shadow

hindu rishi

அன்பான சீடரே! இந்த தண்ணீரைப் பாருங்கள். நல்லோர்களின் மனம் போல, எவ்வளவு அழகாகவும், தெளி வாகவும் இருக்கிறது, ராம பிரானின் புண்ணிய சரிதமான ராமாயணத்தை இயற்றும் முன்பாக வால்மீகி மகரிஷி, தன் சீடரான பரத்வாஜரிடம் சொன்ன வார்த்தை இது. ராமபிரான், தெளிந்த தண்ணீர் போல பரிசுத்தமானவர் என்பதை, இவ்வாறு சுருங்கக் கூறினார் வால்மீகி. இதனால், பரத்வாஜரை ராமாயணத்திற்கு சாட்சி யானவர் என்று சொல்வதுண்டு.வால்மீகியின் சீடர்களில் பிரதான மானவர் பரத்வாஜர். இவர் சீடராக இருந்தவேளையில் தான், வால்மீகி ராமாயணத்தை இயற்றினார். பரத்வாஜர், பல மகரிஷிகளிடம் சீடராக இருந்து, அவர்களிடமிருந்து வேதங்கள், அதன் உட்பொருள் என சகல விஷயங் களையும் கற்றுத்தேர்ந்தார். கற்றலில் ஆர்வம் கொண்டு, தன்னை தாழ்த்திக் கொண்டு, தம்மை ஒத்த ரிஷிகளிடம் கூட சீடராகத் தொண்டாற்றினார்.பரத் என்றால் தாங்குகிறவர் என்றும், வாஜம் என்றால் வலிமை என்றும் பொருள். வலிமையான தேகத்தை உடையவர் என்பதால், இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. வாஜம் என்றால் அன்னம் (உணவு), அரிசி, நீர், நெய், யாகத்தில் பயன் படுத்தும் பொருள், பரிசு, வேகம், செல்வம் என்றும் பொருள் உண்டு. இவை எல்லாவற்றிற்கும் பொறுப்புடையவராக இருப்பதாலும் இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். சித்திரை மாதத்திற்கு வாஜம் என்ற பெயருண்டு.தேவர்களின் குருவான பிரகஸ்பதி, ஒரு சந்தர்ப்பத்தில் தன் சகோதரரின் மனைவி மமதையுடன் கூடியதாக சொல்லப்படுகிறது. இதனால் தோன்றிய குழந்தையை வளர்க்கும் படி பிரகஸ்பதி மமதையிடம் கூறினார். அவளோ, பிரகஸ்பதியே வளர்க்க வேண்டுமென்றாள். இறுதியில் இருவரும் குழந்தையை விட்டுச் சென்றனர்.

images (1)

குழந்தையில்லாத ஒரு தம்பதியர் அதை எடுத்து வளர்த்தனர். தேவர்கள் அவருக்கு பரத்வாஜர் எனப் பெயர் சூட்டினர். இவரது பெயரை பரத்+வாஜம் எனப் பிரித்தால் இருவருக்குப் பிறந்தவர் என்று பொருளாகும். இவரே பிற்காலத்தில் பெரிய மகரிஷியாகி, சப்த ரிஷிகளிலும் ஒருவரானார். இவரது பிறப்பு இழிவான நிலையில் இருப்பதால்தான், ரிஷி மூலம் காணக்கூடாது என்ற பழமொழியே உருவானதாகச் சொல்வர். யமுனை நதிக்கரையில் தங்கியிருந்து, வெகுகாலம் வாழ்ந்தவர் இவர்.பரத்வாஜர் வேதங்களின் மீது முழு ஈடுபாடு கொண்டவர். வேதத்தை முழுமையாகக் கற்க விரும்பிய இவர், அதற்காக கடும் சிரத்தையெடுத்தார். இதற்காக அவர் மூன்று முறை ஆயுள் நீட்டிப்பு பெற்று வேதம் கற்றார். நான்காவது முறையாகவும் ஆயுளை நீட்டித்துக்கொள்ள, இந்திரனை வேண்டினார். அவரிடம் வந்த இந்திரன், மூன்று மலைகளைக் காட்டி, அதிலிருந்து கைப்பிடியளவு மண் கொடுத்தான். அம்மலையின் அளவிற்கு வேதம் இருப்பதாகச் சொன்னவன், கைப்பிடி மண்ணளவிற்கே அவர் வேதம் கற்றதாக உணர்த்தினான். இவ்வாறு வேதம் கற்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவராக பரத்வாஜர் திகழ்ந்தார். இதை, யஜுர் வேதம் குறிப்பிடுகிறது. யஜுர் வேதத்திற்கு இவர் விளக்கம் எழுதி யுள்ளார். ரிக் வேதத்தில் வரும் பல சூக்தங்களுக்கு பரத்வாஜர் ரிஷியாக இருக்கிறார். சாமவேதம் என்பது இசை வடிவம் கொண்டது. இதில், பரத்வாஜரின் பெயரால் ஒரு பகுதி இருக்கிறது. பரத்வாஜர் விருந்தோம்பல் செய்யும் குணத்திற்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்.

