அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் படும் பேராசையால்தான் இந்தியாவில் ஆங்காங்கே வெடிகுண்டுகள் வெடிக்கின்றன. மேற்படி இவர்களது உதவிகள் இல்லாமல் தீவிரவாதிகள் இங்கு திடுக்கிடும் சம்பவங்கள் நடத்த முடியாது எனும் உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்லி வெளிவந்திருக்கும் ஆக்ஷ்ன் திரைப்படம் தான் அல்டிமேட்ஸ்டார் அஜீத்தின் ஆரம்பம்!

எம்.எஸ்ஸி., கோல்டு மெடலிஸ்ட் ஆர்யா, கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே மீடியாவில் பெரிய ஆளாக வேண்டும் என்ற லட்சியத்துடன் உடன் படிக்கும் டாப்ஸியை ஒருதலையாக காதலிக்கிறார். படிப்பு முடிந்ததும் டி.வி. நிருபர், தொகுப்பாளினி. டாப்ஸி மீது லவ்வுன்னா லவ்வு அப்படி ஒரு லவ் ஆர்யாவுக்கு. சென்னையில் படிப்பு முடித்து மும்பைக்கு வேலைக்கு போகும் ஆர்யா, அங்கு உடன் படித்த நயன்தாரா, டாப்ஸியால், அல்டிமேட் அஜீத்தின் நட்பை பெறுகிறார். ஆர்யாவின் நட்பை தப்பாக்கி அவர் கையாலேயே பிரபல டி.வி. சேனல் ஒன்றை செயலிழக்க செய்யும் அஜீத், அடுத்து ஆர்யாவின் கணிப்பொறி திறமை மூலம் சுவிஸ் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் போட்டிருக்கும் அரசியல் புள்ளிகளுக்கும், அவர்களது காசுக்கும் குறி வைக்கிறார். கூடவே போலீஸிலும், அரசியலில் பெரும் பதவியிலும் இருந்து கொண்டு திருட்டுத்தனமாக தீவிரவாதிகளுக்கு உதவும் கருப்பாடுகளுக்கு கட்டம் கட்டுகிறார். இது ஏன்.? எதற்கு..? என்று நம்மை மாதிரியே புரியாமல், ஒரு கட்டத்தில் அஜீத்-நயன்தாரா கோஷ்டியை போலீஸில் மாட்டிவிடும் ஆர்யா-டாப்ஸி ஜோடி அவ்வாறு நடந்து கொண்டதற்காக அடுத்த கொஞ்ச நேரத்திலேயே வருந்துகின்றனர்.

காரணம், அஜீத் ராணா(த்ரிஷாவின் காதலரே தான் இதில் அஜீத்தின் நண்பராக கெஸ்ட் ரோலில் கொஞ்சநேரம் வருகிறார்…) இருவரும் வெடிகுண்டை செயலழிக்க செய்யும் மும்பை போலீஸ் உயர் அதிகாரிகள். உயிர் நண்பர்களான இவருவரும், ஒரு தீவிரவாத செயலை தடுக்க செல்கின்றனர். மயிர்கூச்செரிய செய்யும் அந்நிகழ்வில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து வெளிநாட்டினரை இருவரும் உயிர் சேதம் இல்லாமல் காபந்து செய்தாலும், ஒரு தீவிரவாதியின் துப்பாக்கி குண்டுக்கு அஜீத் கண் எதிரேயே ராணா உயிர் துறக்கிறார். அவரது உயிரிழப்புக்கு காரணம் தீவிரவாதியின் துப்பாக்கி குண்டுகள் மட்டுமல்ல…, அவர் அணிந்திருந்த தரமற்ற புல்லட் புரூப் ஜாக்கெட்டும் தான் என கண்டு அதிரும் அஜீத், அந்நிகழ்வால் தனது உயர் அதிகாரிகள் தொடங்கி, மத்திய உள்துறை அமைச்சர் வரை பகைத்து கொள்கிறார். அதனால் தன் நண்பனின் உயிரை இழந்து, தன் உயிரை துச்சமென மதித்து இந்திய கெளரவத்தை காப்பாற்றிய அஜீத்துக்கு துரோகி முத்திரை குத்தப்பட்டு பதவியும் பறிக்கப்படுகிறது. அதில் வெகுண்டெழும் அஜீத், ராணா குடும்பத்தில் எஞ்சிய நயன்தாரா மற்றும் நியாயமான போலீஸ் நண்பர்களுடன் சேர்ந்து மத்திய அமைச்சர் உள்ளிட்ட வில்லன் கோஷ்டியை எப்படி பழிதீர்க்கிறார்? ஆர்யா – டாப்ஸியின் காதல் என்னவாயிற்று? நயன்-அஜீத்தின் உறவு என்ன? சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்திய பணத்தை அஜீத்-ஆர்யா என்ன செய்தனர்? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பதில் சொல்கிறது ஆரம்பம் படத்தின் பிரமாண்டமான மீதிக்கதை!

அல்டிமேட் ஸ்டார் அஜீத், ஏ.கே.எனும் அசோக்காக வழக்கம் போலவே தனக்கு ஈடு இணை யாரும் இல்லை எனும் அளவில் முதல் பாதியில் பொல்லாதவராகவும், இரண்டாம் பாதியில் போலீஸாகவும் பொளந்து கட்டியிருக்கிறார். பலபேரை ஏமாற்றி அவங்க இரத்தத்தை உறிஞ்சி சம்பாதித்த பணம் எனும் சுவிஸ் வங்கி கருப்பு பணத்திற்கு அவர் கொடுக்கும் பன்ச் டயலாக்கில் தொடங்கி, க்ளைமாக்ஸில் சில சமயம் பழிவாங்கிதான் நியாயத்தை நிலை நிறுத்த முடியும்… என பேசும் பன்ச் டயலாக் வரை ஒவ்வொரு டயலாக்கிற்கும் தியேட்டரில் ரசிகர்களின் விசில் சப்தத்தில் அதிர்கிறது. மற்ற ஹீரோக்கள் மாதிரி தான் மட்டுமே பன்ச் டயலாக் பேசும்படி ஸ்கிரீன்பிளேவை இயக்குநர்களிடம் சொல்லி வடிவமைக்காமல் ஆர்யா, நயன்தாரா, அந்த ஊழல் அமைச்சர், அமைச்சரின் துபாய் அழகு பெண் உள்ளிட்ட எல்லோருக்கும் பன்ச் டயலாக் வழங்கியிருக்கும் அஜீத்துக்கு ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லியே தீர வேண்டும்.

அஜீத் மாதிரியே அர்ஜூன் எனும் ஆர்யாவும் பொளந்து கட்டினாலும் படத்தில் காமெடியன் இல்லாத குறையை ஆர்யாவை வைத்து இயக்குநர் தீர்த்து கொண்டிருப்பது அப்பட்டமாக தெரிகிறது! மாயா எனும் நயன்தாரா, அனிதா எனும் டாப்சி நாயகியரில் தொடங்கி ஆடுகளம் நரேன், கிஷோர், கிருஷ்ணா என ஒவ்வொரு நட்சத்திரமும் பலே தேர்வு! பலே நடிப்பு!!

ஆரம்பம் படத்தின் ஆரம்பத்தில் மும்பையில் மூன்று இடங்களில் வெடிக்கும் வெடிகுண்டுகளுக்கும், அஜீத்துக்கும் என்ன சம்மந்தம்?, அதேமாதிரி போலீஸ் அதிகாரிகளுக்கு ஏ.கே. அஜீத் ஒரு முன்னால் போலீஸ் அதிகாரி என்பது தெரியாதது எப்படி? உள்ளிட்ட சில பல வினாக்களுக்கும், படத்தின் ஆரம்ப காட்சிகளில் டாப்சியை கவர குண்டு ஆர்யா, குறும்பு எனும் போர்வையில் செய்த கோமாளித்தனங்கள் கொஞ்சம் இருட்டடிக்கப்பட்டிருந்தது என்றால் ஆரம்பம் மேலும் அமர்க்களமாக இருந்திருக்கும். ஆனாலும் ஓம் பிரகாஷின் பிரமாண்டமான ஒளிப்பதிவு, யுவன் ஷங்கர்ராஜாவின் பிரமாதமான இசை, விஷ்ணுவர்தனின் ஹாலிவுட் பட நிகர் ஆக்ஷ்ன் டைரக்ஷ்ன் எல்லாம் சேர்ந்து அஜீத்தின் ஆரம்பத்தை கோலாகலமாகவும், குதூகலமாகவும் ஆக்கியுள்ளன என்றால் மிகையல்ல!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *