ராஜபக்சேவுக்கு கிரீடம் சூட்டும் முயற்சிக்கு வைத்துள்ள ஆப்பு!  தமிழக சட்டப் பேரவைத் தீர்மானம்: நாம் தமிழர் கட்சி

இலங்கையில் தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களவர்களுக்கு இணையாக சம உரிமை பெறும் வரை இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கி வைக்க வேண்டும் என்றும், அந்நாட்டுத் தலைநகர் கொழும்பில் நடைபெறவுள்ள காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டில் இந்திய பிரதமரோ அல்லது இந்திய அரசுக் குழுவோ கலந்துகொள்ளக் கூடாது என்றும் தமிழக சட்டப் பேரவையில் அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை நாம் தமிழர் கட்சி வரவேற்கிறது.

தமிழ்நாட்டு மக்கள் மட்டுமின்றி, உலகத் தமிழர்கள், மனித உரிமையாளர்கள், அமைப்புகள், கனடா போன்ற ஜனநாயக நாடுகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் இத்தீர்மானத்தை முன்மொழிந்த தமிழக முதலமைச்சரை நாம் தமிழர் கட்சி பாராட்டுகிறது.

காமன்வெல்த் அமைப்பானது சர்வதேச அரசியலில் எந்த வித முக்கியத்துவமும் இல்லாத ஒரு அமைப்புதான் என்றாலும், அதனை கொழும்புவில் நடத்த அனுமதிப்பதும், காமன்வெல்த் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டிற்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவை தலைமையேற்க அனுமதிப்பதும் காமன்வெல்த் அமைப்பின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணானதாகும்.

காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினராக இருக்கும் நாடுகளில் முழுமையான ஜனநாயகம் இருக்க வேண்டும், கருத்துச் சுதந்திரமும், நீதிமன்றங்கள் சுதந்திரமும் இருக்க வேண்டும் என்பதும், ஐ.நா.வால் நிறைவேற்றப்பட்ட மனித உரிமை பிரகடனங்கள் அனைத்தும் முழுமையாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதே அந்த அடிப்படைக் கொள்கைகள் ஆகும். ஆனால், உலகிற்கே தெரியும், மேற்கண்ட கொள்கைகள் எதுவும் இலங்கையில் கடைபிடிக்கப்படுவதில்லை என்பது. இலங்கை அரசால் அந்நாட்டின் பூர்வீகக் குடிகளான தமிழர்கள் திட்டமிட்ட இன அழித்தலுக்கு ஆளாக்கப்பட்டார்கள், இரு நாடுகளுக்கு இடையிலான போரில் கூட பயன்படுத்தக் கூடாது என்று அறிவிக்கப்பட்ட இராசயன குண்டுகள், கொத்துக் குண்டுகள் ஆகியன தமிழர்கள் மீது வீசப்பட்டு பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர், சிறுவர்களும், குழந்தைகளும் கூட இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். 90 ஆயிரம் தமிழப் பெண்கள் விதவையாகி நிற்கின்றனர். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொழும்பு நகரில் வெள்ளை வேன்களில் இராணுவத்தினரால் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களின் கதி என்ன ஆனது என்று இன்று வரை தெரியவில்லை. இப்படிப்பட்ட குற்றச்செயல்களை செய்த நாடு காமன்வெல்த் போன்ற ஒரு ஜனநாயக அமைப்பின் மாநாட்டை நடத்த தகுதி பெற்றது தானா?

ராஜபக்சே பதவி ஏற்ற 2006ஆம் ஆண்டிலிருந்து இதுவரை தமிழ், சிங்கள பத்திரிகையாளர்கள் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தமிழினப் படுகொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரசாயண ஆயுதங்கள் பற்றி ஆராயச் சென்ற பிரகீத் எக்னெலிகோடா என்கிற சிங்கள பத்திரிகையாளர் உட்பட பலர் கடத்தப்பட்டு காணாடிக்கப்பட்டுள்ளனர். ராஜபக்சே அரசின் கொடுங்கோல் ஆட்சிக்கு பயந்து 38 இலங்கை பத்திரிகையாளர்கள் அயல் நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். அந்நாட்டு தலைமை நீதிபதி ராஜபக்சேவால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இப்படி எல்லா வகையிலும் ஒரு சர்வாதிகார, காட்டாட்சி நடத்திவரும் ராஜபக்சேவை காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டுத் தலைமை பதவியில் அமர்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியுமா?

ஆனால் இந்திய மத்திய காங்கிரஸ் அரசு மட்டும் ராஜபக்சே அரசுக்கு தீவிரமாக முட்டுக்கொடுத்துக்கொண்டு நிற்கிறது. காரணம், ராஜபக்சே அரசின் முப்படைகளும் நடத்திய தமிழின அழிப்பிற்கு துணை நின்றது இந்திய மத்திய காங்கிரஸ் அரசு. தன்னாட்டு மக்கள் மீது பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தி, அழித்தொழித்த ராஜபக்சேவை போர்க் குற்றவாளி என்கிறது உலகம். ஆனால் அவருக்கு ஜனநாயக மகுடம் சூட்ட பார்க்கிறது இந்தியா!

ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்ட போருக்கு ஆதரவு வழங்கி துணை நின்ற இந்திய மத்திய காங்கிரஸ் அரசு, அந்தக் குற்றச் செயல்களில் இருந்து காபாற்ற ராஜபக்சேவுக்கு ஜனநாயக கிரீடம் சூட்ட முயற்சிக்கிறது. அதே நேரத்தில் தமிழர்களுக்கு அதிகார பரவல் பெற்றுத் தர முயற்சிப்பதாகவும் நாடகம் ஆடுகிறது. தமிழின அழித்தலுக்கு துணை போனது மட்டுமின்றி, சர்வதேச அளவில் ராஜபக்சே அரசுக்கு எதிராக வந்த எதிர்ப்பை மழுங்கடித்த இந்திய மத்திய காங்கிரஸ் அரசு, தமிழர்களின் மறுவாழ்விற்கு பல்லாயிரம் கோடி உதவுவதாகவும் பரப்புரை செய்து வருகிறது.

இந்திய மத்திய காங்கிரஸ் அரசின் இந்த இரட்டை நிலைக்கு தமிழக சட்டப் பேரவை நிறைவேற்றிய தீர்மானம் ஆப்பு வைத்துள்ளது. தமிழர்களுக்கு எதிராக இழைக்கபட்ட அநீதியை உண்மையிலேயே எதிர்ப்பதாக இருந்தால், கொழும்பு மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்துகொள்ளக் கூடாது என்றும், இந்திய அரசு சார்பாக எந்த ஒரு குழுவும் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது என்றும் தமிழக சட்டப் பேரவைத் தீர்மானம் சொல்கிறது. தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உதாசீனப்படுத்திவிட்டு, பிரதமரோ அல்லது இந்திய அரசுக் குழுவோ அல்லது அயலுறவு அமைச்சரோ கொழும்பு காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வார்களேயானால் அது, அவர்களின் இரட்டை முகத்திரையை தாங்களே அம்பலப்படுத்திக்கொள்வதாக அமையும். எனவே தமிழக சட்டப் பேரவைத் தீர்மானம் வரவேற்பிற்குரியதே.

கொழும்பு மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்று கனடா பிரதமர் முடிவெடுத்தது  அனைவரும் அறித்தது போல், இங்கிலாந்து உள்ளிட்ட மற்ற காமன்வெல்த் உறுப்பு நாடுகளின் தலைவர்களும் கொழும்பு மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது என்று அந்நாடுகளில் வாழும் தமிழர்கள் போராட வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *