டெல்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டபேரவை பதவிக்காலம் டிசம்பரிலும், சட்டீஸ்கர் மாநிலத்தின் பதவிக்காலம் ஜனவரியிலும் முடிகிறது. இந்த 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் மற்றும் ஏற்காடு சட்டப்பேரவை இடைத் தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் நேற்று அறிவித்தார்.

90 சட்டசபை தொகுதிகளை கொண்ட சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சல் அபாயம் உள்ளதால், இங்கு 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது.  நவம்பர் 11ம் தேதி முதல் கட்ட தேர்தலும், நவம்பர் 19ம் தேதி 2ம் கட்ட தேர்தலும் நடக்கிறது.

230 சட்டசபை தொகுதிகள் உள்ள மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 25ம் தேதிஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. 200 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் 1ம் தேதி தேர்தல் நடக்கிறது. 70 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட டெல்லியிலும், 40 சட்டபேரவை தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்திலும் டிசம்பர் 4ம் தேதி தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் உள்ள ஏற்காடு தொகுதி இடைத் தேர்தலும் டிசம்பர் 4ம் தேதி நடக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 50 ஆயிரம் வீரர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் நக்சல் ஆதிக்கம் உள்ள சட்டீஸ்கர் மாநிலத்தில் தீவிர பாதுகாப்பு பணியை மேற்கொள்வர். தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வருவதாகவும், தேர்தல் பார்வையாளர்கள் முழுவீச்சில் கண்காணிப்பு பணியில் ஈடுபவர் என தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் அறிவித்துள்ளார்.

Leave a Reply