shadow

D0A9B939-112F-4925-8C8B-EF2356C78503

சென்னை போன்ற பெரு நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் மிக அதிகம். நகரின் இட நெருக்கடியை வைத்துப் பார்க்குபோது அடுக்குமாடிக் குடியிருப்புகள்தான் இருப்பிடத் தேவைக்குச் சரியான தேர்வு. பல முன்னணி நிறுவனங்கள் நகரின் இடநெருக்கடியைக் கணக்கில் கொண்டு, இப்போது புறநகரில் தங்கள் கட்டுமானத் திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

அடுக்குமாடிக் குடியிருப்புகள் இன்னும் சென்னை,  கோவையைத் தாண்டி தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பிரபலம் அடையவில்லை. இவற்றுக்கு அடுத்தபடியாக மதுரையில், திருச்சியில் சிறிய அளவில் வந்துள்ளன.

ஆனால் இன்னும் அங்கு தனி வீடுகளையே மக்கள் விரும்புகிறார்கள். ஏனென்றால் இந்த அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டங்கள் குறித்து அவர்களுக்கு அவ நம்பிக்கைகளே மேலோங்கி உள்ளன. ஒரே இடத்தை அந்தக் குடியிருப்பைச் சேர்ந்த எல்லோரும் பகிர்ந்துகொள்வது அவர்களுக்குக் குழப்பமாக இருக்கிறது.

அதை உண்மையாக்குவதுபோல் இன்று அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பலதரப்பட்ட பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன.

உதாரணமாக அடுக்குமாடிக் குடியிருப்பில் நீங்கள் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் மற்ற குடியிருப்புவாசிகளிடம் அனுமதி வாங்க வேண்டும். வெளிப்புறச் சுவர்களுக்கு வண்ணம் பூசுவது எல்லோரும் ஒத்துழைத்தால்தான் சாத்தியம். குடியிருப்பில் ஏற்படும் சின்னச் சின்ன பராமரிப்புக்கும் குடியிருப்புவாசிகளே பொறுப்பு.

அதுபோல அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கும்போது சில பிரச்சினைகள் தொடங்கிவிடும். ஒப்பந்தம் போட்டு எத்தனை மாதத்திற்குள் வீட்டைக் குடியிருக்கத் தயாராகும் என்பதைத் தெரிவிக்க வேண்டும். ஆனால் சில கட்டுமான நிறுவனங்கள் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வீட்டைக் கட்டித் தருவதில்லை.

அதனால் வங்கிக் கடன் ஒரு பக்கம், வீட்டுக் கடன் ஒரு பக்கம் எனக் கொட்டும் தவிலைப் போல் இரு பக்கமும் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு என்ன தீர்வு எனக் கேட்கிறீர்களா?

ஒப்பந்தத்தில் இம்மாதிரி விஷயங்களைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்தில் வீட்டைக் கட்டி முடிக்கவில்லை என்றால் இப்போதுள்ள வீட்டிற்கான வாடகையை அவர்கள் தர வேண்டும் எனப் பொறுப்பேற்கும்படி ஒப்பந்தத்திலேயே குறிப்பிட வேண்டும்.

கட்டுமான நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை மீறும் பட்சத்தில் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்தில் புகார் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்களின் கூட்டமைப்பான கிரடெய்யின் உறுப்பினராக இருக்கும்பட்சத்தில் அங்கு இந்த நிறுவனத்தைப் பற்றிப் புகார் தெரிவிக்கலாம். பொதுவாக அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கும் முன் அந்நிறுவனத்தைப் பற்றித் தெளிவாக விசாரித்து வாங்குவதும் உத்தமம்.

கிரெடாய் நுகர்வோர்
குறைதீர்க்கும் அமைப்பு
தொடர்புக்கு 1800-11-4000.
www.credaichennai.in.

Leave a Reply