shadow

மனைவியின் இறந்த உடலை தோளில் சுமந்து சென்ற கணவருக்கு பஹ்ரைன் பிரதமர் உதவி

bahrainஒடிசா மாநிலத்தில் இறந்த தனது மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்று இறுதிச்சடங்கு செய்த தானா மஜ்கி குடும்பத்துக்கு நிதியுதவி செய்ய பஹ்ரைன் பிரதமர் முன்வந்துள்ளார்.

ஒடிசா மாநிலம், காலாகேண்டி அருகே தானா மஜ்கி என்பவரின் மனைவி சமீபத்தில் காச நோயினால் மருத்துவமனையில் மரணம் அடைந்தார் இறந்த மனைவியின் சடலத்தை சொந்த கிராமத்திற்கு எடுத்துச்செல்ல மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தர மறுத்துவிட்டது. இதனால் தானா மஜ்கி மனைவியின் இறந்த உடலை தனது தோளில் சுமந்தபடி 10 கிலோமீட்டர் வரை நடந்து சென்றார். கூடவே அவரது 12 வயது மகளும் அழுதபடியே நடந்து சென்ற காட்சி காண்போரின் விழிகளில் கண்ணீர் வரவழைத்தது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், இந்த தகவலை கேள்விபட்டு, மிகவும் மனம் வருந்திய பஹ்ரைன் பிரதமர் கலிபா பின் சல்மான் அல் கலிபா, தானா மஜ்கிக்கு உதவி செய்ய முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்காக தானா மஜ்கியின் முகவரி மற்றும் வங்கிக் கணக்கு ஆகிய விவரங்களை கேட்டு பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அந்நாட்டு பிரதமர் அலுவலகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. உரிய விவரங்கள் கிடைத்த உடன், மஜ்கிக்குத் தேவையான நிதி உதவி வழங்கப்பட இருப்பதாக பஹ்ரைன் அரசு தெரிவித்துள்ளது. ஆனாலும் எவ்வளவு தொகை அளிக்கப்படும் என்கிற விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

பஹ்ரைன் பிரதமரின் மனிதாபிமானம் பலராலும் சமூக வலைத்தளங்களில் பாராட்டப்பட்டு வருகிறது.

Leave a Reply