தேர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆவுடையார் கோவில் ஆத்மநாத ஸ்வாமி கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. திருவாவடுதுறை ஆதீன நிர்வாகத்தின் பராமரிப்பில் இருந்து வரும் இந்த கோவிலில், கடந்த, 14ம் தேதி, ஆனி திருமஞ்சனத்திருவிழா கொடியேற்றுடன் துவங்கியது. விழாவையொட்டி, திரிபுரம் எரித்தல், ராஜ அலங்காரம், தாண்டவம், பிட்டுக்கு மண் சுமத்தல், என பல்வேறு அவதாரங்களாக, சிவபெருமான் எழுந்தருளினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று காலை, 10 மணிக்கு தேரோட்டம் நடந்தது. கோவில் முன்பிருந்து, மாட வீதிகளில் வலம் வந்த தேர், பகல், 12 மணிக்கு நிலைக்கு வந்தது. புதுக்கோட்டை மாவட்டம், மட்டுமின்றி தஞ்சை, திருவாரூர், நாகை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று, தேர் வடம் தொட்டு இழுந்தனர். இன்று, பத்தாவது நாள் திருவிழாவை முன்னிட்டு, சிவபெருமான் பிச்சாடணர் அலங்காரத்தில் வீதி உலா வருகிறார். நாளை, மாலை ஆறு மணிக்கு சிவபெருமான் குருபரனாகி, மாணிக்கவாசகருக்கு உபதேசம் அருளும் காட்சியுடன் திருக்கொடி இறக்கப்பட்டு, ஆனி திருமஞ்சனத் திருவிழா நிறைவடைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *