12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு சமீபத்தில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து புதியதாக அறிவிக்கப்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கான முதல் ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் தலைமை தாங்கினார். பொருளாளர் கோவைத்தங்கம், மாநில பொதுச்செயலாளர் நாசே ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலுவின் ஆதரவாளர்கள் தாமோதரன், சதாசிவலிங்கம் தலைமையில் 9 மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

ஆலோசனை கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மத்தியமந்திரிகள் என யாரையும் அழைக்கவில்லை. செயற்குழு உறுப்பினர்களை கூட அழைக்கவில்லை. கேட்டால் அதிகாரப்பூர்வம் இல்லாத அறிமுக கூட்டம் என்கின்றனர். இது போன்ற கூட்டம் காங்கிரஸ் வழக்கத்திலேயே இல்லை. ஆகவே எங்களின் மனவருத்தத்தை அவரிடம் தெரிவித்து வெளிநடப்பு செய்து இருக்கிறோம்.

25 பேர் கொண்ட தேர்தல் கமிட்டி கூட்டம் இதுவரையில் நடத்தப்படவில்லை. 7 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டமும் நடத்தப்படவில்லை. இதற்குள் இந்த கூட்டத்தை நடத்துவது ஏன்? அதுவும் தலைவர்களை அழைக்காமல் ஏன் நடத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

அவர்கள் குற்றச்சாட்டு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்

ஞானதேசிகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கூட்டத்தில் இருந்து அவர்கள் வெளிநடப்பு செய்தது வருந்தத்தக்க நிகழ்வு. இந்த கூட்டம் கட்சியின் வளர்ச்சி குறித்து பேச வேண்டிய கூட்டம். இந்த கூட்டத்தில் தலைவர்களை அழைப்பது குறித்து நான் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரிடம் கூறி விட்டேன். எல்லோரையும் அழைத்து பேச வைத்தால் நிர்வாகிகளுக்கு சொல்ல வேண்டிய செய்தி சேராமல் போய்விடும்.

நான் கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பாகவே பணியாற்றி வருகிறேன். பதவி எல்லோருக்கும் கொடுக்க முடியாது. பதவி கொடுக்கும் அதிகாரமும் எனக்கு இல்லை. நாமக்கல், கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்படவில்லை. அதற்கான காரணம் எனக்கு தெரியாது என்று அவர் கூறினார்.

Leave a Reply