shadow

ஆடிக்கார் ஐஸ்வர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன். சென்னை ஐகோர்ட் உத்தரவு

aiswaryaகடந்த மாதம் 2ஆம் தேதி சென்னை திருவான்மியூர் பழைய மகாபலிபுரம் சாலையில் மதுபோதையில் கார் ஓட்டி சென்ற பிரபல தொழிலதிபர் மகள் ஐஸ்வர்யா, தொழிலாளி ஒருவர் மீது காரை மோதியதால் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி முனுசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். குடிபோதையில் காரை வேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியதாக, ஐஸ்வர்யாவை சேத்துப்பட்டு போலீஸார் கைது செய்தனர்.

தனக்கு ஜாமீன் வேண்டி ஐஸ்வர்யா தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் கடந்த வாரங்களில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மீனும் ஒருமுறை அவர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு நடைபெற்று வந்த நிலையில் பின்னர் இந்த வழக்கு நீதிபதி சொக்கலிங்கம் அமர்வுக்கு மாற்றப்பட்டது.

ஐஸ்வர்யா ஜாமீன் மனுமீதான இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஜாமீன் மனு மீது நீதிபதி சொக்கலிங்கம் நேற்று தீர்ப்பு அளித்தார்.அவர் பிறப்பித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மனுதாரர் கடந்த 42 நாள்களாக சிறையில் உள்ளார். இவற்றை கருத்தில் கொண்டு, அவருக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்குகிறேன். அவர் ரூ.1 லட்சம், அதே தொகைக்கு இரு நபர் உத்தரவாதம் வழங்கி, சைதாப்பேட்டை 18-ஆவது பெருநகர குற்‌றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதற்காக, ரூ.1 லட்சம் ரொக்கமாகச் செலுத்த வேண்டும். இந்த இழப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உரிய மனுவைத் தாக்கல் செய்து, தகுந்த அடையாள ஆவணங்களுடன் இழப்பீட்டை கீழ் நீதிமன்றத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

அடுத்த இரண்டு வாரத்திற்கு, மனுதாரர் ஐஸ்வர்யா விசாரணை அதிகாரி முன்னிலையில் காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜாரகி கையெழுத்திட வேண்டும். மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, சென்னை மாநகரை விட்டு வெளியே செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply