shadow

கும்பகோணம் மகாமகக் குளத்தின் வட கரையில் உள்ளது அருள்மிகு காசி விசுவநாதர் கோயில். இராவணனை அழிப்பதற்காக ஸ்ரீ இராமர் உருத்திராட்சம் பெற விரும்பினார். அதனால் அகத்திய முனிவரை அடைந்து தன் விருப்பத்தை வெளியிட்டார். அகத்திய முனிவர் கும்பகோணம் சென்று சில நாட்கள் தங்கியிருந்து காசி விசுவேசுவரரைத் துதித்து வந்தால் உருத்திராட்சம் பெறலாம் என்று ஆலோசனை வழங்கினார்.

அகத்திய முனிவரின் ஆலோசனைக் கிணங்க விசுவேசுவரரை வணங்கிய ஸ்ரீ இராமர் தனது உடலில் உருத்திர அம்சம் ஆரோகணிக்கப் பெற்றார். அதனால் இந்த இடம் காரோணம் என்று பெயர் பெற்றதாகவும் வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீ இராமர், சிவலிங்கமாய் வீற்றிருந்த விசுவேசுவரரை வணங்கிய லிங்கம் இன்றும் உள்ளது. இது இத்திருத்தலத்தின் சிறப்பாகும்.

இத்திருத்தலத்தில் இறைவன் சிவலிங்க மேனியாயும், தேவி தெற்கு முகமாக நின்றும் காட்சியளிக்கின்றனர். இக்கோயிலுள்ள நவ கன்னிகையர் சந்நிதியும் சிறப்புப் பெற்றதாகும்.

ஒரு சமயம் கங்கை, யமுனை முதலான நவ கன்னியர்கள் தங்களிடம் வந்து மூழ்குபவர் பாவம் தாங்கக் கூடவில்லை எனவும், அவற்றை போக்கியருள வேண்டுமென்றும் இறைவனிடம் வேண்டியதாகவும், சிவபெருமான் அருள்கொண்டு அக்கனியரை அழைத்து மகாமகக் குளத்தில் மூழ்கித் தங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்ள வழி செய்தார் என்றும் திருத்தலப் புராணம் கூறுகிறது. அந்த நவகன்னியர் சந்நிதியும் தென்முகமாக உள்ளது.

நவ கன்னியரை வணங்கி பல பெண்கள் தங்கள் மீதான பாவங்களை போக்கிக் கொள்வர் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply