பால்டேவிட் டென்ப் டவர் ஒரு வாரம் இலங்கையில் தங்கினார். இதனால் ‘கியூ’ பிரிவு போலீசாருக்கு சந்தேகம் வலுத்து உள்ளது. பால்டேவிட் டென்னிஸ் டவர் தனியாக கப்பலுக்கு வந்தாரா? அவர் இலங்கையில் தங்கியது ஏன்? அங்கிருந்து ஆயுதங்களை வாங்கி வந்தாரா? என்பது போன்ற பல்வேறு கோணத்திலும் விசாரணை நடக்கிறது. இதற்கிடையில் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தூத்துக்குடி கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு மீது நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, அரசு தரப்பில் வக்கீல் ஜென்சியும், கப்பல் நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் அஞ்சுமன் திவாரி மற்றும் ஜவகர் ஆகியோரும் ஆஜரானார்கள்.
அப்போது கப்பல் நிறுவனம் தரப்பில் வாதாடிய வக்கீல்கள், “கப்பல் தருவைகுளத்தில் இருந்து 19 கடல் மைல் தொலைவில் பிடிக்கப்பட்டு இருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் உள்ளது. அது சர்வதேச கடல் பகுதி ஆகும். இந்திய கடல் பகுதி அல்ல. இது பாதுகாப்பு கப்பல் என்பதால் ஆயுதங்கள் வைக்கப்பட்டு உள்ளது.இந்த ஆயுதங்களுக்கு ஆவணங்கள் உள்ளன. கப்பலோ அல்லது அதில் இருந்த ஆயுதங்களோ சட்ட விரோதமானவை அல்ல. தற்போது கப்பலில் ஊழியர்கள் யாரும் இல்லை. அந்த கப்பலுக்கு யார் பொறுப்பு? இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே போலீசார் முழுமையாக விசாரித்து உள்ளனர். எனவே போலீஸ் காவல் தேவை இல்லை” என்று வாதிட்டனர்.
போலீஸ் பக்ருதீன் கைது செய்யப்பட்டதில் விதி மீறலா?
போலீஸ் பக்ருதீன் கைது செய்யப்பட்ட முறையில் விதிகள் மீறப்பட்டதா? என்பதுபற்றி அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக கூறி பக்ருதீன் என்ற போலீஸ் பக்ருதீன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் ஐகோர்ட்டில் இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெ.அப்துல் ரஹீம் மனு தாக்கல் செய்தார். அதில், பக்ருதீன் எனது நண்பர். அவரை கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதை உறுதி செய்ய போலீசார் மறுக்கின்றனர். எனவே அவரை என்கவுண்டர் என்ற பெயரில் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனரோ என்ற அச்சம் உள்ளது என்று கூறியிருந்தார்.இதற்கு பதில் அளித்த அரசு, பக்ருதீனை கைது செய்திருக்கிறோம். இதுதொடர்பான தகவலை அவரது தாயாரிடம் கூறிவிட்டோம் என்று குறிப்பிட்டது. இந்த நிலையில் ஐகோர்ட்டில் கூடுதல் மனு ஒன்றை அப்துல் ரஹீம் தாக்கல் செய்துள்ளார். நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், ஏ.ஆறுமுகசாமி முன்பு அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார். அவர் கூறியதாவது:- பக்ருதீனின் கைது குறிப்பாணையின் நகலை வேலூர் கோர்ட்டில் இருந்து வாங்கினோம். அதில், அவரை கைது செய்ததாக கூறி, திருவண்ணாமலை சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் கே.அண்ணாதுரை கையெழுத்திட்டுள்ளார். இந்த நிலையில் 15-ந்தேதி அரசாணை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டது. அதில், பக்ருதீனை கைது செய்த லெட்சுமணன், ரவீந்திரன் மற்றும் வீரகுமார் ஆகியோருக்கு சன்மானம் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், அந்த கைது குறிப்பாணை தவறானது என்று தெரிய வருகிறது 4-ந்தேதி இரவு பக்ருதீன் கைது செய்யப்பட்டார். கைதின்போது அவர் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்று கைது குறிப்பாணையில் கூறப்பட்டுள்ளது. மறுநாளில் மாஜிஸ்திரேட்டு முன்பு நீதிமன்ற காவலுக்காக (ரிமாண்டுக்காக) பக்ருதீனை ஆஜர்படுத்தினர்.அதைத்தொடர்ந்து மாஜிஸ்திரேட்டு பிறப்பித்த நீதிமன்ற காவல் ஆணையில் (ரிமாண்டு ரிப்போர்ட்டு), பக்ருதீனின் வலது கண் பக்கத்தின் காயம் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். எனவே போலீசார் தாக்கியதால்தான் பக்ருதீன் காயமடைந்துள்ளார் என்பதை அறிய முடிகிறது. பக்ருதீனை எந்த இடத்தில், எப்போது கைது செய்தனர் என்பதை உறுதி செய்வதற்காக அருகில் உள்ள சாட்சிகளிடம் கையெழுத்து வாங்க வேண்டும். அப்படிப்பட்ட சாட்சி கையெழுத்து எதுவும் கைது குறிப்பாணையில் காணப்படவில்லை. மேலும் பக்ருதீனை கைது செய்ததும் அவரது தாயாருக்கு அதுபற்றிய தகவலை போலீசார் கொடுத்ததாக கூறியுள்ளனர். ஆனால் அந்த தகவலை கொடுத்ததற்கான ஆதாரம் எதையும் இதுவரை அரசு தாக்கல் செய்யவில்லை.ஒருவரை கைது செய்யும்போதும், எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பதை விதிமுறையாக டி.கே.பாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வகுத்தளித்துள்ளது. ஆனால் இதுபோன்ற விதிகளை மீறி பக்ருதீனை போலீசார் கைது செய்தனர்.எனவே விதிகளை மீறிய சட்டவிரோதமாக பக்ருதீனை கைது செய்த போலீஸ் அதிகாரிகள் மீது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வாதிட்டார்.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், ஏ.ஆறுமுகசாமி ஆகியோர் இந்த மனு தொடர்பாக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று அரசுக்கு நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டனர். மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Leave a Reply