shadow

nellai mayorநெல்லை மாநகர மேயராக அதிமுக வேட்பாளர் புவனேஸ்வரி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரிக்கை விடுத்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நேற்று மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த சையது அலி பாத்திமா என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:

தேர்தல் விதிகளின்படி, எனது வேட்பு மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து சமர்ப்பித்திருந்தேன். இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலின்படி, எனது விவரம், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண் உள்ளிட்ட விவரங்களைப் பூர்த்தி செய்திருந்தேன். இருப்பினும், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறவில்லை எனக் கூறி எனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் நிராகரித்து விட்டார்.

மேலும், இரு வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்ற நிலையில், புவனேஸ்வரி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்திருக்கிறார். அதிமுக வேட்பாளரை போட்டியின்றித் தேர்வு செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், எனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் தள்ளுபடி செய்திருக்கிறார்.
ஆகவே, திருநெல்வேலி மேயராக புவனேஸ்வரி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று தனது அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், தேர்தல் அலுவலர்களான திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணையை அவர் வரும் 16-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Leave a Reply