shadow

ஆறாது சினம். திரைவிமர்சனம்

Aarathu-Sinam-Movie-Reviewமதுரையில் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார் அருள்நிதி. இவர் தலைமையில் பெரிய ரவுடியை என் கவுண்டர் செய்ய திட்டம் போடுகிறார்கள். அதன்படி, ரவுடியை என்கவுண்டர் செய்யும் போது, எதிர்பாராத விதமாக ரவுடியின் மனைவி இறக்கிறார். அப்போது உயர் அதிகாரிகளிடம் இருந்து ரவுடியை என்கவுண்டர் செய்ய வேண்டாம் என்று போன் வந்ததால், என்கவுண்டர் திட்டத்தை கைவிடுகிறார்.

மனைவியை இழந்த ரவுடி, அருள்நிதியை பழிவாங்க அவரது வீட்டுக்கே சென்று, அவர் கண்முன்னே மனைவி ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் குழந்தையை கொலை செய்கிறார். கோபமடைந்த அருள்நிதி ரவுடியை கொன்று விடுகிறார். அத்துடன் மனைவி, குழந்தை இறந்த துக்கத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, வேலைக்கும் செல்லாமல் இருக்கிறார் அருள்நிதி.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் மர்மமான முறையில் கொலைகள் நடக்கின்றன. இந்த வழக்கை அசிஸ்டண்ட் கமிஷனராக இருக்கும் ரோபா சங்கரும், இன்ஸ்பெக்டராக இருக்கும் சார்லியும் விசாரிக்கிறார்கள். உயர் அதிகாரியான ராதாரவி, அருள்நிதி மேல் உள்ள நம்பிக்கையில் அவரிடம் இந்த வழக்கை ஒப்படைக்கிறார்.

முதலில் ஏற்க மறுக்கும் அருள்நிதி பின்னர், அரை மனதுடன் வழக்கை விசாரிக்க சம்மதிக்கின்றார். இவர் விசாரிக்க அரம்பித்தபின் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. அதன்பின் நடக்கும் தீவிர விசாரணையும் பரபரப்பு திருப்பங்களும் மீதிக்கதை.

நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அருள்நிதி, இந்த படத்தையும் சிறப்பாக தேர்வு செய்திருக்கிறார். மனைவி, குழந்தைகளை கண்முன்னே கொல்லும் போது, அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். ஹீரோயிசம் இல்லாமல் அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் அவர், அரவிந்த் என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். இவரின் வெற்றிபட வரிசையில் இப்படமும் அமைந்திருக்கிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா தத்தா என்று இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும் பேசும்படியான கதாபாத்திரம் இல்லை. சில காட்சிகளே வந்தாலும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். போலீஸ் உயர் அதிகாரியாக வரும் ராதாரவி மற்றும் இன்ஸ்பெக்டராக வரும் சார்லி நடிப்பில் அனுபவம் வெளிப்படுகிறது.

சமீபகாலமாக மலையாள படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்று வருகின்றன. அந்த வரிசையில் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘மெமரீஸ்’ படத்தின் ரீமேக்காக ‘ஆறாது சினம்’ படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் அறிவழகன். மெதுவாக திரைக்கதை தொடங்கினாலும், போகப்போக விறுவிறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

தமன் இசையில் பாடல் அனைத்தும் நன்றாக உள்ளது. பின்னணி இசையை சிறப்பாக கொடுத்திருக்கிறார். அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகவும் கைகொடுத்திருக்கிறது.

மொத்தத்தில் ‘ஆறாது சினம்’ சீற்றம்.

Leave a Reply