shadow

admkஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் இன்று  உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கு டிசம்பர் 18 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள், அவருக்கு அளித்த தண்டனையையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர்.

மேல்முறையீட்டு மனுவை விசாரித்து முடிக்க 3 மாதம் அவகாசம் அளித்து உத்தரவிட்ட நீதிபதிகள், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை தாமதப்படுத்தக் கூடாது என்றும், 3 மாதத்தில் விசாரித்து  முடிக்காவிட்டால் உச்ச நீதிமன்றம் வழக்கை கருத்தில் கொள்ளும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், 2 மாதத்திற்குள் கோப்புகளை சரிபார்த்து கர்நாடக நீதிமன்றத்துக்கு வழங்க வேண்டும் என்றும், வழக்கை தாமதப்படுத்தும் எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்திற்கு வெளியேயும், சென்னை அதிமுக தலைமை அலுவலகத்திலும் திரண்டிருந்த அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், மகிழ்ச்சியுடன் இனிப்புகளை வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

இன்றைய தினம் அதிமுகவின் 43 வது ஆண்டு விழா கொண்டாட்டம் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், ஜெயலலிதா சிறையில் இருப்பதால், அக்கட்சியினர் காலையில் உற்சாகமின்றியே காணப்பட்டனர். இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு பகல் 12.15 மணி அளவில் ஜாமீன் கிடைத்ததாக தகவல் கிடைத்த பின்னரே அதிமுகவினரிடம் உற்சாகம் காணப்பட்டது. நீதி வென்றது, நீதி தேவைதைக்கு விடுதலை என்று ஆங்காங்கே ஜெயலலிதாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டு வருகிறது.

Leave a Reply