shadow

sagayamகனிமவள முறைகேடு விசாரணையை நீதிமன்ற உத்தரவின்படி விசாரணை செய்து வரும் தனி அதிகாரி உ.சகாயத்துக்கு நேற்று மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளதாகவும் இதுதொடர்பாக மதுரை தல்லாகுளம் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை செய்ய சகாயத்தை, சட்ட ஆணையராக சென்னை ஐகோர்ட் நியமித்தது. இரண்டாம் கட்ட ஆய்வுப் பணியை அவர் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கினார்.

இந்த நிலையில், அவரது அலுவலகத்துக்கு வந்த கடிதம் ஒன்றில், கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இக் கடிதத்தை ஈரோடு மாவட்டம், கொடுமுடியைச் சேர்ந்த குமார் என்பவர் எழுதியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:

எனது உறவினர்கள் கிரானைட் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தவோ, அவர்களுக்கு இடையூறு செய்யவோ கூடாது. உடனடியாக மதுரையை விட்டு வெளியேற வேண்டும். இல்லையெனில் உயிருடன் திரும்ப முடியாது. இதையும் மீறி விசாரணை நடத்தினால் கல்குவாரிக்குள் சமாதி ஆக்கிவிடுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அக்கடிதத்தில், தனது மனைவி பிரேமராணி ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளராகப் பணியாற்றுவதாகவும் அவருக்கு பதவி உயர்வு, சேலத்துக்கு இடமாறுதல் பெற உதவி செய்ய வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மிரட்டல் கடிதத்திலேயே உதவியும் கோரியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூரிடம், சகாயம் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகரக் காவல் ஆணையரிடம் கேட்டதற்கு, மேற்படி மிரட்டல் கடிதம் குறித்த புகார் பெறப்பட்டுள்ளது. அப்புகாரை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தல்லாகுளம் போலீஸாருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.

போலீஸாரின் விசாரணையில், ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் குமாரும், அவரது மனைவி பிரேமராணி உதவி செயற்பொறியாளராக இருப்பதும் தெரியவந்துள்ளது. அவர்களுக்கும் இந்த கடிதத்துக்கும் தொடர்பு உள்ளதா எனப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply