shadow

10577025_793666730738358_6695119617628859214_n

எளிமைக்கும் பக்திக்கும் ஓர் எடுத்துக்காட்டு என்றால் அவர் அனுமன் தான்! வீரமும் விவேகமும் நிறைந்த ஒருவர் பணிவுக்கும் உதாரணப் புருஷராய் இருப்பது அரிது.

பலம் பொருந்தியவர் யாருக்கும் பணியத் தேவையில்லை. ஆனால் பெரும் வல்லவரான அனுமான் இராமதாசனாய் வாழ்ந்து பக்தியின் மேன்மையையும் உன்னதத்தையும் உலகுக்குச் சொல்லிக் கொடுத்துள்ளார்.

பிரிந்த இராமனும் சீதையும் அனுமாறின்றி இணைந்திருக்க முடியாது. ஆனாலும் அதை சாதித்த அகம்பாவம் அவரிடம் துளியும் கிடையாது. அவர் தன்னை இராமனின் கருவியாக மட்டுமே பார்த்தார். இலங்கை சென்றார், சீதையைக் கண்டார்.
இராவணனை வெல்ல வழி வகுத்தார், இழந்த மகிழ்ச்சியை மீட்டுக் கொடுத்தார் இராமனுக்கு!

பக்தி என்பது அன்பின் வெளிப்பாடு. பக்திக்கு முதல் தேவை மமதை இன்மை. ஆங்கிலத்தில் தூய பக்தியை unconditional love என்பார்கள். எதையும் எதிர்ப்பார்க்காத அன்பே பக்தி. பக்தன் என்பவன் தனக்கு மேல் ஒருவர் இருப்பதை உணர்வுபூர்வமாகப் புரிந்துகொண்டு நடக்கிறான்.

ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் கருடனை பெரிய திருவடி என்றும் ,அனுமனை “சிறிய திருவடி”என்றும் அழைப்பர்கள்.

கம்பர் தமது ராமாயணத்தின் தொடக்கத்தில்
சிறிய திருவடிக்கு (ஆஞ்சநேயருக்கு) காப்புச் செய்யுள் ஒன்று இயற்றியுள்ளார்.

அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றை தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைகண்டு ; அயலான் ஊரில
அஞ்சிலே ஒன்று வைத்தான்
அவன் நம்மை அளித்து காப்பான்||

என்பது அந்தச் செய்யுள். இதில், அஞ்சிலே ஒன்று என்ற சொல்தொடர் ஐந்து முறை வருகின்றது.

நிலம், நீர், தீ, வாயு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களை உத்தேசித்தே,அஞ்சிலே என்ற சொல்லை ஐந்து முறை பிரயோகித்திருக்கிறார் கம்பர். வாயு புத்திரனான அனுமான் கடலைத் தாவி, ஆகாய மார்க்கமாகச் சென்று, பூமிதேவியின் மகளான சீதாபிராட்டியைக் கண்டு, இலங்கையில் தீயை வைத்து வந்தனன். அன்னவன் நமக்குத் தஞ்சம் என்பதே இந்தச்
செய்யுளில் காணும் பொருள்.

பஞ்சபூதங்களில் ஒன்றாகிய வாயு பெற்ற பிள்ளை ஆதலால், அஞ்சிலே ஒன்று பெற்றான் என்றது அனுமானைக் குறிக்கிறது. அவன் கடந்து சென்ற கடல், பஞ்ச பூதங்களுள் ஒன்று ஆதலால், அஞ்சிலே ஒன்றைத் தாவி எனப்பட்டது. அவன் பறந்து சென்ற மார்க்கமாகிய ஆகாயம் பஞ்ச பூதங்களுள் ஒன்று. ஆதலால் அஞ்சிலே ஒன்று ஆறாக எனப்பட்டது. அவனால் காணப்பட்ட சீதையின் தாயாகிய பூமி, பஞ்ச பூதங்களுள் ஒன்றாதலால், அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு எனப்பட்டது. அவன் இலங்கையில் வைத்த தீயானது பஞ்ச பூதங்களில் ஒன்று ஆதலால், அயலாரூரில் அஞ்சிலே ஒன்று வைத்தான்எனப்பட்டது.

விளக்கம்: பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர்

Leave a Reply