தூத்துக்குடி கடல் பகுதியில் அனுமதியின்றி நுழைந்ததால் பிடிபட்ட கப்பலின் தலைமை பொறியாளர், பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சட்டையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.இந்திய கடல் பகுதிக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக அமெரிக்க நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பல் சுற்றிவளைக்கப்பட்டது. பின்னர் கப்பலில் இருந்த மாலுமிகள், பாதுகாப்பு வீரர்கள் உள்ளிட்ட 33 பேர் கடந்த 19-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.கப்பல் பராமரிப்புப் பணிக்காக தலைமைப் பொறியாளர் ஷிடரன்கோ வேளரியும், கப்பலின் கேப்டன் டட்னிக் வாலன்டைனும் கப்பலிலேயே இருந்தனர். பராமரிப்புப் பணிக்கு கப்பல் நிறுவனம் மாற்று ஏற்பாடு செய்ததும் இவர்களும் கைது செய்யப்படுவார்கள் என க்யூ பிரிவு போலீஸார் தெரிவித்திருந்தனர்.இந்நிலையில், தலைமைப் பொறியாளர் ஷிடரன்கோ வேளரி சனிக்கிழமை பிற்பகலில் கப்பலில் உள்ள ஒரு பகுதியில் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்ள முயன்றாராம். இதையடுத்து க்யூ பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்ட, தலைமை பொறியாளரும், கப்பல் கேப்டனும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை இரவு ஷிடரன்கோ வேளரி சிறைக்குள் தான் அணிந்திருந்த சட்டையால் தூக்கிட்டு கழுத்தை இறுக்கி மீண்டும் தற்கொலைக்கு முயன்றாராம். இதைபார்த்ததும் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரும், அவருடன் தங்கியிருந்தவர்களும் அவரை மீட்டனர். இதனால், காயங்களின்றி அவர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக சிறை கண்காணிப்பாளர் கனகராஜ் விசாரணை நடத்தினார். தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply