shadow

siddhar0002

அகத்தியர் வாழ்க்கை வரலாறு. முதல் இரண்டு பாகங்களை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

ராமபிரானின் இலங்கை வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாக்களில் அகத்தியரும் ஒருவர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இமயமலைச் சாரலுக்கு வந்தார். அப்பகுதியில் தவமிருந்தார். ஒருமுறை, இந்திரத்துய்மன் என்ற அரசன் ஆண்ட நாட்டுக்குச் சென்றார். அவன் அகத்தியரின் மகிமை அறியாமல் உரிய மரியாதை கொடுக்கவில்லை. பெரியவர்களுக்கும், முனிவர்களுக்கும் மரியாதை கொடுக்காதவன் அரசாளத் தகுதியில்லாதவன் என்று கூறிய அவர், நீ யானையாகப் போ என சாபம் கொடுத்தார். அவன் வருந்தி அழுதான். கருணைக்கடலான அகத்தியர், மன்னா! நீ பக்தன் தான். யோகங்களில் தலை சிறந்தவன். ஆனால், மமதை என்னும் மதம் உன்னை ஆட்டிப் படைக்கிறது. அதன் காரணமாகவே, உன்னை மதம் பிடித்த யானையாக மாற்றி விட்டேன். இதுவும் நன்மைக்காகவே நடந்தது, என்றார். இதனால் எனக்கு என்ன நன்மை கிடைக்கும் சுவாமி? என் மனைவி, மக்கள் என் பிரிவால் துன்புறுவார்களே! என கேட்ட போது, மோட்சம் செல்லப் போகிறவன், சம்சார பந்தத்தை துறக்க வேண்டும். நீ சாட்சாத் மகாவிஷ்ணுவின் மூலம் சாபவிமோசனம் பெற்று வைகுண்டம் சேர்வாய். பிறப்பற்ற நிலை சித்திக்கும், என அருள் செய்தார்.

 பிறவித்துன்பத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் என்றால், யானையாகத் திரிவதில் தனக்கு சம்மதமே என்ற இந்திரத்துய்மன், காட்டில் அலைந்து திரிந்தான். பின்னர், முதலை ஒன்று அதன் காலைக் கவ்வ, அது ஆதிமூலமே என அலற, ஆதிமூலமாகிய மகாவிஷ்ணு அதனைக் காப்பாற்றி வைகுண்டம் சென்று சேர்த்தார். இப்படி ஆடம்பரத்தில் சிக்கித் திளைத்த அரசர்களுக்கு வைகுண்ட பிராப்தி அளிப்பவராகவும் அகத்தியர் விளங்கினார். சிவசிந்தனை தவிர வேறு ஏதும் அறியாத அகத்தியர், தவத்திலேயே ஈடுபட்டிருந்தார். இமயமலையில், பார்வதி, பரமேஸ்வரனுக்கு திருமணம் நடக்க இருந்த வேளையில், உலகை சமநிலைப்படுத்த அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பி வைத்தார் சிவபெருமான். அவர் அங்கிருந்து புறப்பட்டு வரும் வழயில், ஒரு மரத்தில் சிலர் தலைகீழாகத் தொங்குவதைப் பார்த்தார். அவர்கள் அகத்தியா! அகத்தியா! என கத்தினர். நீங்களெல்லாம் யார்? என் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்? நான் தவவலிமை மிக்கவன். அக்னி- ஊர்வசி புத்திரன். என்னை வடபுலத்தோர் மட்டுமே அறிவார்கள். தென்திசையிலுள்ள உங்களுக்கு என் பெயர் எப்படி தெரிந்தது? என்னிலும் வலிமை மிக்கவர்களாகத் திகழ்கிறீர்களே! உங்கள் தரிசனம் கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன், என்ற அகத்தியர் அவர்களை தன்னையறியாமல் வணங்கினார். அகத்தியா! நீ சொன்ன தெல்லாம் சரிதான். நாங்கள் உன் முன்னோர்கள். உன்னைப் போலவே தவவாழ்வு வாழ்ந்தவர்கள். இருப்பினும், எங்களால் சுவர்க்கத்தை அடைய முடியவில்லை. சொர்க்கம் செல்ல துறவறம் மட்டுமே உதவாது. இல்லறத்துக்கு பிறகே துறவறம் பூண வேண்டும். யார் ஒருவருக்கு ஆண் குழந்தை இல்லையோ, அவர்கள் பிதுர்களின் உலகை அடைய முடியாது. ஆண் குழந்தையே கொள்ளி வைக்க தகுதியானவன். அதனால் எங்கள் அன்பு மகனே! நீ திருமணம் செய்து கொள். ஒரு மகனைப் பெறு. அவன் மூலமாக எங்களுக் குரிய தர்ப்பணம், சிரார்த்தம் செய்து எங்களுக்கு சொர்க்கப்பாதையைக் காட்டு. இல்லாவிட்டால், நாங்கள் இந்த மரத்திலேயே தொங்க வேண்டியது தான், எனக் கூறி வருந்தினர். உயரத்தில் குள்ளமான அவருக்கு யார் பெண் தருவார்கள்?

மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிதென்பார்கள் நம்மவர்கள். அதுபோல, அகத்தியர் உயரத்தில் மிகச்சிறியவர் என்றாலும், அவரது மகிமைகளை அறிந்த பெண்மணி ஒருத்தி, நிச்சயம் வாழ்க்கைப்பட்டே தீருவாள். தென்னகம் வரும் வழியில், அவர் விதர்ப்பம் என்ற நாட்டை அடைந்தார். அந்நாட்டு மன்னன் யாகம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தான். அதில் பங்கேற்க அகத்தியரை அவன் அழைத்துச் சென்றான். யாகத் தீ கொழுந்து விட்டெரிந்த போது, அதில் இருந்து ஒரு பெண்மணி வெளிப்பட்டாள். அப்போது அசரீரி தோன்றி, அகத்தியரே! நீர் இந்தப்பெண்ணை மணந்து கொள்ளும். இவளது பெயர் உலோபமுத்திரை, என்றது. அகத்தியரும் தெய்வ வாக்கிற்கேற்ப அவளது சம்மதத்தைக் கேட்டார். மாமுனிவரே! நான் இந்நாட்டில் தோன்றியதால், விதர்ப்ப தேசத்தரசரே என்தந்தையாகிறார். அவர் சம்மதம் தெரிவித்தால், நான் உங்கள் மனைவியாகிறேன், என்றாள். விதர்ப்ப அரசனும் சம்மதம் தெரிவித்தான். அப்போது உலோபமுத்திரை, அகத்தியரே! தாங்கள் என்னை மணம் முடிக்க வேண்டிய அவசியத்தை நான் தெரிந்து கொள்ளலாமா? என்றாள்.

 லோபா! என் முன்னோர்கள் ஆண் குழந்தை இன்மையால், இறந்தும் திதி செய்ய நாதியின்றி தவிக்கின்றனர். அவர்களால் சுவர்க்கத்தை அடைய முடியவில்லை. நானும் துறவியாகி விட்டதால், அவர்களின் நிலைமை மோசமாகி விட்டது. அவர்களின் ஆத்ம சாந்திக்காக, நான் திருமணம் முடிக்க வேண்டியுள்ளது. பிதுர் தர்ப்பணம் செய்யாதவன் நரகை அடைவான் என்பதை நீ அறிவாய். அவர்களின் விருப்பப்படி, நான் இல்லறத்தில் ஈடுபட்டு, ஒரு மகனை பெற்று, அவன் மூலமாக தர்ப்பணம் செய்ய வேண்டும். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றா விட்டால், நான் நரகத்தை அடைவேன் என சாபமும் இட்டுள்ளனர், என்றார். இதைக் கேட்ட விதர்ப்ப மன்னன்,அகத்தியரே! உமக்கு எம் மகளை தருவதற்கில்லை. அப்படி தர வேண்டுமானால், நான் உமக்கு சீதனம் தரமாட்டேன். நீரே நான் கேட்கும் பொருளை எனக்குத் தர வேண்டும், என சொல்லி விட்டான். இதென்ன சோதனை? துறவியிடம் ஏது செல்வம்? இந்த மன்னன் கேட்கும் தொகைக்கு எங்கு போவேன்? என எண்ணிக்கொண்டிருந்த போது, லோபமுத்திரையும், அகத்தியரே! என்ன யோசனை? இப்பூவுலகில் இனிய இல்லறம் நடத்த பொன்னும் பொருளும் தேவை என்பதை நீர் அறிய மாட்டீரா? எனவே மிகப்பெரிய மாளிகை கட்டும் அளவுக்கு இடமும், அதை நிரப்புமளவுக்கு செல்வமும் கொண்டு வந்து என்னை மணம் முடித்துக் கொள்ளும். இல்லாவிட்டால், நீர் நரகம்செல் வதைத் தவிர வேறு வழியில்லை என்பதைப் புரிந்து கொள்ளும், என்றார். (தொடரும்)

Leave a Reply