விஜய்யுடன் நடித்தால்தான் நல்ல நடிகையா? ஆண்ட்ரியா ஆவேசம்

கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ‘தரமணி’ படத்தில் நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றவர் நடிகை ஆண்ட்ரியா. ஆனால் அவருக்கு அந்த படத்தை அடுத்து வேறு வாய்ப்புகளே கிடைக்கவில்லை. விஜய்யின் பைரவா படத்தில் மூன்று பாடல்கள், ஒருசில காட்சிகளில் மட்டும் நடித்து சுமாரான நடிப்பை கொடுத்த கீர்த்திசுரேஷுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. விஜய்யுடன் நடித்தால்தான் வாய்ப்பு கிடைக்குமா? அவருடன் நடித்தால்தான் பெரிய நடிகையா? என ஆண்ட்ரியா நிகழ்ச்சி ஒன்றில் ஆவேசமாக பேசியுள்ளார்.

இதுகுறித்து அந்த நிகழ்ச்சியில் ஆண்ட்ரியா மேலும் பேசியதாவது: திரைத்துறை ஆணாதிக்கம் நிறைந்த ஒன்றுதான். சமீபத்தில் நான் தரமணி என்ற படத்தில் நடித்தேன். தரமணி படத்துக்குப் பிறகு நான் இன்னும் ஒரு படத்தில் கூட ஒப்பந்தம் ஆகவில்லை. ஆனால் விஜய்யுடன் நடிக்கும் ஒரு நாயகி, வெறும் 3 பாடல்களுக்கு வந்து நடமாடினால் போதும், அந்தப் படம் வெளியாகி ஹிட் ஆகிவிட்டால் உடனே அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியும்.

எல்லாருக்கும் தரமணி பிடித்திருந்தும், என் நடிப்பை பலர் பாராட்டியிருந்தும் எனக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கூட வரவில்லை? ஒரு பெண், வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கும்போது, அதில் சில கடினமான கேள்விகளை கேட்கும்போது, என்னால் வெறும் அழகு பொம்மையாக மட்டும் திரையில் இருப்பதில் மகிழ்ச்சியில்லை என்று சொல்லும்போது, அதைத் தாண்டி ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும்போது, அதை பலரால் ஏற்கமுடிவதில்லை.

திரையில் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும் அதே நேரத்தில் என்னால் நன்றாக நடிக்கவும் முடியும். எனக்கான கதாபாத்திரங்களை எழுதுங்கள். வெறுமனே திரையில் வந்து, இடுப்பை ஆட்டி, கவர்ச்சிகரமான உடைகளில் தோன்ற என்னை அழைக்காதீர்கள். அது எனக்கு எந்த மகிழ்ச்சியையும் தராது.

என்னால் ஒரு காட்சியில் நிர்வாணமாகக் கூட நடிக்க முடியும். முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிக்கொண்டே தன்னைத் தானே காட்சிப்பொருளாக்கிக் கொள்கிறார்கள் சில நடிகைகள். அவர்கள் நடிப்பதை விட நான் நிர்வாணமாக நடிப்பது படத்துக்கு ஏற்றதாகவும், முக்கியமானதாகவும் இருக்கும்.

இதுதான் தமிழ் சினிமாவில் எனக்கு இருக்கும் பிரச்சினை. ஆணாதிக்கமிக்க சினிமா சூழலில் மிக மெதுவாக இது மாறிக்கொண்டு வருகிறது. மிக மிக மெதுவாக.

பாலிவுட்டில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்கள் வருகிறது. ஆனால் இப்போது அப்படி நடிப்பவர்கள் ஆரம்ப நாட்களில் எப்படிப்பட்ட படத்தில் நடித்தார்கள்? தீபிகா படுகோன் ஷாரூக் கான் ஜோடியாகத் தான் அறிமுகமானார். ரன்பீர் கபூருடன் நடித்தார். பிறகு தான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறார்.

நயன்தாரா விஜய், அஜித், சூர்யா, ரஜினி என எல்லாருடனும் நடித்த பிறகுதான் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடிந்தது. ஆனால் ஏன் ஒரு ஆண்ட்ரியாவால் வெறும் நல்ல கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாது?

ஒரு நடிகையின் மதிப்பு அவருடன் நடிக்கும் சக நடிகர்களை வைத்து ஏன் நிர்ணயிக்கப்பட வேண்டும்? ‘இவங்க ரஜினியோட படம் பண்ணிருக்காங்க, ரொம்ப பெரிய ஹீரோயின்’ என ஏன் சொல்ல வேண்டும்? ஏன் வலுவான, நல்ல கதாபாத்திரங்களில் நடித்து அவரால் பெரிய ஹீரோயினாக முடியாது? அதுதான் என் கேள்வி. துறையை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *