இந்திய எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க ரோந்துக்கப்பலில் இருந்த 34 மாலுமிகள் கைது செய்யப்பட்டனர், ஏராளமான பயங்கர ஆயுதங்கள் கியூ பிரிவு காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன. இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்த ‘‘சீ மேன் கார்டு ஓகியோ’’ என்ற ரோந்து கப்பலை தூத்துக்குடி அருகே இந்திய கடலோர காவல் படையினர் கடந்த 12-ந்தேதி மடக்கி பிடித்தனர்.

அந்த கப்பலில் ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் இருந்தன. அந்த கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

கப்பலில் இருந்த மாலுமிகள் மற்றும் பாதுகாவலர்களிடம் இந்திய கடற்படை, கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்பு குழுமம் , ஐ.பி., ‘‘கியூ’’ உள்ளிட்ட மத்திய-மாநில உளவுப்பிரிவு போலீசார், உள்ளூர் போலீசார் கூட்டாக விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த கப்பல் அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ‘‘அட்வன் போர்ட்’’ என்ற தனியார் மெரைன் பாதுகாப்பு நிறுவனத்துக்கு சொந்தமான கப்பல் என்பது தெரிய வந்தது. அந்த கப்பலில் 35 அதிநவீன செமி ஆட்டோ மெட்டிக் துப்பாக்கிகள், 5,700 ரவுண்ட் தோட்டாக்கள் இருந்தன. பயிற்சி பெற்ற 25 பாதுகாவலர்கள், 10 கப்பல் மாலுமிகள் இருந்தனர். மாலுமிகளில் 8 பேர் இந்தியர்கள். அவர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர். பாதுகாவலர்கள் அனைவரும் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன், எஸ்டோனியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள்.

அந்த அமெரிக்க கப்பலுக்கு தூத்துக்குடியில் இருந்து திருட்டுத்தனமாக டீசல் சப்ளை செய்தது உள்ளிட்ட பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து ஆயுதங்கள் வைத்திருத்தல், அளவுக் கதிகமாக துப்பாக்கி தோட்டாக்கள் வைத்திருத்தல், இந்திய கடல் பகுதியில் சட்டவிரோதமாக டீசல் பரிமாற்றம் செய்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கப்பலில் இருந்த 25 பாதுகாவலர்கள், 10 மாலுமிகள் மீது தருவை குளம் கடலோர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் விரிவான அறிக்கையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ரவிக்குமார், அந்த கப்பலை நேரில் பார்வையிட்டு விசாரணை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதால் இந்த வழக்கு கடலோர காவல் படையிடம் இருந்து ‘கியூ’ பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.
தமிழக ‘கியூ’பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பவானி ஈஸ்வரி கடந்த 16-ந்தேதி தூத்துக்குடி வந்தார். அவரிடம் வழக்கு தொடர்பாக ஆவணங்கள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டன. கப்பல் மாலுமிகள் மற்றும் பாதுகாவலர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பவானி ஈஸ்வரி தொடர்ந்து விசாரணை நடத்தினார்.

அமெரிக்க கப்பல் விவகாரத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்ததால் மத்திய உளவுப்பிரிவான ‘‘ரா’’ அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் நேற்று தூத்துக்குடி வந்தனர். ‘‘ரா’’ அமைப்பின் உதவி கமிஷனர் சசிகுமார் தலைமையில் 2 கள அதிகாரிகள் முதலில் ரகசிய விசாரணை நடத்தினர்.

அந்த வழக்கு விவரங்களை கேட்டறிந்த அவர்கள், அமெரிக்க கப்பலின் மாலுமிகள் மற்றும் பாதுகாவலர்களிடமும் விசாரணை நடத்தினார்கள். நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் ‘‘கியூ’’ பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பவானி ஈஸ்வரி தனது விசாரணையை முடித்தார். இந்த வழக்கில் அனைவரையும் இன்று கைது செய்யப்போவதாக கப்பல் மாலுமிகள் மற்றும் ஊழியர்களிடம் தெரிவித்தார். இதனையடுத்து நள்ளிரவு ஒரு மணிக்கு பிறகு கப்பலில் இருந்த 35துப்பாக்கிகள், 5,700 தோட்டாக்களை ‘‘கியூ’’ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றை தூத்துக்குடி துறை முகத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புபடைக்கு சொந்தமான ஆயுதக்கிடங்கில் ஒப்படைத்தனர்.

இன்றுகாலை 8 மணியளவில் அமெரிக்க கப்பலின் கேப்டன் டுட்னிக் வாலன்ஸ்டின், மாலுமிகள், 25 பாதுகாவலர்கள் உள்பட 34 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் முத்தையாபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இன்று மதியம் அல்லது பிற்பகலில் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படலாம் என்று தெரிகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *