டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் முடிவு, ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் சந்தர்ப்பவாதம் என்று, பா.ஜனதா தாக்குதல் தொடுத்து உள்ளது.

இதுகுறித்து பா.ஜனதா மூத்த தலைவரும், டெல்லி மேல்-சபை எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜெட்லி கட்டுரை ஒன்றில் கூறியிருப்பதாவது, ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவுக்கு மாற்றாக ஆட்சி அமைப்போம் என்றும், அந்த கட்சிகளின் ஆதரவை பெற மாட்டோம் என்றும் முதலில் கூறி இருந்தது. ஆனால், தற்போது காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைப்பதற்கு மக்கள் கருத்தை கேட்கிறோம் என்று கூறி, 75 சதவீத மக்கள் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளித்து இருப்பதாக அந்த கட்சி கூறி வருகிறது.

டெல்லி சட்டசபை தேர்தலில் 30 சதவீத வாக்காளர்கள்தான் அந்த கட்சிக்கு ஆதரவாக வாக்களித்து இருந்தனர். தற்போது 75 சதவீத மக்கள் ஆதரவு அளித்து இருப்பதாக கூறுவது, ‘வியப்பை அளிக்கும் புள்ளி விவரம்’ ஆகும். மக்கள் கருத்து என்ற முகமூடியின் மூலம், ஆம் ஆத்மி கட்சி தனது அரசியல் சந்தர்ப்பவாதத்தை மூடி மறைக்கிறது.

கடந்த 1975 ஆம் ஆண்டு நெருக்கடி நிலையின்போது இந்திராகாந்தி மேற்கொண்ட நடவடிக்கை போல், ஆம் ஆத்மியின் நடவடிக்கை அமைந்துள்ளது. அவர் அறிவித்த நெருக்கடி நிலையை மக்கள் ஆதரிப்பதாக கூறிய இந்திரா காந்தி, அவர் அப்போது அறிவித்த 20 அம்ச திட்டத்துக்கு மக்கள் அளித்துவரும் ஆதரவே சரியான சான்று என்று கூறி இருந்தார்.

ஆனால், இரண்டு ஆண்டுகள் கழித்து 1977 ஆம் ஆண்டில் பொதுத் தேர்தலை அவர் அறிவித்தபோது காங்கிரஸ் கட்சி வேரோடு வீழ்த்தப்பட்டது. இந்திராகாந்தியே தனது தொகுதியில் தோல்வியை தழுவினார். அளவுக்கு அதிகமான பிரசாரத்தில் உள்ள இயல்பான ஆபத்துகளில் இதுவும் ஒன்று.

அதே நேரத்தில் டெல்லி சட்டசபை தேர்தலில் 28 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. அந்த கட்சியின் அமைதியான, முறையான பிரசாரம் நல்ல பயனை அளித்து உள்ளது.

தற்போது காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைப்பதற்கு அந்த கட்சி மக்கள் கருத்தை அறிவது, தங்களுக்கு தாங்களே பரிமாறிக்கொள்வது (செல்ப் செர்விங்) போன்றது. இது மாற்று அரசியலுக்கான தொடக்கமா? அல்லது முடிவா? என்ற கேள்வியுடன் அந்த கட்டுரையை அருண்ஜெட்லி முடித்து இருக்கிறார்.

Leave a Reply