ரூ.5க்கு சாப்பாடு. அம்மா உணவகத்தை பின்பற்றும் டெல்லி முதல்வர்

aam aadhmiதமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய முயற்சியால் வெற்றிகரமாக இயங்கி வரும் ‘அம்மா உணவகம்’ பல மாநிலங்களை கவர்ந்த நிலையில் தற்போது டெல்லியிலும் இதே பாணியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. ‘ஆம் ஆத்மி கேண்டீன்’ என்ற பெயரில் குறைந்த விலை உணவகத்தை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் ஆகிய இரண்டு தேசிய கட்சிகளை தோற்கடித்து ஆட்சியை பிடித்த அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, அம்மா உணவகம் போல ஆம் ஆத்மி கேண்டீன்களை டெல்லியின் பல இடங்களில் விரைவில்  தொடங்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதல் நேற்று வழங்கப்பட்டது. ஆம் ஆத்மி கேண்டீன்கள் டெல்லியில் உள்ள குடிசைப்பகுதி, தொழிற்சாலைகள் மற்றும் கல்லூரி பகுதிகளில் தொடங்கப்படுகிறது.

அதன் பிறகு கேண்டீன்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. இன்னும் 2 மாதங்களில் டெல்லியில் பல இடங்களில் ஆம் ஆத்மி கேண்டீன் வந்து விடும் என்று ஆம் ஆத்மி தொண்டர்கள் கூறுகின்றனர்.

டெல்லியில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி,  நடமாடும் உணவகங்களை நடத்தியது. அதில், மதிய உணவு 20 ரூபாய் கொடுத்து சாப்பிடலாம். ஆனால், ஆம் ஆத்மி கேண்டீனில் 5 ரூபாய்க்கு சாப்பாடு வழங்க திட்டமிட்டுள்ளது.

டெல்லியில் 10 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளனர். 5 லட்சம் நடைபாதை வாசிகள் உள்ளனர். 4 லட்சம் பேர் குடிசைகளில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆம் ஆத்மி கேண்டீன் மிகவும் வரப்பிரசாதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *