவிடுமே என்று பயந்தார்! விளைவு? மன்னர் துருபதன், தான் பெற்ற மகளை அரண்மனையை விட்டே வெளியில் விரட்டிவிட்டார். உயிர் பயத்தின் முன்னால், மகளாவது ஒன்றாவது! தந்தையால் விரட்டப்பட்ட அந்த மகளின் பெயர் அப்போது சிகண்டினி. பெண்ணாகப் பிறந்த அவள், பெற்ற தந்தையாலேயே விரட்டியடிக்கப்பட்ட அவள், அம்பையாக இருந்து சிகண்டினியாகப் பிறந்த அந்த நிலையிலும், பீஷ்மர்மீது உள்ள வெறுப்பை மறக்கவில்லை. ஆகையால் சிகண்டினி, முருகப்பெருமான் ஒரு மாலையைக் கொடுத்து, அதை எவன் போட்டுக்கொள்வானோ அவன் பீஷ்மரின் மரணத்துக்குக் காரணமாவான் என்று சொன்னார். அந்த மாலையை இப்போது, நாம் போட்டுக்கொண்டு இருக்கிறோம். ஆனால், பீஷ்மனின் மரணத்துக்குக் காரணமாக இருக்கப்போகிற நாம் பெண்ணாக அல்லவா பிறந்துவிட்டோம். ம்… என்ன செய்யலாம்? என்று தீவிரமாகச் சிந்தித்தாள். சிந்தித்தபடியே காட்டில் சுற்றிக்கொண்டிருந்த சிகண்டினி, அங்கே ஸ்தூணன் என்ற கந்தர்வனைச் சந்தித்தாள். அவன் உதவியால் ஆணாக மாறினாள். ஆணாக மாறியபின் சிகண்டினியின் பெயர் சிகண்டி என மாறியது.

ஆணாக மாறிய சிகண்டி, இனிமேல் நாம் ஏன் அங்கு இங்கு என்று சுற்றிக்கொண்டிருக்க வேண்டும்? என்று தீர்மானித்து, தன் தந்தையான துருபதனிடமே போய், நடந்தவற்றை எல்லாம் சொல்லி, பீஷ்மனிடம் இனிமேல் பயப்பட வேண்டாம் என்று தைரியம் சொன்னான். அத்துடன் வில் வித்தையில் சிறந்த வீரனாகவும் ஆனான். இதன்பிறகுதான் துருபத மன்னர், திரவுபதியையும் திருஷ்டத்யும்னனையும் பெற்றார். ஆகவே, திரவுபதி -திருஷ்டத்யும்னன் ஆகியோருக்கு, சிகண்டி அண்ணன் ஆவான். இந்தத் தகவல்கள் எல்லாம் பீஷ்மருக்கும் தெரியும். அதை அவரே சொல்கிறார். சிகண்டியின் மூலம், தான் சிதையப்போவதைச் சொல்லி, தன் முடிவுக்குத் தானே வழியும் சொல்கிறார். எப்போது? எப்படி? பாரத யுத்தம் தொடங்கியபோது, பீஷ்மர் கவுரவர்கள் பக்கம் இருந்து தலைமை தாங்கி போரை நடத்திக் கொண்டிருந்தார். அவரால் பாண்டவ சேனைக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. விட்டால், இன்னும் இரண்டொரு நாட்களில் பாண்டவர் சேனை பஸ்மமாக ஆகிவிடும் என்ற நிலை.

யுத்தம் தொடங்கியதிலிருந்து ஒன்பதாம் நாள் இரவு நேரம்… கண்ணன் முதலானவர்களுடன் கூடி ஆலோசித்து, பீஷ்மரைக் கொல்லவேண்டும். அதற்கு உண்டான வழியையும் அவரிடமே கேட்கலாம் என்று முடிவு செய்தார் தர்மர். பாண்டவர்களும் கண்ணனும் அந்த இரவு நேரத்தில், பீஷ்மரின் பாசறைக்குப் போனார்கள். அவரைக் கொல்வது எப்படி என்று அவரிடமே கேட்டார்கள். பீஷ்மரும் தன் முடிவுக்கான வழியைத் தானே காட்டினார். தர்மபுத்ரா! உனக்குத்தான் எல்லாம் தெரியுமே. நான் உயிரோடு இருக்கும்வரை உனக்கு வெற்றி என்பதே கிடையாது. இது சத்தியம். என்னை வெல்ல வேண்டுமானால் போர்க்களத்தில் என்னை வேகமாக அடியுங்கள்! என்றார். தர்மர், போர்க்களத்தில் யமனைப் போலச் சூறாவளியாகச் சுற்றிவரும் உங்களை யாராலும் வெல்ல முடியாதே! அப்படியிருக்கும்போது நாங்கள் எப்படி? எனக் கேட்டார். பீஷ்மர் அதற்கும் வழி சொன்னார்; தர்மா! நீ சொல்வது உண்மைதான். ஆயுதம் ஏந்திய என்னை யாராலும் வெல்ல முடியாது. அதேசமயம் ஆயுதம் இல்லாதவன், விழுந்தவன், கவசம் கொடி ஆகியவற்றை இழந்தவன், போர்க்களத்தில் இருந்து ஓடுபவன், அடைக்கலம் என்று வந்தவன், பெண்ணிடம் தோற்றுப் போனவன், பெண், பெண்ணின் பெயரைக் கொண்டவன், அங்கஹீனன், ஒரே பிள்ளையை உடையவன், பிள்ளை இல்லாதவன், அலி, பெண் தன்மை உடையவன் எனப் பேர் பெற்றவன் ஆகியோருடன் யுத்தம் செய்யவும் என் மனம் ஒப்புக் கொள்ளாது.

தர்மபுத்ரா! உங்கள் பக்கம் உள்ள துருபதன் மகனான சிகண்டி, பெண்ணாக இருந்து ஆணாக மாறியவன். இது உங்களுக்கெல்லாம் தெரியும். அந்த சிகண்டியை முன்னிட்டுக் கொண்டு அர்ஜுனன் வரட்டும். பெண்ணாக இருந்து ஆணாக மாறிய சிகண்டியை எந்த சந்தர்ப்பத்திலும், நான் அடிக்க விரும்ப மாட்டேன். அந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, அர்ஜுனன் என்னை நாலா பக்கங்களிலும் அடிக்கட்டும். இப்படிச் செய்தால் நீ வெல்வாய் என வழிசொல்லிக் கொடுத்தார் பீஷ்மர். மறுநாள் போர் தொடங்கியது. சிகண்டி போர்க்களத்தில் முன்னால் நின்று, பீஷ்மரை அம்புகளால் கடுமையாகத் தாக்கினான். பீஷ்மரோ, சிகண்டி! நீ என்ன செய்தாலும் சரி! எப்படிப்பட்ட நிலையிலும் உன்னை எதிர்த்து நான் போர்செய்ய மாட்டேன். நீ பெண்ணாக இருந்து ஆணாக மாறியவன் அல்லவா? அதனால்தான் என்று சிகண்டியை ஒதுக்கினார்.

ஆனால் சிகண்டியோ, பீஷ்மரே! உங்கள் பெருமை முழுதும் எனக்குத் தெரியும். இருந்தாலும் உங்களை எதிர்த்து நான் போரிடத்தான் போகிறேன். கண்டிப்பாக உங்களைக் கொல்லுவேன். என்னிடம் இருந்து நீங்கள் உயிருடன் தப்பிப்போகப் போவதில்லை. கடைசியாக ஒருமுறை, உலகத்தை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்! என்று பேசி, அம்புகளை வாரி வீசி பீஷ்மரை அடித்தான். அப்புறம் என்ன! சிகண்டியை  முன்னிட்டுக்கொண்டு, அர்ஜுனன் பீஷ்மரைக் கீழே சாய்த்தான். (இதன்பிறகு பீஷ்மர் ஐம்பத்தெட்டு நாட்கள் உயிருடன் இருந்தது தனி வரலாறு) இவ்வாறு மாபெரும் வீரரான பீஷ்மரின் முடிவுக்குக் காரணமாக இருந்த சிகண்டி, துரியோதனன் வீழ்ந்த பிறகு இரவோடு இரவாக அச்வத்தாமாவால் கொல்லப்பட்டான். ஒரு பெண்ணின் அவலங்களுக்கெல்லாம் காரணம், ஓர் ஆணின் அவரச முடிவு என்பதைப் பாடமாக உணர்த்துகிறது சிகண்டியின் கதாபாத்திரம்.

Leave a Reply