அமெரிக்க ராணுவத்தில்  ‘‘ யு.எஸ். சோல்ஜர் ரிசர்ச் டெலவப்மெண்ட், இன்ஜினியரிங் சென்டர்’’ என்ற ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் பணியாற்றும் மூத்த விஞ்ஞானி தாவுரங் என்பவர் புதிய வகை துணி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு 5 செட் யூனிபார்ம் வழங்கப்படுகிறது. காடு, மலை, மேடு என்று பணியாற்றும் ராணுவ வீரர்கள் தங்கள் உடுப்புகளை பணியிடங்களில் துவைத்துக் கொள்ள வசதிகள் இருப்பதில்லை. இதனால் பல வீரர்கள் அழுக்குத் துணியோடு இருக்க வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது. இதையடுத்து ராணுவ வீரர்களுக்கு துவைக்க வேண்டிய அவசியம் இல்லாத துணியை கண்டறிந்தால் என்ன என்ற சிந்தனை தாவுரங்குக்கு ஏற்பட்டது. அதன் வெளிப்பாடுதான் துவைக்காத துணி.

இவர் கண்டறிந்துள்ள இந்த புதிய வகை துணியில் ‘‘ஓம்னி போபிக் கோட்டிங்’’ என்ற வகை ரசாயன பூச்சு கலந்து நெய்யப்பட்டுள்ளது. இந்த பூச்சு பூசப்பட்ட துணியில் தயாரிக்கப்பட்ட ராணுவ சீருடையை எத்தனை நாட்களுக்கு பயன்படுத்தினாலும் அழுக்கு ஆகாது. மேலும் கிரீஸ், சேறு போன்ற கறைகள் பட்டாலும், சீருடையை கழட்டி உதறினால் அதுவும் போய்விடும். அதே போல உடம்பில் எந்த மட்டமான துர்நாற்றம் இருந்தாலும் அதுவும் சீருடையில் காட்டாது. சீருடை நறுமணத்தோடு இருக்கும்.

புதிய வகை துணி குறித்து தாவுரங் கூறியதாவது: போர்க்கள முனையில் இருக்கும் எங்கள் வீரர்களுக்கு முகாம் அலுவலகங்களில் துணி துவைப்பதற்காக இயந்திர வசதிகள் உள்ளன. ஆனால் எல்லைகளில் பணியாற்றும் வீரர்கள் துணி துவைப்பதற்காக வர இயலாது. ராணுவப்பணி என்பது மிகவும் கடுமையானது. அவர்கள் இங்கு வந்து செல்வதை தவிர்க்கும் வகையில் புதிய ரக துணி கண்டறியப்பட்டுள்ளது.

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ரசாயன கலவையால் உடல் நலத்துக்கு எவ்வித பிரச்னையும் வராது. புதிய ரக துணியில் தைக்கப்பட்ட சீருடைகள் கான்சாஸ் மாகாணம் போர்ட் ரெய்லி என்ற பணியிடத்தில் உள்ள வீரர்களுக்கு சோதனை முறையில் கொடுத்து அணிவித்தோம். எவ்வித பிரச்னையும் இல்லை. இந்த துணியானது தனக்குத்தானே சுத்தம் செய்து கொள்ளும் வகையில் அதாவது கழட்டி உதறினால், துவைத்தது போன்ற புத்துணர்வோடு சீருடை காணப்படும் என்றார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *