shadow

ஏ.ஆர்.ரஹ்மான் தாய் மதமான இந்து மதத்திற்கு திரும்ப வேண்டும். வி.எ.ச்பி அழைப்பு
a.r.rahman
சமீபத்தில் ஈரான் படம் ஒன்றிற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முஸ்லீம் அமைப்பு ஒன்று ஃபத்வா கொடுத்ததும், அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் கொடுத்ததையும் அனைவரும் அறிவர். இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான், மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பினால் அவரை வரவேற்க தயாராக இருப்பதாக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு கூறியுள்ளது.

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் இணை பொதுச் செயலர் சுரேந்திர ஜெயின் இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, “ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிரான ஃபத்வா அறிவிப்பு துரதிர்ஷ்டவசமானது, இதைவிடவும் துரதிர்ஷ்டவசமானது அதில் உள்ள பழிதீர்ப்பு மொழி.. அவர் அந்தப் படத்துக்கு இசை அமைத்திருப்பது மதம் தொடர்பானது அல்ல.

எனவே, நான் ரஹ்மானிடம் முறையிடுவது என்னவெனில், அவர் திரும்ப வேண்டும், கர்-வாப்ஸி செய்ய வேண்டும். இந்து சமூகம் தனது புதல்வனின் வருகைக்காக காத்திருக்கிறது. நீட்டிய கைகளுடன் அவரை வரவேற்கிறோம் என்பதுடன் எவ்வளவு பத்வாக்கள் அவருக்கு எதிராக அறிவிக்கப்பட்டாலும் அவருக்கு எந்த வித தீங்கும் ஏற்படாது என்பதையும் உறுதி செய்கிறோம்” என்று கூறியுள்ளார். இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் அரபு நாடுகளில் வெளியான இரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் ‘முகம்மது: மெசஞ்சர் ஆஃப் காட்’ என்ற திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் இஸ்லாமிய மக்களின் மனதை புண்படுத்துவதாகக் கூறி, மும்பையைச் சேர்ந்த ராஸா அமைப்பு, அந்தப் படத்தின் இயக்குநர், இசையமைப்பாளர் உட்பட பலருக்கு எதிராக ஃபத்வா விதித்தது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான், “நன்னம்பிக்கையில்தான் இசையமைத்தேன்” என்று பதில் ஏற்கனவே பதில் அளித்துள்ளார். இந்த பிரச்சனையை தீவிரமாக பொதுமக்கள் விமர்சித்து வரும் நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ‘தாய்மதத்துக்கு திரும்புவதற்கான நேரம் இதுவே’ அதாவது அவரது ‘கர்-வாப்ஸி’க்கு உகந்த நேரம் இதுவே என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply