ayyappa ma1

ஹரிக்கும் ஹரனுக்கும் மகனாகப் பிறந்தவர் ஐயப்பன். அதாவது காக்கும் தொழிலையும், அழித்தல் தொழிலையும் மேற்கொண்டுள்ளார். இது காரணம் பற்றியே ஹரி ஹரனுடைய சக்தி அம்சங்களான லக்ஷ்மியும், சரஸ்வதியும் முறையே பூர்ணா புஷ்கலாவாக அய்யனை அலங்கரித்து வருகிறார்கள். ஆக்கல் தொழில் படைத்த பிரம்மனது சக்தியான சரஸ்வதியும், சாஸ்தாவின் ஒரு நிலையில் பிரபாவதி என்னும் பெயரில் சத்யகன் என்ற செல்லப்பிள்ளையுடன் கொலுவீற்றிருக்கிறார்.

TN_111212151848000000

சாஸ்தா என்று எந்தவொரு தனிப்பெயரோ, தெய்வமோ கிடையாது. சாஸ்தி இதி சாஸ்தா என்பது வழக்கு. அதாவது சாஸிப்பிக்கின்றவர் அல்லது வழிநடத்திச் செல்பவர் என்று கொள்ளலாம். தர்மத்தை போதிப்பவன் தர்மசாஸ்தா. உலகத்தை காப்பவன் விஸ்வசாஸ்தா. அக்னிக்கு அதிபதி அக்னி சாஸ்தா. வாயுவுக்கு வாயு சாஸ்தா. ஜலத்திற்கு ஜல சாஸ்தா. பூமிக்கு பூ சாஸ்தா. ஆகாயத்திற்கு ஆகாஸ சாஸ்தா – இப்படி எந்த தர்மத்திற்கு அதிபதி ஆனாலும் அந்தப் பெயரையே சாஸ்தாவிற்கு இடுவது வழக்கமாகி விட்டது.

சாஸ்தாவின் மற்றொரு பெயர் பூதநாதன் என்பதாகும். இதற்கு பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆள்பவர் என்று பெயர். நமது நாகரீகத்தை வேதகால நாகரீகம் என்று சொல்லப்படுகிறது. எந்தவொரு சந்தேகம் ஏற்பட்டாலும் வேதமே பிரமாணம் ஆகிறது. வேதம் எப்பொழுது தோன்றியது என்று எவருக்கும் தெரியாது. காற்றலைகளில் எழுகின்ற சப்தங்களை ஒன்று திரட்டி அதை முறையாக பாகுபடுத்தி நான்கு வேதங்களாக நமக்கு அளித்தவர் வேத வியாஸர் ஆகும். அவரது காலத்திலேயே நாகரீகம் பெரிதும் முன்னேற்றம் அடைந்து இருக்கிறது. அதாவது அவர்களுக்கு மொழி, இலக்கணம், ஒழுக்கம், கட்டுப்பாட்டு முறைகள் யாவும் தெரிந்து விட்டன.

ஆகாயம், வாயு, அக்னி, நீர், பூமி ஆகிய ஐந்துமே பெயரிடப்படாத தெய்வங்களாக மனிதனுக்கு காட்சி அளித்தது. நம் கண்களால் நம்பமுடியாத அளவுக்கு பெருத்த உருவம் கொண்ட ஒன்றை பூதம் என்று அழைத்தார்கள். இந்த ஐந்தும் முறையே பஞ்ச பூதங்களாயின. இவை தன்னிச்சையாக செயல்படாமல் ஒருங்கிணைந்து செல்வதற்கு ஒரு தலைவன் தேவைப்பட்டான். அவனே பூதநாதன் எனப்படும் ஐயப்ப ஸ்வாமி ஆவார். குறிப்பாக, ஆகாயம் எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கிறது? அதிலிருக்கும் விண்மீன்கள் தங்களது தலையில் விழுந்து விட்டால் என்னாவது என்ற அச்சம், சூர்ய சந்திரர்கள் நமக்கு ஒளியையும், தண்மையையும் அளித்து வந்ததைக் கண்டு இவர்கள் இருவருமே நமது முழு முதல் தெய்வங்கள் என்று வணங்கலானார்கள்.

