shadow

தென்னாட்டின் கலைத் திறனுக்கு சான்றாகவும், சோழர் காலத்து கட்டடக் கலைக்கு அத்தாட்சியாகவும் திகழும் தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் வரலாற்றுச் சிறப்பும் கொண்டதாகவும், தஞ்சை பெரியகோயிலிற்கு இணையாக மக்களை ஈர்ப்பதாகவும் உள்ளது.

ஆன்மீகப் புகழ் பெற்ற கும்பகோணத்திலிருந்து இத்திருத்தலம் 2 கி.மீ. தூரத்தில்தான் உள்ளது. ஐராவதேசுவரர் கோயில் அமைந்துள்ள இந்த ஊரின் பெயர் ஒரு காலத்தில் இராசராசேசுவரம் என்றுதான் வழங்கப்பட்டதாகவும், அதுவே பின்னாளில் மருவி தாராசுரம் என்று ஆனது என்றும் கூறுகின்றனர்.

இக்கோயிலுள்ள கல் சிற்பங்கள் ஒவ்வொன்றின் விளக்கத்தையும் கேட்டறிந்து அனுபவிக்க வேண்டும். வெளியிலுள்ள அழகிய நந்தியில் இருந்து கோயிலிற்குள் இருக்கும் தூண்கள் ஒவ்வொன்றிலும் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள் வரை அனைத்தும் சிறப்பானவை.

கோயிலின் முன் உள்ள பலி பீடத்தைத் தட்டினால் பல விதமான ஓசைகள் கேட்கின்றன. யானை, காளை ஆகிய இரண்டையும் இணைத்து ஒன்றின் தலையில் மற்றொன்றைக் காணும் தத்ரூப சிறபமும், நடன மாது ஒருவர் இரண்டு தாள வாத்தியக்காரர்களோடு இணைந்து ஒன்றாக ஆடுகின்ற சிற்பம்.

இக்கோயிலின் மண்டபத்திற்கு ஏறிச் செல்லும் படியில் யானைகள் இரு பக்கங்களிலும் தேரை இழுத்துச் செல்வதுபோல் உள்ள சிற்பத்தின் சக்கரம், இன்றுவரை இந்திய கலையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. அத்தனை அழகாக செதுக்கப்பட்டுள்ளது. இப்படி இன்னும் ஏராளமான கலை வண்ணங்களை இக்கோயிலில் காணலாம்.

இந்திரனின் வாகனமான ஐராவதம் என்கிற யானை துருவாச முனிவரின் சாபத்தால் அதன் வெள்ளை உருவம் மாறி கருமை நிறம் அடைந்தது. தன் நிறம் மாறியதால் வருத்தமுற்ற ஐராவதம் இத்தலத்திற்கு வந்து இங்கு எழுந்தருளிய சிவபெருமானை – ஈசுவரனை வணங்கி சாபத்திலிருந்து விடுதலை பெற்றதாகவும், அதனால்தான் இங்குள்ள இறைவனின் பெயர் ஐராவதேசுவரர் என்று வழங்கலாயிற்று என்றும் புராணம் தெரிவிக்கிறது. தன்னை வணங்கும் சீவனின் பெயரையே தன் பெயராக ஏற்றுக் கொள்வது ஈஸ்வரனின் பண்பல்லவா, அதனால் ஐராவதேசுவரர் ஆனார்.

இத்திருத்தலம் தொடர்பான மற்றொரு புராணமும் உள்ளது. மரணமற்ற பெருவாழ்வு வாழவும், தேவர்களை வெல்லவும் தாரன் என்ற அசுரன் இத்தலத்து இறைவனை பூசித்து, தவம் இருந்து தான் விரும்பிய அருளைப் பெற்றதால் இத்தலம் உள்ள இடம் தாராசுரம் என்றானது என்றும் கூறுகிறது.

இக்கோயிலில் ஐராவதேசுவரர், தேவநாயகியுடன் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலைக் கட்டியது இராசராச சோழரின் கொள்ளுப் பேரனான இரண்டாம் இராசராச சோழர் என்கின்றனர் வரலாற்றாளர்கள். கட்டப்பட்ட காலம் கி.பி. 1203.

Leave a Reply