shadow

புயலுக்கு பின்னர் சென்னை கட்டிடங்களின் நிலை என்ன?

 கடந்த ஆண்டு சென்னையை மழை வெள்ளம் புரட்டிப் போட்டது. வெள்ளத்தால் சென்னையின் கட்டிடங்கள் பலவும் பாதிப்புக்கு உள்ளாகின. வெள்ளம் வராத வீடுகளிலும் மறைமுகமாகச் சில பாதிப்புகள் உண்டாயின. இந்த ஆண்டு மழைக்குப் பதிலாகப் புயல் வந்துள்ளது.

வார்தா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் கடந்த 22 வருடங்களில் இல்லாதளவுக்கு வேகம் கொண்டதாக இருந்தது. சென்னை இயல்பு வாழ்க்கையை முற்றிலும் இல்லாததாக ஆக்கிவிட்டது. புயலுக்குப் பிந்தைய பராமரிப்புக்காகவும் ஒரு நாள் இயல்பு வாழ்க்கை மந்தமானது. இந்தப் புயல் சென்னை நகரின் சாலைகளைப் பழுதாக்கிப் போய்விட்டது. மரங்களைச் சாய்த்துவிட்டது. விளம்பரப் பலகைகளைப் பெயர்த்துக் கிழே தள்ளிவிட்டது. இவற்றையெல்லாம் பத்திரிகைகளில் பார்க்கிறோம். புள்ளி விபரக் குறிப்பும் சொல்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க, வீடுகளை புயல் எவ்வாறு பாதித்துள்ளது, என்பது இன்னும் கணக்கிடப்படாத ஒன்றாகத்தான் இருக்கும். சிறு சிறு குடிசை வீடுகளை மிக அதிகமாகப் பாதித்துள்ளது. அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள், தனி வீடுகள் போன்றவை பெரிய அளவில் பாதிப்படையவில்லை எனச் சொல்லப்படுகிறது. ஜன்னல் கண்ணாடிகள் சில பகுதிகளில் உடைந்திருக்கின்றன. மரங்கள் சாய்ந்ததால் கோட்டைச் சுவர்கள் இடிந்திருக்கின்றன. ஆனால் இவை அல்லாமல் மேலும் சில பாதிப்புகள் இருக்கக் கூடும். அதைக் கவனமாகப் பார்க்க வேண்டும். குறிப்பாகத் தண்ணீர் போகும் குழாய்த் தடங்களைக் கவனமாகப் பார்க்க வேண்டும்.

ஒன்றும் பாதிப்பில்லை என அஜாக்கிரதையாக விட்டுவிட்டால் பின்னால் பெரும் வேலையை வைத்துவிடும். இதையே ஒரு வாய்ப்பாக வைத்து ஒரு முழு பராமரிப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும். வயரிங் பகுதிகளைக் கவனமாகப் பார்க்க வேண்டும். மழை நீர் இறங்கிப் பாதிப்படைந்திருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். மழையாலும் புயலாலும் கட்டிடத்தில் எங்காவது விரிசல் வந்திருக்கிறதா என்பதையும் கவனித்துப் பார்க்க வேண்டும்.

இந்தப் புயலில் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகள் பல அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அதே சமயம் சிமெண்ட் தொட்டிகள் வைத்துள்ள வீடுகளில் அவை பாதிக்கப்பட்டுள்ளனவா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். சிறு விரிசல் இருந்தாலும் அதைக் கவனமாகப் பார்த்துச் சரிசெய்ய வேண்டும்.

Leave a Reply