யுகங்களின் அடிப்படையிலும் சாஸ்தா வழிபாடு தொன்மையாகவே விளங்குகிறது. பிரளய காலத்திற்குப் பிறகு. முதல் மன்வந்தரம் முதல் ஆறாவது மன்வந்தரம் வரை சாஸ்தா வழிபாடே இருந்து வந்துள்ளது. ஆறாவது மன்வந்தரத்தில் தான் மத்ஸ்ய, கூர்ம, வராக, நரஸிம்ம அவதாரங்கள் ஏற்பட்டன. இதில் முதல் மூன்று அவதாரங்களில் சாஸ்தாவே கடலுக்கும் பூமிக்கும் ஆதாரமாக விளங்கினான். பாலாழிமதனம் கடையப் பெற்று சாஸ்தா அவதாரமானதும் இக்காலத்தில் தான். இந்த கால கட்டத்தில் பூவுலகம் ஏழு த்வீபங்களாக – ஜம்பு த்வீபம் (பாரதம்), பலக்ஷ த்வீபம் (இலங்கை), க்ரௌஞ்ச த்வீபம் (கிரேக்கர் – ஐரோப்பா), குசத்வீபம் (வட அமெரிக்கா), சாகத்வீபம் (ஆஸ்திரேலியா), சால்மலி த்வீபம் (மொரீஷியஸ்), புஷ்கர த்வீபம் (சைனா, ரஷ்யா) என்று ஏழு த்வீபங்களாக பிரிக்கப்பட்டன. இவற்றுக்கும் அதிபதி சாஸ்தாவே ஆகும். (உ.ம்: குசாதிப: சால்மலீபதி:) நரஸிம்ம அவதாரத்தில் காத்யாயன மகரிஷியின் பெண்ணான காத்யாயனி தேவிக்கு புத்திரனாக காத்யாயினி ஸுத: என்றும் ஸ்வாமி அழைக்கப்படுகிறார். வாமனாவதாரத்தில் வாமன பூஜித: என்று அழைக்கப்படுகிறார்.

ayanar1

இவை நடந்தது க்ருத யுகத்தில் ஆகும். ஸ்காந்தபுராணம் நிகழ்ந்ததும் இக்காலத்தில் தான். சூரனுக்குப் பயந்து, இந்திரன் இந்திராணியை விடுத்து, முருகப் பெருமான் அவதாரமாகி சூரனை வதைக்க வேண்டும் என்று பரமனிடம் வேண்டுகோள் விடுக்கச் சென்ற போது, தனித்து விடப்பட்ட இந்திராணியை சாஸ்தாவின் பூதகணத் தலைவர்களில் ஒருவரான மஹா காவர் காத்து அருளினார். முருகனுக்கும் முதல்வன் சாஸ்தா என்று இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

அடுத்து த்ரேதா யுகத்தில் ராமர், பரசுராமர் ஆட்சிக் காலத்திலும் சாஸ்தா இருந்ததற்கான சான்றுகள் உள்ளது. பரத்வாஜேன பூஜித; ரேணுகா ஸேவ்யாய நம: பரசுஹஸ்தாய நம: இவை சில சான்றுகளாகும். மைதில்யாய நம: ஜனகேனாபி பூஜித: என்னும் நாமங்கள் சாஸ்தா மிதிலாபுரியில் இருந்ததையும் ராமன் உடைத்த சிவதனுசுவில் ஆவிர்பாகம் கொண்டு இருந்ததையும் எடுத்துக் கூறுகிறது. த்வாபர யுகத்தில் கேபாலேனாபி பூஜித: ஹலபாணி ப்ரபூஜித: என்றும் கூறும் போது சாஸ்தாவை நினைவு கூறலாம். அம்புப் படுக்கையில் மரணத்தை எதிர்நோக்கி இருந்த பீஷ்மரும் அஜோ துர்மர்ஷனஸ் சாஸ்தா என்று கூறுவது குறிப்பிடத்தக்கது. கலியுகம் பற்றி கேட்கவே வேண்டாம். கலியுக ப்ரத்யக்ஷம் என்று முத்துஸ்வாமி தீக்ஷிதர் பாடியதும், கலியுகத்தில் பக்தர்கள் இறைவனை சரணமடைவதுமே ஸ்வாமி கலியுக தெய்வம் என்பதை பறைசாற்றுகின்றன. ஆக நான்கு யுகங்களையும், பல மன்வந்தரங்களையும் கடந்து சாஸ்தா யுக புருஷனாக இருக்கிறான் என்பது வெள்விடைமலை.

இந்தக் கட்டுரை பெரிய தத்துவங்களை கொண்டுள்ளது. எனவே இதை நன்குணர்ந்து  படிப்பவர்களுக்கு சாஸ்தா வழிபாடு யுகம் கடந்த வழிபாடு என்பதை அறிந்து கொள்வார்கள்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *