shadow

10என் உயிரே என் குழந்தைங்கதான்!’ – இதைவிட எளிதாக ஒரு தாயால், பெற்ற குழந்தைகளின் மீதான பாசத்தையும் நேசத்தையும் சொல்லிவிட முடியாது. ஆனால், உயிராய் வளர்க்கும் குழந்தைகளையும் தவிக்கவிட்டு, தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் சில தாய்மார்களின் அவலம், தினசரி செய்தியாகி அதிரவைக்கிறது. நொடியில் எடுக்கும் முடிவு, அந்தக் குடும்பத்தையே உலுக்கி போட்டுவிடுகிறது.

குடும்பம் என்ற அமைப்பு எத்தனை வலிமையானது என்பதைச் உணர்த்துவது, வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களும் வலியான நிமிடங்களும்தான். வெற்றியிலும் தோல்வியிலும் பின்னே இருக்கும் அந்தக் குடும்பம்தான், சில வேளைகளில் துயரமான முடிவுக்கும் காரணமாகிவிடுகிறது.

அதிர்ச்சியாக இருந்தாலும் அதுதான் உண்மை. இதை உறுதிப்படுத்துகிறார் மனநல நிபுணரும், ‘ஸ்நேகா’ அமைப்பின் நிறுவனருமான டாக்டர் லக்ஷ்மி விஜயகுமார்.

”தற்கொலைக்கான காரணங்களில் 25 சதவிகிதம், குடும்பப் பிரச்னைகள்தான் என்கிறது ஓர் ஆய்வு. சொத்துப் பிரச்னை, கடன் பிரச்னை, காதல் பிரச்னை, தம்பதிக்குள் பிரச்னை, ஏதோ ஓர் அசம்பாவிதம் நடந்து, அதனால் மானப் பிரச்னை என்று குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள்தான் தற்கொலைக்கான காரணங்கள். தேர்வில் தோல்வி, மதிப்பெண் குறைவாகப் பெற்றவர்களும்கூட பெற்றோரின் திட்டுகளுக்குப் பயந்துதான் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

ஒருவர் எடுக்கும் தவறான முடிவு அவரோடு முடிந்துவிடாது. அவர் குடும்பத்துக்கும் அதே அதிர்ச்சி இருக்கும். அதிலும், தற்கொலை முயற்சி தோல்வியில் முடிந்து மீண்டு வந்தவர்களுக்கு இரண்டு விதமான மனநிலை இருக்கும். ‘எல்லோருக்கும் தெரிஞ்சுபோச்சே’ என்ற அவமானம், குற்ற உணர்வு ஒரு புறமும், ‘எல்லாப் பிரச்னைகளில் இருந்தும் விடுதலைனு நினைச்சோம்… இதிலும் தோத்துப் போயிட்டோமே’ என்ற மன அழுத்தம் மறுபுறம் இருக்கும்!

 குடும்பத்தினர்

‘நாம நல்லாத்தானே வைச்சிருந்தோம். எவ்வளவு பாசத்தைக் கொட்டி வளர்த்தோம்? இப்படிப் பண்ணிட்டானே… நம்மகிட்ட ஒரு முறை பேசியிருக்கலாமே… இப்படி ஒரு முடிவு எடுத்து, எல்லார் முன்னாலயும் தலை குனியவைச்சிட்டானே!’ என்று குடும்பத்தினர் மத்தியில் கோபமும் ஆதங்கமும் உண்டாகும்.

தற்கொலை முயற்சியில் தப்பிப் பிழைத்து வந்தால்… ”நல்லவேளை பிழைச்சு வந்தது… செத்துப் போயிருந்தா என்ன ஆகியிருக்கும்?” என்ற ஆதங்கத்தில் சில நேரம் அன்பாகவும், சில நேரம் ”ஏன் இப்படிப் பண்ணனும்?” என்று கோபமாகவும் நேர் மற்றும் எதிர்மறை உணர்வுகள் மாறிமாறி குடும்பத்தாரிடமிருந்து வெளிப்படும்.

