‘பாகுபலி 2’ திரைவிமர்சனம். முதல் பாகத்தை விட சுமார் தான்!

‘பாகுபலி 2’ திரைவிமர்சனம். முதல் பாகத்தை விட சுமார் தான்!

பிரமாண்டம், நடிகர் நடிகைகளின் அற்புதமான நடிப்பு, கிராபிக் காட்சிகள் அனைத்தும் ஓகே. ஆனால் பாகுபலி முதல் பாகம் போல் இல்லை என்பது தான் உண்மை. இந்த உண்மை இன்னும் சில நாட்கள் கழித்து ரசிகர்களுக்கு புரியும்

ஒரு மிகச்சிறந்த ராஜதந்திரி சிவகாமிதேவி. தனது கணவர் நாசர் ஒரு நரித்தனம் கொண்டவர் என்று தெரிந்தவர். ஆனால் அவருடைய பேச்சை கேட்டு அமரேந்திர பாகுபலிக்கு எதிரான ஒரு முடிவை எடுப்பது திரைக்கதையின் மிகப்பெரிய ஓட்டை. சிறுவயதில் இருந்தே பாகுபலியை பாலூட்டி வளர்த்த சிவகாமிக்கு அவன் தவறு செய்ய மாட்டான் என்பது தெரியாதா? தேவசேனா தன்னுடையவள் என்று பாகுபலி கூறியதும், ஒரு நல்ல தாய் அதை மனமாற ஏற்றுக்கொண்டு வாழ்த்தியிருக்க வேண்டும்

நாசரின் நரித்தனத்தில் தேவசேனாவின் மாமன் ஏமாறுவதை எல்லாம் ஒரு டுவிஸ்ட்டா? எளிதில் ஊகிக்கக்கூடிய ஒரு விஷயம். பிரபாஸின் அறிமுகக்காட்சி பிரமாதம். ஆனால் அந்த ஒரு காட்சியை தவிர முதல் அரை மணி நேரம் போர். அதாவது ஒருமுறை பார்க்கலாம். திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் காட்சிகள் அல்ல. அதுவும் சத்யராஜ் எல்லாம் காமெடி செய்கிறார், அதையும் காமெடி என்று நினைத்து சிரிக்க வேண்டுமாம்.

முதல் பாகத்தில் இருந்த பிரபாஸ், தமன்னா காதல் மிக அற்புதமான காட்சிகள். ஒரு தேவதையை தேடி மலையருவியை ஏறுவது, தமன்னாவுகு காதல் என்றால் என்ன என்று காட்சிகளில் மட்டுமே விளக்குவது என்று மிக அபாரமான காட்சிகளை உருவாக்கிய இயக்குனர் ராஜமெளலி, இரண்டாம் பாகத்தில் பிரபாஸை ஒரு கோமாளியை போல் சித்தரித்து காதலிக்க வைக்கின்றார். ஆனால் பிரபாஸ் உண்மையில் யாரென தெரியும்போது சிலிரிக்க வைக்கின்றது என்பது உண்மைதான். குறிப்பாக அனுஷ்காவுக்கு ஒரே நேரத்தில் பல அம்புகள் விட கற்றுக்கொடுக்கும் காட்சி உலக சினிமா இதுவரை பார்த்திராத காட்சிகள்

முதல் அரை மணி நேரத்திற்கு பின்னர் திரைக்கதையில் தொய்வில்லை என்பது உண்மைதான். ஆனால் ஃபிளாஷ்பேக் முடிந்த பின்னர் படத்தில் சுவாரஸ்யம் மிக குறைவு. கிளைமாக்ஸ் போர்க்காட்சிகள் கொஞ்சம் நீளம். இதிலும் முதல் பாகத்தில் இருந்த போர் தந்திரங்கள் குறைவு. பனை மரத்தை பயன்படுத்தி கோட்டைக்குள் நுழைவதை தவிர.

பிரபாஸின் நடிப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை. அனுஷ்கா அழகு தேவதையாக உள்ளார். அவர் கண்களே மிரட்டுகின்றன. ரம்யா கிருஷ்ணனை கிட்டத்தட்ட வில்லியாக மாற்றிவிட்டதால் அந்த கேரக்டர் மீதிருந்த மரியாதை மனதில் இருந்து அகன்றுவிட்டது. ராணா, சத்யராஜ், நாசர் நடிப்பு ஓகே

ஒரு பக்கா டப்பிங் படம் என்பது பாடல்களில் தெரிகிறது. வார்த்தைகள் புரியவே இல்லை. ஆனால் பின்னணி இசை மிக மிக அருமை. கீரவானியை தவிர அனேகமாக வேறு யாரும் இந்த அளவுக்கு பின்னணி இசையை கலக்கியிருக்க முடியாது.

ஒளிப்பதிவு உலகத்தரம், கிராபிக்ஸ் நன்றாக இருந்தது ஆனால் இதைவிட அதிகமாக ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள் என்பது உண்மை.

மொத்தத்தில் பாகுபலி முதல் பாகத்தை பார்க்காதவர்களுக்கு இந்த படம் ஒரு பிரமாண்டத்தின் உச்சம். பாகுபலியை பார்த்தவர்களுக்கு எதிர்பார்ப்பில் ஏமாற்றம் இருந்தாலும் ஓகே. ரகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *