shadow

சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்ய நீதிமன்றம் தடையா?

ஜெயலலிதாவை மறைவை அடுத்து சசிகலா போட்டியின்றி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கும் நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாபுஷ்பா நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ‘அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அப்பதவிக்கு புதிய நபர்களை தேர்வு செய்ய அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முயற்சித்து வருகின்றனர். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலாவை தேர்வு செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர். கட்சியின் தொண்டர்களின் கருத்தை கேட்காமல், இவர்கள் சசிகலாவை தேர்வு செய்கின்றனர். இதற்கான கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்ய தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது சசிகலாவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடியபோது, ‘அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர், அக்கட்சியில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். ஆனால், சசிகலா கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தான் உறுப்பினராக உள்ளார். அ.தி.மு.க.வின் விதிகளின் படி, பொதுச் செயலாளர் தேர்வு செய்ய பொதுக்குழுவை கூட்டுவதற்கு 21 நாட்களுக்கு முன்பு அனைவருக்கும் முறைப்படி தகவல் தெரிவிக்கவேண்டும். எனவே, சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்ய தடை விதிக்கவேண்டும்’ என்று வாதிட்டார்.

அ.தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வக்கீல், ‘மனுதாரர் சசிகலா புஷ்பா இப்போது அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. கடந்த ஆகஸ்டு 1-ந் தேதி அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். அதனால், இந்த வழக்கை தொடர அவருக்கு எந்த ஒரு அடிப்படை உரிமையும், தகுதியும் கிடையாது.

இந்த கட்சியில் 18 வயது பூர்த்தியானவர்கள் உறுப்பினர்களாக சேரலாம். மேலும் உள்கட்சி விவகாரம் தொடர்பாக கோர்ட்டுக்கு செல்லக்கூடாது என்று நிபந்தனையுடன் தான் அவர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்படுகின்றனர். அதனால், உள்கட்சி பிரச்சினைக்காக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தாலே, அவர்கள் தானாக உறுப்பினர் பதவியை இழந்து விடுவார்கள். அப்படி பார்க்கும்போது, உள்கட்சி விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரர்கள் இருவரும் தானாகவே உறுப்பினர்கள் பதவியை இழந்து விடுகின்றனர். அப்படி இருக்கும் பட்சத்தில் உறுப்பினரே இல்லாத ஒருவர், ஒரு கட்சியின் மீது எப்படி வழக்கு தொடர முடியும்?

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா புஷ்பாவின் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் வாதம் செய்தார். ‘மனுதாரர் சசிகலா புஷ்பாவை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியதாக சட்டப்பூர்வமான உத்தரவு எதுவும் இதுவரை வரவில்லை. அவர் ராஜ்யசபா எம்.பி.யாக உள்ளார். இவரை கட்சியை விட்டு நீக்கியதாக ராஜ்சபாவிற்கும் கடிதம் இதுவரை வரவில்லை. மனுதாரருக்கு அது தொடர்பாக எந்த ஒரு விளக்க நோட்டீசு கூட கட்சியின் சார்பில் அனுப்பப்படவில்லை. எனவே அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்கள் என்று எப்படி கூற முடியும்? இன்னமும் உறுப்பினராக உள்ளார் என்ற தகுதியின் கீழ் தான் தற்போது சசிகலா புஷ்பா வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், அ.தி.மு.க. என்பது ஒரு அமைப்பு கழகம். அது சங்க விதிகளுக்கு உட்பட்டு தான் செயல்பட முடியும். எனவே, சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய தடை விதிப்பதுடன், தற்போதைய நிலையே தொடரவேண்டும் என்று உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், ‘அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்வு செய்ய தடை விதிக்க முடியாது. தற்போதைய நிலையே அக்கட்சியில் நிலவ வேண்டும் என்றும் உத்தரவிட முடியாது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்கிறேன். இந்த மனுவுக்கு எதிர்மனுதாரர்களான அ.தி.மு.க., சசிகலா, இந்திய தேர்தல் ஆணையம் ஆகியவை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை 21-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.

Leave a Reply