தற்கொலைக்கு முயன்றவர், குடும்பத்தை வெறுத்துத்தான் அந்த முடிவுக்குச் சென்றார் என்று நினைக்காமல், அவர் மனதிலுள்ள வலி எவ்வளவு ஆழமானது என்று புரிந்துகொள்ள முயற்சியுங்கள்.

 தனிமையும் தற்கொலையை தூண்டும்

நம் குடும்ப அமைப்பில், பிள்ளைகளுக்கு பக்கபலமாக, பின்புலமாக குடும்பமே இருக்கிறது. குடும்பத்திலேயே பிரச்னை என்றால், பாதிக்கப்பட்ட நபர் எங்கே செல்வார்? முன்பு கூட்டுக் குடும்பமாக இருந்ததால், அம்மா அப்பாவிடம் பகிர்ந்துகொள்ள முடியாவிட்டாலும் உறவினர்களிடம் பேசி ஆறுதல் அடைய முடிந்தது. ஆனால் இன்றோ தனிக்குடித்தனம்… யாரிடம் மனம் விட்டுப் பேசுவது, பகிர்வது என்று தெரியாமல், சோகத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகி, தனிமையில் சிந்திக்கும்போது தற்கொலை எண்ணம் தலைதூக்க வாய்ப்பாகிவிடுகிறது.

தற்கொலைக்கு முயன்றவர்களைப் பார்த்து, ‘வேணும்னே இப்படிப் பண்ணிட்டான்!” என்று குடும்பத்தினர் சொல்வது சகஜம். வேறு வழி தெரியாமல்தான் செய்திருக்கிறான் என்று புரிந்துகொள்ளுங்கள்.  

 தற்கொலைக்கு முயன்றவருக்கு…

நொடிப் பொழுதில் ஏற்படும் உணர்ச்சியின் வெளிப்பாடுதான்,  தற்கொலை முயற்சி. அந்த நேரத்தில் எப்படி அதைக் கட்டுப்படுத்துவது என்பதை முதலில் சொல்லித்தருகிறோம்.

உள்ளுக்குள் அடக்கி வைத்திருக்கும் அழுத்தம், ஏதேனும் ஒரு வகையில் வெளியே வந்துவிட்டால், பிரச்னை இருக்காது.  டென்ஷன் இல்லாதபோது, பிரச்னைக்கான தீர்வுகள் புலப்படும்! ஆனால், அழுத்தம் வெளியே வர எந்த வழியும் இல்லாதபோது, வெடிக்கத்தானே செய்யும்.

பிடிக்காத விஷயங்கள் ஏதேனும் நடந்தாலோ, பயமாக இருந்தாலோ, அதைச் சொல்வதற்கும் வெளிப்படுத்துவதற்கும் எத்தனையோ வழிகள் இருக்கின்றன. வாழ்வில் எத்தனையோ ஆயிரம் பிரச்னைகள் வரும்… விலகும். ஆனால், எல்லாவற்றுக்கும் தற்கொலை மட்டுமே தீர்வு இல்லை. தற்கொலை தவிர்த்து, பிரச்னைகளுக்கு வேறு தீர்வுகளும் சாத்தியக்கூறுகளும் என்னவெல்லாம் இருக்கின்றன என்று எடுத்துச் சொல்லப்படுகிறது.

 நான்கு பேர் நல்லது!

‘நல்லது கெட்டதுக்கு நாலு பேர் வேணும்’ என்று பெரியவர்கள் சொல்வார்கள். மனதில் சுமையும் அழுத்தமும் ஏறி, திடீரென ஒருநாள் வெடிக்காமல் இருக்க வேண்டுமானால், மனதில் இருப்பதை வெளிப்படையாகச் சொல்லிப் பகிர்ந்துகொள்ள, அனைவருக்குமே ‘நான்கு பேர்’ முக்கியம். குடும்பத்தில் ஒருவர், குடும்பத்துக்கு வெளியே ஒருவர், நண்பர்களில் ஒருவர், அலுவலகத்தில் ஒருவர் என்று நம்பிக்கையாக நான்கு பேர் இருந்தால் போதும். தற்கொலை எண்ணத்திலிருந்து மீண்டு வந்துவிடுவார்கள்.  

பெரும்பாலானவர்களை தற்கொலை நிலைக்குத் தள்ளுவதும் குடும்பம்தான்; மீட்டெடுப்பதும் குடும்பம்தான். குடும்பத்தில் பிள்ளைகளின் உணர்வுகளுக்கு வடிகாலாக இருந்து, வாழவைப்போம்!”

”நாங்க இருக்கோம்!”

”தேர்வு முடிவை எதிர்கொள்ளும் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அளிக்க வேண்டியது பெற்றோர்கள்தான்’ என்று அழுத்தமாகச் சொல்கிறார் சென்னை தரமணி வாலன்டரி ஹெல்த் சர்வீஸ் மன நல ஆலோசகர் மாலா.

‘பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் அடிப்படையில் நல்ல உறவு வேண்டும். தோழமையான ஓர் உறவை சின்ன வயதிலிருந்தே உருவாக்கி, குழந்தைகள் வளர வளர அந்த உறவை மேம்படுத்த வேண்டும். அப்போதுதான், ‘எது நடந்தாலும் நம் அம்மா, அப்பாவிடம் சொல்லலாம்’ என்ற நம்பிக்கை பிள்ளைகளுக்கு வரும். எந்தப் பிரச்னை என்றாலும் தயங்காமல் பகிர்ந்துகொள்ள முன்வருவார்கள்.

இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு, பள்ளியிலும் வீட்டிலும், படிப்பு சார்ந்த பிரஷர் அதிகம் இருக்கிறது. அதனால்தான், அவர்களுக்குள் தேர்வு குறித்த பயமும் அதனால் எழும் மன அழுத்தமும் அதிகமாகிறது. குழந்தைகள் மனதில் மதிப்பெண் குறித்த பாரத்தை ஏற்றிவைப்பது பெற்றோர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு.

நமக்குக் கல்வி அவசியம் தேவைதான். அதற்காக மதிப்பெண்கள் மட்டுமே வெற்றிகரமான வாழ்க்கையைத் தீர்மானிப்பது இல்லை. அதனால், தேர்வு நேரத்தில் ஏற்படும் குழப்பங்கள் மற்றும் பயத்தைப் போக்கி, நம்பிக்கை அளிக்க வேண்டியது பெற்றோரின் கடமை.

‘படிக்காமலேயே வாழ்வில் மிக உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் இருக்கிறார்கள்’ என்று பிள்ளைகளிடம் வாழ்க்கை குறித்த நம்பிக்கையை விதையுங்கள். தேர்வில் ஒருவேளை தோல்வி அடைந்தாலும், ”பரவாயில்லை… திரும்பவும் எழுதி பாஸ் பண்ணிக்கலாம். இது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை” என்று மன ஆறுதலைக் கொடுங்கள். ‘எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில்தான் பெற்றோர் இருக்கிறோம்’ என்பதை குழந்தைகளுக்குத் தெளிவுபடுத்துங்கள். ”ஃபெயில் ஆனா என்னப்பா? இதோட வாழ்க்கையே முடிஞ்சுபோகலை… இதுக்கு மேலயும் இருக்கு!” என்று நம்பிக்கை வார்த்தைகள் தந்து ஆசுவாசப்படுத்துங்கள்.  

இப்படி இணக்கமாக வீட்டுச் சூழ்நிலை இருந்தால், எந்தப் பிள்ளையும் ரிசல்ட் வந்ததும் வீட்டை விட்டு ஓடிப் போகாது, தற்கொலை எண்ணமும் தோன்றாது’ என்கிறார்.

Leave a Reply