shadow

2

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் பெயரில் இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையாக ரூ.1 கோடி, விருது ஆகியவற்றை அமெரிக்காவின் தெற்கு ஃப்ளோரிடா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

2012-ஆம் ஆண்டில் அப்துல் கலாம் அமெரிக்காவின் தெற்கு ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பாடம் எடுத்தார். பசுமை எரிசக்தியின் அவசியம், தொடர்ந்த, நீடித்த வளர்ச்சியை உலக நாடுகள் தங்களது வளர்ச்சி திட்டங்களில் கொள்கையாக எப்படி உருவாக்குவது, அமல்படுத்துவது குறித்து விளக்கிய அவர், மாணவர்களோடு கலந்துரையாடி, கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

இந்த நிலையில், அப்துல் கலாமின் நினைவைப் போற்றும் வகையில் அவரது பெயரில் கல்வி உதவித் தொகையும் விருதும் வழங்கப்படும் என்று ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரோஜர் பிரைன்ட்லி அறிவித்துள்ளார். இதுகுறித்த தகவலை பிரைன்ட்லி, அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பொன்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 ரூ.12 லட்சம் ஊக்கத் தொகை: இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுப் பணிக்காக, ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு 4 ஆண்டு மேல் படிப்புக்கு ரூ. 56 லட்சம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட உள்ளது. அதோடு சேர்த்து ஆண்டுதோறும் ரூ. 12 லட்சம் கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.

விருது: மேலும், 2016-17-ஆம் கல்வியாண்டிலிருந்து அறிவியல், பொறியியல் முனைவர் பட்டப் படிப்பில் சாதனை படைக்கும் மாணவர்களுக்கு டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் விருது வழங்கப்படும் என கூறியுள்ளார்.
 

Leave a Reply