shadow

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் பங்கேற்போர் பொது நுழைவுத் தேர்வில் பங்கேற்க முடியாது

Entrance-Examநாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் ஜூலை 24-ஆம் தேதி நடைபெறும் தேசிய தகுதிகாண் தேர்வில் பங்கேற்க இயலாது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு தேசிய தகுதி காண் தேர்வை (என்.இ.இ.டி.) நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை தேசிய தகுதி காண் தேர்வின் முதல் கட்டம் என்று கருத்தில் கொள்ள வேண்டும். அடுத்த கட்டமாக ஜூலை 24-ஆம் தேதி 2-ஆம் கட்ட தேசிய தகுதி காண் தேர்வு நடத்தப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள அகில இந்திய நுழைவுத் தேர்வு தமிழகத்தில் சென்னையில் நடைபெறகிறது. தமிழகத்தைச் சேர்ந்த 26 ஆயிரம் மாணவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

இரண்டு தேர்விலும் பங்கேற்க முடியாது: அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதுபவர்கள் ஜூலை 24-ஆம் தேதி நடைபெறும் தேசிய தகுதி காண் தேர்வில் பங்கேற்க இயலாது.

பெரும்பாலான மாணவர்கள் முதல் தேர்வை தவிர்த்துவிட்டு, ஜூலை மாதம் நடைபெறும் தேர்வை எழுதலாம் என்று நினைக்கிறார்கள். அப்படி இருந்தால் தேர்வுக்கு தயார் செய்வதற்கு கூடுதல் அவகாசம் கிடைக்கும் என்றும் கருதுகிறார்கள். ஆனால் ஒரு மாணவருக்கு ஒருமுறை மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கணக்கீடு எவ்வாறு? மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய அளவில் தகுதி காண் தேர்வு நடத்தப்படும்பட்சத்தில் மாணவர் சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண்கள் ரேங்க் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

இது தொடர்பாக முன்னாள் மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் கனகசபை கூறியது: தமிழகத்தில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதற்கு முந்தைய காலங்களில் மாணவர்களின் பிளஸ்}2 தேர்வில் பெற்ற மதிப்பெண் 200 மதிப்பெண்ணுக்கு கணக்கிடப்படும். நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண் 50 என மொத்தம் 250 மதிப்பெண்ணுக்கு கணக்கிடப்பட்டு தகுதிப் பட்டியல் வெளியிடப்படும். இந்த முறையை தேசிய தகுதிகாண் தேர்வுக்கு பின்பற்ற முடியாது.

தகுதி காண் தேர்வில் பெறும் மதிப்பெண்ணைக் கொண்டு மட்டுமே ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படும். அதில் 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படும். வெளியிடப்பட்ட ரேங்க் பட்டியல் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்றார் அவர்.

மேல் முறையீடு: இந்நிலையில் மருத்துவ பொது நுழைவுத் தேர்வு அமலில் இல்லாத தமிழகத்தில் தேர்வு நடத்துவதை கட்டயமாக்க வகை செய்யும் உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழகத்தின் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மாணவர்களுக்கு பதற்றம் வேண்டாம்!

பொது நுழைவுத் தேர்வு குறித்து மாணவர்கள் பதற்றமடைய வேண்டாம் என்று தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து சுகாதாரத் துறை உயரதிகாரிகள் கூறியது:

தமிழகத்தில் மருத்துவ, பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வை நடத்த வேண்டாம் என்று 2007-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்துக்கு அப்போதைய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் ஒப்புதல் அளித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் இதுவரை நடைபெற்ற விவாதங்களில் குடியரசுத் தலைவரின் இந்த ஒப்புதலை ரத்து செய்யவில்லை.

எனவே மருத்துவ நுழைவுத் தேர்வை பொருத்தவரை தமிழக மாணவர்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் என்ற பாதுகாப்பு கவசம் உள்ளது. மேலும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கூறி தமிழகத்தின் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே தமிழக மாணவர்கள் பொது நுழைவுத் தேர்வு குறித்து பதற்றம் அடைய வேண்டாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply