shadow

காபூல் நாட்டில் இரட்டை வெடிகுண்டு: 25 பேர் பரிதாப பலி

ஆப்கானிஸ்தானின் நேட்டோ படையின் தலைமை அலுவலகம் மற்றும் அயல்நாடுகளின் தூதரகங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டிடங்கள் அமைந்துள்ள காபூலின் மத்திய பகுதியில் உள்ள ‌ஷஷ் தாராக் நகரில் இரட்டை மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ஊரக வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சகத்துக்கு சொந்தமான கட்டிடத்தின் முன்பு திரண்டு இருந்த மக்களை குறிவைத்து பயங்கரவாதி தன் உடலில் வைத்து இருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். குண்டுவெடிப்பில் சிக்கி 5 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். குண்டுவெடிப்பு குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார், பாதுகாப்புபடை வீரர்கள் மற்றும் மீட்புபடையினர் விரைந்து வந்து தீவிர மீட்புபணியில் ஈடுபட்டனர்.

மேலும் தாக்குதல் குறித்து தகவல் சேகரிப்பதற்காக ஏராளமான பத்திரிகையாளர்களும், குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதியை படம் பிடிக்க புகைப்பட கலைஞர்களும் அங்கு விரைந்தனர். மீட்பு பணிகளை பார்வையிடுவதற்காக அதிகாரிகளும் விரைந்தனர். மீட்பு குழுவினர் படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த போது மற்றொரு பயங்கரவாதி தன்னுடைய உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டை வெடிக்கச்செய்தான்.

பத்திரிகையாளர் எனக்கூறிக்கொண்டு வந்த பயங்கரவாதி வெடிகுண்டுகளை வெடிக்கசெய்து தாக்குதலை முன்னெடுத்தான். இதில் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்தின் தலைமை புகைப்பட கலைஞர் ஷா மராய் உள்பட 8 பத்திரிகையாளர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது. அடுத்தடுத்து நடந்த இந்த 2 குண்டுவெடிப்பு சம்பவங்களில் 49 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்று உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கொடூரமான தாக்குதல்களை முன்னெடுத்து வரும் நிலையில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பும் தாக்குதலை முன்னெடுப்பது பாதுகாப்பு படையினருக்கு சவாலாக அமைந்து உள்ளது.

ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்தின் தலைமை புகைப்பட கலைஞர் ஷா மராய் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் மற்றும் தைரியமான பத்திரிகையாளராவார். போரில் பாதிக்கப்பட்டு இருக்கும் ஆப்கானிஸ்தானில் முக்கிய செய்திகளை வெளியே கொண்டுவருவதில் தைரியமாக செயல்பட்டவர். உயிரிழப்பதற்கு முன்னதாக தன்னுடன் பணிபுரியும் மற்றொரு செய்தியாளருக்கு தகவலை அனுப்பி உள்ளார். வீடியோ எடுக்கும் பத்திரிக்கையாளர் டிராப்பிக்கில் சிக்கிக்கொண்டு உள்ளார். அவருக்கு தகவல் அனுப்பி உள்ள ஷா மராய், “கவலைப்பட வேண்டாம், நான் இங்கே உள்ளேன்,” என்று பதில் கொடுத்து உள்ளார். சம்பவத்தை வீடியோ எடுப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார். ஆப்கானிஸ்தானில் எண்ணமுடியாத வன்முறையில் கூட சிறப்பான புகைப்பட கலைஞராக, தைரியத்துடன் பணியாற்றியவர் ஷா மராய்.

Leave a Reply