shadow

arima nambiதமிழில் இப்படி ஒரு விறுவிறுப்பான படத்தை பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. கதையின் முதல் பத்து நிமிடங்கள் மட்டுமே கொஞ்சம் மெதுவாக நகர்கிறது. அதன்பின்னர் ஆரம்பிக்கும் திரைக்கதையின் வேகம் படம் முடியும்போதுதான் நிற்கிறது. இயக்குனர் ஆனந்த் ஷங்கர் குருநாதர் ஏ.ஆர்.முருகதாஸின் பெயரை காப்பாற்றியிருக்கின்றார் என்றுதான் சொல்லவேண்டும். இவருக்கு கோலிவுட்டில் நல்ல எதிர்காலம் இருக்கின்றது.

சென்னையில் உள்ள பப் ஒன்றில் அறிமுகமாகும் விக்ரம் பிரபு, மற்றும் ப்ரியா ஆனந்த், இரண்டாவது நாளும் சந்திக்கின்றனர். பப்பில் அடித்த சரக்கு போதவில்லை என்று கூறி தன்னுடைய வீட்டுக்கு விக்ரம் பிரபுவை அழைத்து செல்கிறார் ப்ரியா ஆனந்த். அங்கு இருவரும் மப்பில் இருக்கும்போது ப்ரியா ஆனந்தை ஒரு கும்பல் கடத்துகிறது.

ப்ரியா ஆனந்த்தை காப்பாற்ற முயன்று தோல்வி அடைந்த விக்ரம் பிரபு போலீஸுக்கு போகிறார். ஆனால் போலீஸ் இவர் சொல்வதை நம்பவில்லை. மீண்டும் போலீஸுடன் வந்து ப்ரியா ஆனந்த வீட்டை வந்து பார்க்கிறார் விக்ரம் பிரபு. ஆனால் அந்த வீட்டின் காவல்காரர் ப்ரியா ஆனந்த வெளியூர் சென்றுள்ளார் என்று கூறுகிறார். முந்தைய தினம் கடத்தல் நடந்ததற்காக எவ்வித அறிகுறியும் இல்லை.

அதன்பின்னர் ப்ரியா ஆனந்தை கடத்தியவர் யார் என்பதை அறிய நல்ல போலீஸ்காரரான எம்.எஸ்.பாஸ்கர் துணையுடன் விக்ரம் பிரபு களமிறங்குகிறார். ப்ரியாவின் கடத்தலில் ஒவ்வொரு முடிச்சாக அவர் அவிழ்க்கும் விதம், உண்மையிலேயே செம விறுவிறுப்பு. கடைசியாக கடத்தியது யார் என்று தெரியும்போது விக்ரம் பிரபுவுக்கு மட்டுமல்ல, படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் செம் ஷாக் கொடுக்கின்றார் இயக்குனர்.

சமீபத்தில் டெல்லி ஓட்டல் அறை ஒன்றில் தற்கொலை செய்துகொண்ட மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தாவின் கதையை கொஞ்சம் உல்டா செய்து விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குனர் ஆனந்த் ஷங்கர். வாழ்த்துக்கள்

காதல் காட்சியில் சொதப்பும் விக்ரம் பிரபு, ஆக்சனுக்கு மாறிய பின்னர் கலக்குகிறார். இவர் தேர்ந்தெடுக்கும் கதையில் இருந்தே தெரிகிறது இவர் கோலிவுட்டில் தேறிவிடுவார் என்று. சிவாஜி, பிரபுவின் பெயரை காப்பாற்றுவார் என நம்பலாம்.

ப்ரியா ஆனந்துக்கு பெரிதாக வேலையில்லை. கடத்தப்பட்டு காணாமல் போவது கதையில் மட்டுமல்ல, திரையிலும்தான். அவ்வப்போது வந்து நடிக்கிறார்.

எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பு பாராட்டும்படி அமைந்துள்ளது. இசை டிரம்ஸ் சிவமணி. இந்த படத்திற்கு பாடல்கள் தேவையில்லை. படத்தின் வேகத்தை பாடல்கள் குறைக்கின்றது. இருப்பினும் சிவமணி பின்னணி இசையில் தூள் கிளப்புகிறார்.

மொத்தத்தில் அரிமா நம்பி,, அரியவகை படம் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Reply