images

ராமபிரான் மீது அளவற்ற அன்பும், பக்தியும் கொண்டவர்.ராமர், காட்டிற்குச் சென்றபோது, அவரை அயோத்திக்கு மீண்டும் அழைத்து வர பரதன் சித்திரக்கூட மலையை நோக்கிச் சென்றார். அவருடன் ராமபிரானை தங்கள் நாட்டிற்கு அழைத்து வருவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டவர் களும் கிளம்பினர். வழியில் பரத்வாஜரின் ஆஸ்ரமத்தை பரதன் கண்டான். அவனையும், உடன் வந்தவர்களையும் உபசரித்தார் பரத்வாஜர். அவரது விருந்தை ஏற்றுக் கொண்ட அனைவரும் பரதனிடம், நாங்கள் அயோத்திக்கும் வரவில்லை. தண்ட காரண்யத்திற்கும் செல்லவில்லை. நிரந்தரமாக இங்கேயே தங்கிவிடுகிறோம், என்றனர். ராமபிரானை அழைத்து வரும் தங்களது தலையாய கடமையைக்கூட மறந்து, பரத்வாஜருடன் தங்கிவிடுவதாக கூறும் அளவிற்கு அவர்களை உபசரித்தவர் பரத்வாஜர். வனவாசம் முடிந்ததும் ராமன் அயோத்திக்குத் திரும்பினார். குறிப்பிட்ட காலத்திற்குள் நாடு திரும்பாவிட்டால் பரதன் உயிரை விட்டுவிடும் இக்கட்டான சூழ்நிலை அது! இதற்காக விரைவாக நாடு திரும்பிக்கொண்டிருந்த நிலையிலும், ராமபிரான், வழியில் இருந்த பரத்வாஜரின் ஆஸ்ரமத்தில் தங்கி அவரது உபசரிப்பை ஏற்று நாடு திரும்பினார். தனக்காக பசி, தூக்கம் மறந்து உதவி செய்த வானர வீரர்களுக்கு, விருந்து கொடுக்க வேண்டு மென விரும்பிய ராமன், அதை பரத்வாஜரின் ஆஸ்ரமத்தில் நிறைவேற்றி வைத்தார். மகாபாரதத்தில் கவுரவர், பாண்டவர்களுக்கு வில் வித்தை கற்றுக்கொடுத்த குரு துரோணாச்சாரியார் ஆவார். இவர், பரத்வாஜ தலைமுறையில் வந்தவர் என்பதால், துரோணாச்சாரியாருக்கும் பரத்வாஜர் என்ற பெயருண்டு. பரத்வாஜ சீக்ஷõ, பரத்வாஜ சம்ஹிதா, பரத்வாத சூத்திரம், பரத்வாஜ ஸ்ம்ருதி என பல நூல்களை பரத்வாஜர் இயற்றியுள்ளார்.

Leave a Reply