shadow

1

வங்கி ஊழியராக நல்ல சம்பளத்தில் பணிபுரிந்த அவர், வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் பல இடங்களுக்குப் பயணிக்கத் தொடங்கினார். சாலை விபத்தில் தங்கள் உற்றார் உறவினர்களை இழந்த குடும்பத்தினர் பலரைத் தேடிச் சந்தித்துப் பேசத் தொடங்கினார். காவல்துறை அதிகாரிகள், சட்ட நிபுணர்கள் எனப் பலரோடு கலந்துரையாடினார். “ஏன் சாலை விபத்துக்குள்ளானவர்களைக் காப்பாற்றப் பொதுமக்கள் முன்வருவதில்லை?’ என்பதை அறிந்துகொள்ள முயன்றேன்” என்கிறார் சேவ் லைஃப் ஃபவுண் டேஷன் தலைவர் பியுஷ் திவாரி. அவருக்கு ஏன் இதில் திடீர் ஈடுபாடு?

“என் சகோதரன் பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தான். அவன் சாலையைக் கடக்க முயன்றபோது வேகமாக வந்த வாகனம் கண்மூடித்தனமாக இடித்துவிட்டுச் சென்றது. அவன் உடல் முழுவதும் காயம். ரத்த வெள்ளத்தில் கிடந்தாலும் தானே வீதியின் மறுமுனைக்கு ஊர்ந்து சென்றான். இது நடந்தது பிற்பகல் 3:45 மணிக்கு. மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் நேரம்தான். கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் தன்னைக் கடந்து சென்ற ஒவ்வொருவரிடமும் உதவி கேட்டும்கூட, யாரும் அவனைக் காப்பாற்ற முன் வரவில்லை. என் 16 வயது சகோதரன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இதுபோன்ற சாலை விபத்துகளில் என் குடும்ப உறுப்பினர்கள் மூன்று பேரை ஒரே வருடத்தில் இழந்தேன். அதன் பின் வாழ்க்கை குறித்த என் பார்வை மாறியது” என்கிறார் பியுஷ்.

சொந்த வாழ்வில் நிகழ்ந்த இத்தகைய கொடூரமான சம்பவங்கள்தான் சாலை விபத்தில் சிக்கிய உயிர்களைக் காப்பாற்ற ‘சேவ் லைஃப் பவுண்டேஷன்’ அமைப்பைத் தொடங்க அவருக்குக் காரணமாக இருந்தது.

அதிர்ச்சித் தகவல்

2013 தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகப் பதிவுகளின்படி இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒருவர் சாலை விபத்தில் பலியாகிறார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 12 லட்சம் பேர் சாலை விபத்துகளில் கொல்லப் பட்டிருக்கிறார்கள். விபத்தில் சிக்கியவர்களைக் கடந்து செல்லும் வழிப்போக்கர்கள் முதலுதவி வழங்க முன்வந்தால், 50 சதவீத சாலை விபத்து மரணங்களைத் தடுக்க முடியும் என்கிறது இந்திய சட்ட கமிஷன்.

எங்கே போனது மனிதம்?

விபத்தில் சிக்கியவரைக் காப்பாற்ற முயன்று, அதனால் நமக்கு சட்ட சிக்கல் வந்துவிடுமோ என்ற பயத்தால் விபத்துக்குள்ளானவர்களைப் பொதுமக்கள் காப்பாற்ற முன்வருவதில்லை. உயிர்களைக் காப்பாற்றுவதற்குப் பொறுப்புடைமை கொண்ட மருத்துவர்கள்கூட, விபத்துக்குள்ளானவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கத் தயங்கு வதும் சட்டத்துக்குப் பயந்துதான்.

மக்கள் சக்தி

இந்த நிலையை மாற்ற, சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு சமர்ப்பித்தார் பியுஷ். கடுமையான சாலைப் பாதுகாப்புச் சட்டங்களை நடைமுறைப்படுத்தும்படியும், ஆபத்பாந்தவன்களைச் சட்ட ரீதியாக ஆதரிக்கக் கோரியும் இந்தியா முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி ஒரு லட்சத்து எண்பதாயிரம் பேரின் கையெழுத்துடன் கூடிய மனுவை பிரதமரிடம் அவர் சமர்ப்பித்துள்ளார்.

சாலை உள்கட்டமைப்பில் மாற்றம் கொண்டுவருவதில் தொடங்கி விபத்துக்குள்ளானவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் முறை, சாலை விதிகளைப் பின்பற்றும் முறை, சட்டத்தை அமல்படுத்தும் விதம் என, இதற்கான தீர்வைப் பல அடுக்குகளில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிறார் பியுஷ்.

கை கொடுக்கும் கை

சாலை விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றும் நல் உள்ளம் படைத்தவர்களைப் பாதுகாக்கும் சட்டம் அமலானால், பின்வருபவை சாத்தியமாகும்:

1. ஆபத்பாந்தவன்களுக்குச் சட்டரீதியாக உதவியும் ஊக்கமும் அளிக்கப்படும்.

2. விபத்தில் சிக்கியவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுவார்கள்.

3. காவல்துறை, நீதிமன்றம் துரிதமாகச் செயல்படும்.

4. காப்பாற்றுபவர்களுக்குச் சிக்கல் ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது சட்டம் கடும் நடவடிக்கை எடுக்கும்.

5. விபத்துக்குள்ளானவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கும்படி மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்படும்.

6. ஆபத்பாந்தவன்கள் சரியாக அடையாளம் காணப்பட்டுக் கொண்டாடப்படுவார்கள்.

சமூக மாற்றத்துக்காகத் தான் எழுப்பும் குரல் பொதுமக்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு என அனைவரையும் எட்டும்படி செய்துவருகிறார் பியுஷ் திவாரி. தன்னைப் போலப் பிறரது உயிரையும் நேசிக்கக் கற்றுக் கொண்டிருக்கும் இவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன.

Leave a Reply